
'ழ'கரம் பழக
அழகுப் பாடல்
ஒன்று பாடுவோம்!- இதை
என்றும் பாடுவோம்!
-
அழகழகுக் குழலிதான்
பழகுமுண்ண எழுந்தாளாம்!
பழக்கூடை ஒன்றினையே
குழலியுமே கண்டாளாம்!
-
மழமழப்புத் தரைநடந்து
பழமெடுக்க விரைந்தாளாம்!
அழகுக்கை நீட்டியவள்
பழக்கூடை இழுத்தாளாம்!
-
பழமெல்லாம் கவிழ்ந்ததுவாம்
குழலியுமே விழுந்தாளாம்
விழுந்ததாலே குழலியுமே
விழிவழிய அழுதாளாம்!
-
அழுகையொலி கேட்டதாலே
அம்மாவும் வந்தாளாம்!
அழுகையை நிறுத்திவிட்டுக்
குழலியுமே சிரித்தாளாம்!
-
'ழ' உச்சரிப்பும் சரியாகும்
இதனைத் தினம் பாடிடவே!
மெச்சுமுனை முத்தமிழும்
மேன்மைகளும் மலர்ந்திடுமே!
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.