/

கை வந்த கலை!

கலை, பெண்களுக்குக் கை வந்த கலையாக இருக்கிறது. அது மாக்கோலம் போடுவது, மருதாணிவைத்துக் கொள்வது, சமையல் முயற்சிகளில் இறங்குவது என்பதோடு நின்றுவிடுகிறது. பெண்கள் தங்களுடைய கைப்பக்குவங்களைப் பயனுள்ள பொழுது

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:24 am

லை, பெண்களுக்குக் கை வந்த கலையாக இருக்கிறது. அது மாக்கோலம் போடுவது, மருதாணிவைத்துக் கொள்வது, சமையல் முயற்சிகளில் இறங்குவது என்பதோடு நின்றுவிடுகிறது. பெண்கள் தங்களுடைய கைப்பக்குவங்களைப் பயனுள்ள பொழுதுபோக்காகவும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் தெரிந்து கொண்டால்...? பெண்களுக்குப் பலவித பயிற்சிகளையும் அளித்து, வியாபாரமும் செய்து கொண்டு வெற்றிகரமான பெண்மணியாகத் திகழ்கிறார் விருதுநகர் மாவட்டம் சிவகாசி என். பிரபாவதி.   அவரிடம் பேசினோம்...



பெண்களுக்கு என்னென்ன பயிற்சிகள் அளிக்கிறீர்கள்?

தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம், பென்சில் ஓவியம் உள்ளிட்ட பல ஓவியப் பயிற்சிகளும் ஃபர் துணியில் பொம்மை செய்வது உள்ளிட்டவை குறித்தும் கடந்த 15 ஆண்டுகளாகப் பயிற்சி அளித்து வருகிறேன். என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் பலர் தனியே பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்களில் பலர் ஓவியம் வரைந்தும், பொம்மைகள் செய்தும் வியாபாரம் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். நான் பயிற்சி அளிப்பதுடன், ஓவியம் மற்றும் பொம்மைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.

நீங்கள் ஓவியம் வரையவும் பொம்மைகள் தயாரிக்கவும் எங்கு கற்றுக் கொண்டீர்கள்?

திருமணத்துக்குப் பின்னர் பொழுதுபோக்காக ஃபர் துணியில் பொம்மைகள் செய்யக் கற்றுக்கொண்டேன். எனது கணவர் ஏ. நாகராஜா எனக்கு ஊக்கம் தந்ததால், பெங்களூர், மதுரை சென்று ஓவியம் வரையக் கற்றுக்கொண்டேன். பின்னர், நான் படித்ததைப் பிற பெண்களுக்கும் கற்றுக் கொடுத்தால், அந்தப் பெண்களுக்கும் நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்தில், பெண்களுக்குப் பயிற்சி அளிக்கத் துவங்கினேன்.

கற்றுக் கொள்ள வரும் பெண்களால் இதை ஒரு தொழிலாகச் செய்து பணம் ஈட்ட முடிகிறதா?

பெண்களுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், வெற்றிபெற வேண்டும் என்ற விடாமுயற்சியும் இருக்க வேண்டும். மேலும், குடும்பத்தினரும் ஊக்கம் அளிக்க வேண்டும். இவை இருந்தால் எந்தப் பெண்களாலும் ஜெயிக்க முடியும் என்பது எனது கருத்து. குறிப்பாக, ஒரு பெண்ணின் கணவர், தன்னுடைய மனைவியிடம் திறமை உள்ளது என்றால் அவரை ஊக்கப்படுத்த வேண்டும். இதனைச் செய்தால் பெண்களால் எதையும் சாதிக்கமுடியும்.



இங்கு பெண்கள் எவ்வளவு நாள் பயிற்சி பெற

வேண்டும்?

அவர்கள் எதனைப் படிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்களோ அதைப் பொறுத்துதான் பயிற்சியின் காலம் அமையும். போஸ்டர் கலரில் ஓவியம் வரைய பல மாதம் பயிற்சி பெற வேண்டும். பொம்மைகள் செய்ய ஒரு வார காலம் பயிற்சி பெற்றால் போதும். பெரும்பாலான பெண்கள் பொம்மைகள் செய்வதற்குப் பயிற்சி பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். பயிற்சி பெற்றவர்கள் பலர் வர்த்தக ரீதியில் பிறருக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர். பெரும்பாலான பெண்கள், தங்களது உறவினருக்குப் பரிசு கொடுக்க பொம்மைகளை தாமே தயாரிக்கின்றனர். இதில், அவர்களுக்கு மிகுந்த ஆத்ம திருப்தி ஏற்படுகிறது.

பொதுவாக எத்தகையவர்ளுக்குப் பயிற்சி அளித்துள்ளீர்கள்?

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கும் பெண்களுக்குப் பயிற்சி அளித்துள்ளேன். இதுவரை ஆயிரக்கணக்கான பெண்களுக்குப் பயிற்சி அளித்துள்ளேன். பல கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளேன். இதில், கல்லூரி மாணவிகள் மிகுந்த ஈடுபாடு காட்டுவது மனதுக்கு நிறைவாக உள்ளது.



உங்களிடம் உள்ள ஓவியங்களின் விலை என்ன?

| 150-லிருந்து 1,500 வரை உள்ளது. பொம்மைகளைப் பொருத்தவரை வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன்களை தயாரித்துக் கொடுக்கிறோம்.

உங்களது தனித்தன்மை என்ன?

பொதுவாக மற்றவர்கள் நாய் பொம்மை உள்ளிட்ட சில ரக பொம்மைகளை மட்டுமே தயாரிக்கப் பயிற்சி அளிப்பாளர்கள். நாங்கள் பை, மணி பர்ஸ், உள்ளிட்டவற்றைத் தயாரிக்க பயிற்சி அளிப்பது எங்களது சிறப்பாகும்.



இதற்கான மூலப்பொருள்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?

ஓவியங்களுக்கு மும்பை நிறுவனத்திடமிருந்தும், ஃபர் பொம்மைகளுக்குப் பெங்களூரிலிருந்தும் மூலப்பொருள்களை வாங்குகிறோம்.

இதில் முக்கியமானது என்னவென்றால், புதிது புதிதாக ஏதாவது அறிமுகம் ஆனாலும், நிறுவனத்தாரிடம் கேட்டு அது குறித்து தெரிந்துகொள்வேன். அதற்குரிய பொருள்களையும் அந்த நிறுவனத்தாரிடம் வாங்கிக் கொள்வேன்.

அரசு சார்ந்து உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

பயிற்சி பெற்ற பலர் ஓவியம் வரைய மூலப்பொருள்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, மாவட்ட அளவில் மிகப்பெரிய மூலப்பொருள்கள் விற்பனை மையத்தை துவங்கவேண்டும். மேலும் பலப் பெண்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்கள் வாழ்வில் முன்னேற ஒத்துழைப்புத்தர வேண்டும் என்பதே எனது கனவாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.