
காகிதத்தில் ஒருவர் எழுதும்போது பென்சிலின் கரித்துண்டான கிராபைட் மூலக்கூறுகள் இணைப்பு பெறுவதால், அவற்றையே எழுத்துகளாகக் காண்கிறோம். ரப்பர் இந்த இணைப்பை நீக்கும் பணியை செய்கிறது. எழுத்துகளை உண்மையில் காகிதத்தைவிட ரப்பருடன் கிராபைட் மூலக்கூறுகள் அதிகமாக ஈர்க்கப்பட்டு ஒட்டிக் கொள்வதால்தான் ரப்பரால் அழிக்கப்படுகின்றன. அவை அழுக்கு போல திரண்டு, காகிதத்தைவிட்டு அகலுகின்றன.
ஜப்பானில் பல பகுதிகளில் உள்ள கட்டடங்கள் கருமை நிற மரப்பலகைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும். அந்த மரப் பலகை தீயில் எரிந்த நிலையில் காட்சி அளிக்கும். இது பாரம்பரியக் கட்டுமான முறையாகும். 'ஷோசுகிபான்' என்று அழைக்கப்படும் இந்தக் கட்டடக் கலை நீடித்து உழைக்கும் கட்டுமான யுக்தியை உள்ளடக்கியது.
மரக்கட்டையை எரித்து அதனை வலுப்படுத்துவதோடு, அழகியல் அம்சம் கொண்ட கட்டடக் கலையாகவும் மாற்றிவிடுகிறது. எதிர்பாராதவிதத்தில் ஏற்படும் தீ விபத்து, வீட்டுக்குள் பூச்சிகள் படையெடுப்பு காலநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளும் ஆற்றலோடு இந்தக் கட்டுமானம் அமைக்கப்படுகிறது.
ராஜஸ்தானில் உள்ள சந்த்பவுறி எனும் இடத்தில் உலகில் மிக ஆழமான, அழகான படிக்கட்டு கிணறுகளில் ஒன்றுள்ளது. இது ஜெய்ப்பூரில் இருந்து 95 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது 1,200 ஆண்டு பழமையானது. 100 அடி ஆழம் கொண்ட இந்தக் கிணற்றில் 13 மாடிகள், 3,500 படிக்கட்டுகள் உள்ளன. கடுமையான வறட்சிக் காலத்திலும் நீரை சேமித்து வைப்பதற்காகவே இந்தக் கிணறு கட்டப்பட்டுள்ளது.
ஆமைகள் இயற்கையாகவே வெளிச்சம் நோக்கிச் செல்லக் கூடியவை. எனவே அவை கடலை நோக்கிச் செல்கின்றன. ஏனெனில், இயற்கையைப் பொறுத்தமட்டில் கடல்பகுதியே வெளிச்சமானது. நிலா, நட்சத்திரங்கள் மூலம் வெளிப்படும் ஒளி கடல் நீரில் எதிரொலித்துவெளிச்சமாகிறது.
நாட்டில் அதிகமான குகைகள் உள்ள ரயில் பாதை கொல்கத்தாவில் இருந்து சிம்லாவுக்குச் செல்லும் வழித்தடமாகும். இந்தப் பாதையில் நூற்றுக்கும் மேற்பட்ட குகைகள் குறுக்கிடுகின்றன.
தென்கொரியாவின் மெட்ரோ ரயில்களில் சிறிய நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. மெட்ரோ பயணத்தின்போது, படிக்க ஆசைப்படுபவர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தலாம். இறங்கும்போது நூல்களைப் பத்திரமாகத் திரும்ப அளித்துவிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.