டணாய்க்கன் கோட்டையின் சிறப்புகள்...

டணாய்க்கன் கோட்டையின் சிறப்புகள்...

டணாய்க்கன்கோட்டை- பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அந்தப் பகுதி கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்த ஹொய்சாலர்களின் கீழ் இருந்தது. மூன்றாம் நரசிம்மன் கி.பி. 1263-92-ஆம் ஆண்டு வரை சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்கு உள்பட்ட குண்டல்பேட்டை தெறக்கனாம்பிகை என்ற பகுதியை ஆட்சி செய்தார்.

இவருக்குத் தளபதியாக இருந்த பெருமாள்தண்ட நாய்க்கனின் மாதப்பதண்ட நாய்க்கன், கேத்தையதண்ட நாய்க்கன் என்ற இரு மகன்களிடம் பவானிசாகர் பகுதியை மூன்றாம் நரசிம்மன் ஒப்படைத்திருந்தார். அப்போதுதான் மாதப்பதண்ட நாய்க்கர் கட்டிய கோட்டை "தண்டனாய்க்கன்கோட்டை' என அழைக்கப்பட்டது. இது மருவி "டணாய்க்கன்கோட்டை' என அழைக்கப்பட்டது.

இந்தக் கோட்டையானது கி.பி. 1291-1342 காலகட்டத்தில் மைசூரையும், கொங்கு மண்டலத்தையும் இணைக்கும் முக்கிய ராணுவப் படைத்தளமாகச் செயல்பட்டது. திருமலை நாயக்கர் காலத்தில் (1523-59) சாமராச உடையார் (1617- 37 ) தனது தளவாய் மல்லராசையாவை அனுப்பி டணாய்க்கன்கோட்டையைக் கைப்பற்றினார்.

இந்தக் கோட்டையை கும்பனியார் நடத்திய போரில், பிளாய்ட் என்பவன் அழித்தான். மீதமிருந்த பகுதி பவானிசாகர் அணை கட்டும்போது அதன் நீர்த் தேக்கத்தில் மூழ்கி விட்டது.

பவானி சாகர் அணையின் நீர்மட்டம் நாற்பது அடியை நெருங்கும்போது, அணையின் உள்ளே முன்னால் இருந்த "டணாய்க்கன்கோட்டை' திப்புசுல்தானின் ஆயுதக் கிடங்கு, சிவன் கோயில் வெளியே தெரிவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு முற்கால வரலாறு பற்றி அறியும் வாய்ப்பாக உள்ளது. அணையின் உள்ளே வடவள்ளி, குய்யனூர், பீர்கடவு, பட்ரமங்கலம் போன்ற ஊர்கள் இருந்தன.

பவானிசாகர் அணை கட்டப்பட்ட தொடக்கக் காலத்தில் மேற்கண்ட பகுதிகளில் இருந்த மக்கள் பன்னாரி, அதன் சுற்றியுள்ள இடங்களில் குடி அமர்த்தப்பட்டனர். தற்போது அந்த ஊர்கள் புது வடவள்ளி , புதுப்பீர்கடவு , புதுக்குய்யனூர் என அழைக்கப்படுகின்றன.

திப்பு சுல்தானின் மரணத்துக்குப் பின்னர் (1799) ஆங்கிலேயருக்குக் கிடைத்த பகுதிகளில் தணாய்க்கன்கோட்டை பகுதியும் ஒன்றாகும். அப்போது தற்கால நீலகிரி மாவட்டமானது தணாய்க்கன்கோட்டை வட்டத்தில் 1830} வரை இருந்தது .

நீர்த் தேக்கத்தில் இருந்த டணாய்க்கன் கோட்டை , மாதவராய பெருமாள், கோமேஸ்வரர் கோயில், பீரங்கித் திட்டு முதலானவை நீரில் மூழ்கின. சுவாமி சிலைகளை கீழ்பவானி ஆற்றின் கரையில் கோயில் கட்டி 1953} ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போதுபோல் பாதைகள் அப்போது கிடையாது. மைசூரிலிருந்து கோயம்புத்தூர் செல்ல டணாய்க்கன்கோட்டை வழியாக புளியம்பட்டி, அவிநாசி , கோவை வழியாகத்தான் இருந்தது. தற்போது ஆசனூர், பன்னாரி, சத்தியமங்கலம், அவிநாசி , கோவை உள்ளிட்டவை ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பகுதிகளாகும்.

அறச்சலூர், ஈரோடு, சிவகிரி, கத்தாங்கண்ணி, பாப்பினி, பட்டிலூர் ஆகிய இடங்களில் போசள வீரவல்லாளன் கல்வெட்டுகள் மட்டும் காணப்படுகின்றன. அறச்சலூர் கல்வெட்டு ஒன்று கீழிருந்து மேல் நோக்கிப் படிக்கும் அரிய நிலையில் உள்ளது. ஈரோட்டு கல்வெட்டில் பூந்துறை நாட்டார் வெள்ளோட்டில் கூடி திண்டல் கிராமத்தை ஈரோடு சிவன் கோயிலுக்கு கொடையாக அளித்த செய்தி உள்ளது.

கத்தாங்கண்ணிக் கல்வெட்டில் திருவாதிரை போன்ற விழாக்கள் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. போசளத் தண்டநாயக்கன் பாப்பினிக்கு "கொங்கனமாரி மாதவ நல்லூர்' என்று பெயரிட்டு, டணாயக்கன்கோட்டை மாதவப்பெருமாள் கோயிலுக்கு அந்த ஊரை கொடையாக அளிக்கச் செய்துள்ள செய்தி சொல்லப்படுகிறது.

பவானிசாகர் அணையின் சிறப்புகள்: தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்ற பெருமையைக் கொண்டது பவானிசாகர் அணை. நீலகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும் , கூடலூர் மலையிலிருந்து தெங்குமரஹடா வழியாக வரும் மோயாரும் பவானிசாகர் அணைக்கு வந்து ஈரோடு மாவட்டத்தின் பெரும்பகுதி நீர்த் தேவையைப் போக்குகிறது. அணையின் நீர்மட்டக் கொள்ளளவு நூற்றி ஐம்பது அடியாகும். கீழ்பவானி , தடப்பள்ளி, அரக்கன் கோட்டை , காளிங்கராயன் வாய்க்கால் மூலம் ஈரோடு , கரூர் , திருப்பூர் மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.

- புலவர் முத்துரத்தினம், சத்தியமங்கலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com