

சிறிசுகள் முதல் பெரிசுகள் வரை வாயில் போட்டு மென்று ஆனந்தம் அடைவது ஒன்று உண்டென்றால், அது சுவிங்கம்தான். பபுள்கம், சிக்லெட், பெல்லெட் கம் எனப் பல வடிவங்களில் உலா வரும் இவை, மேலை நாடுகளில் மிகவும் பிரபலம்.
இன்று நேற்றல்ல, கிரேக்க நாகரிகக் காலத்திலேயே மக்கள், 'மாஸ்டிக்' என்ற முந்திரி இனத்தைச் சேர்ந்த செடியிலிருந்து எடுக்கப்பட்ட, வெளிர் மஞ்சள் நிறமுள்ள பிசினை மெல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
புதிய கற்காலத்தில், ஊசியிலை மரவகையிலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு பிசின் வகைகள் உபயோகத்தில் இருந்தனவாம். ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையான 'கம்' ஒன்று, பல் தடயத்துடன் பின்லாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதலில் ரப்பருக்கு மாற்றுப் பொருளாகத்தான் மாஸ்டிக் பிசின் பரிசோதிக்கப்பட்டது. ஆனால், அம்முயற்சி தோல்வியடைய, அதிலிருந்து சுவிங்கம் தயாரிக்கப்பட்டது. 1848இல் ஜான் கர்டிஸ் என்பவரால் சுவிங்கம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. 1860இல் பல மாறுதல்களுடன் 'சிக்லெட்' வடிவில் வெளிவந்தது.
2008 ஆம் ஆண்டு, ரிக்லே நிறுவனம் அமெரிக்காவில் நடத்திய ஆய்வின் முடிவுகள் ஆராய்ச்சிக் கட்டுரையாக 'பயாலஜி 2009' கருத்தரங்கில் வைக்கப்பட்டது. அதன்படி, 'கம்' மெல்லுவதால் நன்மையே விளையும் என்றறியப்பட்டது.
சுமார் 120 மாணவர்களை சிக்லெட் மெல்லுபவர்கள், மெல்லாதவர்கள் என இரு வகையாகப் பிரித்தனர். வகுப்புத் தேர்வு முதலியவற்றில் அவர்களை ஈடுபடுத்தி ஆராய்ந்ததில், 'கம்' மெல்லுபவர்களின் திறமை, மற்றவர்களைவிட மூன்று சதவீதம் கூடியதாம்! அமெரிக்கப் பல் மருத்துவக் கழகம் கூறுவது இதுதான்.
சாப்பிட்ட இருபது நிமிடங்களுக்குப் பிறகு, சுவிங்கம்மை மெல்லுவதால், பற்களின் தேய்மானம் குறைகிறது. வாயில் ஊறும் உமிழ் நீர், கிருமிகளையும், வேண்டாத அமிலங்களையும் கரைத்துவிடுகிறது; பற்களைப் பாதுகாத்து, அமிலங்களால் ஏற்படும் வயிற்று வலியையும் போக்குகிறதாம்.
இதை மெல்லுவதால் உடல் ஒரு மணி நேரத்தில் 11 கலோரி திறனையே செலவழிப்பதால் உடலுக்கு நல்லதுதானாம். சாதாரணமாக இரு சாக்லேட் குக்கீஸ் சாப்பிடும் போது அதை ஜீரணிக்க 140 கலோரி தேவைப்படுகிறது. அதேசமயம் இரு சிக்லெட்டைச் சுவைக்கத் தேவைப்படுவது வெறும் 20 கலோரிதானாம்! சுமார் 120 கலோரி சேமிக்கிறீர்கள் என்பது பெரிய விஷயம்தானே!
மன அழுத்தத்தைக் குறைக்கவும், அதிக அளவில் மனதை ஒருமுனைப்படுத்தவும், ஞாபகச்சக்தியை மேம்படுத்தவும், பெரு முயற்சி தேவைப்படும் போது அதிகச் சக்தியைக் கொடுக்கக்கூடியதாகவும், புகைப் பழக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தவும் சுவிங்கம் உதவுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதை மெல்லும்போது தெரியாமல் முழுங்கிவிட்டால் பயப்படத் தேவையில்லை. உள்ளே ஒட்டிக்கொண்டுவிடாது. ஓரிரு நாளில் தானாகவே மலக்குடல் வழியே வெளியேறிவிடும் என்கிறார்கள்.
ஆனால், டாக்டர்கள் பெரிய நிறுவனங்கள் தங்கள் பொருள்களின் விற்பனையை அதிகரிக்கக் கையாளும் வியாபார உத்தியே இது என்று கூறுகிறார்கள். எது எப்படி இருந்தால் என்ன... வெற்றிலைக் குதப்புவது போல் சுவிங்கம் மெல்லுவதும் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.