செஸ் ஆட்டத்தில் தனது வயதுக்கு மேற்பட்ட திறமையை வெளிப்படுத்தியுள்ளார், சர்வக்யா சிங் குஷ்வாஹா.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றரை வயதான சர்வக்யா, 'எஃப்.ஐ.டி.இ.' தர வரிசையில் அனுபவம் மிக்க ஆட்டக்காரர் ஈட்டும் மதிப்பெண்களைப் பெற்றிருக்கும் இளைய வீரராக மாறியுள்ளார்.
நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன் சர்வக்யாவைப் புகழ்ந்துள்ளது. சர்வதேச செஸ் ஆட்டத்தின் தர நிர்ணய அமைப்பான 'எஃப்.ஐ.டி.இ.' - யின் 1572 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன், சாதனைப் புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்துள்ளார், சர்வக்யா.
மாவட்ட சதுரங்கப் போட்டிகளிலிருந்து உலகளாவிய மதிப்பீடு வரை சர்வக்யாவின் பயணம் ஒரு சாதனைப் பயணமாக அமைந்துள்ளது. உள்ளூர் சதுரங்கப் போட்டிகளில் தொடங்கி, சர்வதேசப் போட்டிகளிலும் சர்வக்யா பிரகாசித்துள்ளார்.
சர்வக்யாவின் ஆன்லைன் மதிப்பீடு பதிவு செய்யத் தொடங்கியது, அவருக்கு இரண்டரை வயது ஆனபோதுதான். இப்போது சர்வக்யாவுக்கு வயது நான்கு ஆகப் போகிறது. சர்வக்யாவின் விரைவான செஸ் தர மதிப்பீடு 1572 ஆக இருப்பதற்குக் காரணம், 30 வயது 'எஃப்.ஐ.டி.இ.' -மதிப்பீடு பெற்ற வீரரை அவர் தோற்கடித்ததுதான்!
சர்வக்யாவின் தாயார் நேஹா சிங் குஷ்வாஹா, மொபைல் திரைகளிலிருந்து மகனை விலக்கி வைக்க டேக்வாண்டோ அகாதெமியில் சேர்த்துள்ளார். ஆனால் சர்வக்யாவோ பக்கத்தில் உள்ள சதுரங்க அகாதெமியில் அலைந்து திரிந்து, செஸ் ஆடுவதில் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். சர்வக்யா செஸ் ஆட்ட விதிகளை அருமையாக உள்வாங்கிக் கொண்டு பயிற்சியாளரைத் திகைக்க வைத்தார்.
சர்வக்யாவின் முதல் மதிப்பீடு 1572 என்பது குறைந்தபட்ச மதிப்பீட்டான 1,400 யைவிட அதிகமாகும். சர்வக்யா எட்டு மதிப்பிடப்பட்ட போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சர்வக்யா 22 வயதான அபிஜீத் அவஸ்தி (மதிப்பீடு 1542), 29 வயதான சுபம் செளராசியா (1559) மற்றும் 20 வயதான யோகேஷ் நாம்தேவ்வுடன் (1696) விளையாடி வெற்றி பெற்றுள்ளார்.
2024 நவம்பரில் மூன்று வயது, எட்டு மாதங்கள் மற்றும் 19 நாட்கள் வயதான இன்னொரு இந்திய குழந்தையான அனிஷ் சர்க்கார் ஏற்படுத்திய சாதனையை சர்வக்யா முறியடித்துள்ளார். சிறிய வயது திறமைக்கு ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.