எதிராளி எந்தக் காயை நகர்த்துகிறார் எனக் கூர்ந்து கவனித்துத் தன் ராணியை நகர்த்திக் கொண்டிருந்தார் ஜான்ஸிராணி. இவர், விருதுநகர் மாவட்டம், சிவகாசி சி.எஸ்.ஐ. காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி.
பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டி 2010-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் நான்காம் தேதி வரை குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடைபெற்றது. அதில் சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் இரண்டாமிடம் பெற்று சர்வதேச அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இவரது வெற்றி குறித்தும், இப்பள்ளி குறித்தும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.பால்ராஜுவிடம் கேட்டபோது உற்சாகத்துடன் பதில் அளித்தார்.
""இந்தப் பள்ளியை சி.எஸ்.ஐ. மதுரை-முகவை திருமண்டலத்தினர் நிர்வாகம் செய்து வருகிறார்கள். உணவிற்காக அரசு ஒரு மாணவருக்கு மாதம் | 200 வழங்குகிறது. இங்கு 116 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பெரும்பாலோனோர் இங்கேயே தங்கிப்படிக்கிறார்கள். தங்குமிடம், உணவு, சீருடை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜான்ஸிராணி எங்கள் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் படித்து வருகிறார்.
4 முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செஸ் விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சனிக்கிழமை ராஜன் என்ற பயிற்சியாளர் இரண்டு மணி நேரம் பயிற்சி அளிக்கிறார். மேலும் தடகளம் உள்ளிட்ட பயிற்சி அளிக்க பள்ளிக்கு எனத் தனியே ஜ.அலெக்ஸ் சுந்தர்சிங் என்ற பயிற்சி ஆசிரியர் உள்ளார்.
நடனப் போட்டிகளிலும் ஜான்ஸி பரிசுகள் வாங்கியிருக்கிறாள். படிப்பில் வகுப்பில் நான்காவது ரேங்க் பெற்று வருகிறார். சிவகாசி காது கேளாதோர் சங்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் போட்டிகளுக்குச் சென்றுவரும் செலவுகளை ஏற்றுக்கொள்கிறது'' என்றார்.