குக்கிராமத்தில் இருந்து தலைநகர் வரை...!

பின்தங்கிய சமூகத்தில் இருந்து ஒரு தகுதி நிலையை அடைவது என்பது எளிதான விஷயமல்ல. அதுவும் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்வில் ஓர் உயரத்தை எட்டிப் பிடிப்பது பலரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இ
குக்கிராமத்தில் இருந்து தலைநகர் வரை...!
Published on
Updated on
2 min read

பின்தங்கிய சமூகத்தில் இருந்து ஒரு தகுதி நிலையை அடைவது என்பது எளிதான விஷயமல்ல. அதுவும் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்வில் ஓர் உயரத்தை எட்டிப் பிடிப்பது பலரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

இருப்பினும் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றிப் படிகளில் ஏறி நடைபோட முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்கள் பலர். அவர்களுள் ஒருவர் சாகித்ய அகாதெமியின் தில்லி தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் தமிழரான ஜா.பொன்னுதுரை. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி பெருங்காமநல்லூர் கிராமத்தில் பிறந்து, வாழ்வில் பல அனுபவங்களை எதிர்கொண்டு, சாகித்ய அகாதெமியில் பதிப்பு உதவியாளராகப் பணியைத் தொடங்கி சிறப்புத் தனி அலுவலர் தகுதிநிலையை அடைந்திருக்கிறார் இவர்.

தில்லி ரபீந்திரா பவன் அலுவலக அறையில் பரபரப்பான பணிகளில் ஈடுபட்டிருந்த அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை:

""மதுரை மாவட்டம், சேடபட்டி - தும்மக்குண்டு இடையே அமைந்துள்ள பெருங்காமநல்லூர் கிராமம்தான் எனது பூர்வீகம். நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு, பின்தங்கிய எங்கள் பகுதி கிராம மக்களுக்குக் கல்வியறிவை அளிப்பதற்காக சுவீடனைச் சேர்ந்த கிறிஸ்தவ மிஷன் அமைப்பினர் வந்திருந்தனர். அப்போது, உசிலம்பட்டியில் பள்ளியும், ஆசிரியப் பயிற்றுநர் மையத்தையும் அவர்கள் ஏற்படுத்தினர்.

கல்வியறிவில் பின்தங்கிய நிலையில் எங்கள் சமூகம்  இருந்தது. சமூகத்தின் சில சம்பிரதாயப் பழக்க,வழக்கங்களை விரும்பாத எனது தந்தை மாயாண்டியும் இன்னும் சிலரும் கிறிஸ்தவ மிஷன் நடத்திய பள்ளியில் சேர்ந்து பயின்றனர்.

அவர்கள் அளித்த கல்வியும், ஒழுக்கமும் என் தந்தையை ஈர்த்தது. அவர் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறினார். தனது பெயரையும் ஜான் வில்லியம்ஸ் என்று மாற்றிக் கொண்டார்.

10-ம் வகுப்புப் படித்த அவர், ஆசிரியர் பணியிலும் சேர்ந்தார். தாயார் ரஞ்சிதமும் ஆசிரியையாகப் பணியாற்றினார். எனது குடும்பத்தில் நானும், 6 சகோதர, சகோதரிகளும் மிகவும் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டோம்.  நான் 5-ம் வகுப்பு வரை குக்கிராமத்தில்தான் படித்தேன். அதன்பிறகு திருநகர் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தேன். பள்ளி விடுதியில் தங்கிப் படித்தபோது சத்தான உணவுகள்கூட கிடைக்காத நிலை இருந்தது.

பள்ளிப் படிப்புக்குப் பிறகு மதுரையில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் எடுத்துப் படித்தேன்.  ஓராண்டுக்குப் பிறகு  அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தேன்.

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் நடத்திய ஒரு பதிப்பகத்தில் பதிப்பக உதவியாளராகச் சேர்ந்தேன். குறைந்த ஊதியமாக இருந்தாலும்  இலக்கிய ஆர்வத்தால் அங்கு பணியில் சேர்ந்தேன்.

எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,  நீல.பத்மநாபன், சமுத்திரம், அசோகமித்திரன் ஆகியோரது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டோம். நண்பர் வட்டக் கருத்தரங்கமும் நடத்தியதன் மூலம் ஜெயகாந்தன், அசோகமித்திரன், நீல.பத்மநாபன் ஆகியோருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. 7 ஆண்டுகள் அங்கு பணியாற்றியபோது பதிப்புத் துறை தொடர்பான நுணுக்கமான விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.

1987-ம் ஆண்டில் எழுத்துத் தேர்வு எழுதி சாகித்திய அகாதெமியில் பதிப்பக உதவியாளர் பணியில் சேர்ந்து தில்லியில் எனது பணியைத் தொடங்கினேன்.

ஹிந்தி தெரியாத அச்சூழலில் ஆங்கிலம் எனக்குக் கைகொடுத்தது. சாகித்ய  அகாதெமியில் செய்தி மடல் தயாரிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. 1990-ல் ஆங்கிலப் பிரிவு பதிப்புத் தொடங்கியபோது குழந்தைகள் இலக்கியங்கள் பதிப்பு முதல் முதலாக தொடங்கப்பட்டு ஹிந்தி மொழியில் நூல்கள் வெளியிடப்பட்டன. இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் ஆலோசனைக் குழு பொறுப்புத் துறையையும், ஆங்கில மொழியின் பதிப்பகத் துறையையும் கவனித்தேன். சக ஊழியர்கள் ஒத்துழைப்பினால் பல ஆங்கில நூல்களைப் பதிப்பித்தோம்.

சாகித்ய அகாதெமியின் மேற்கத்திய மொழிகளுக்கான மும்பை பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றினேன்.

குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் பல இலக்கியக் கருத்தரங்கங்களை நடத்தியதன் மூலம் சிறந்த இலக்கிய எழுத்தாளர்கள் பலரையும் அறிந்துகொண்டேன். தமிழ்ப் புலவர்கள் பங்கேற்புடன் பன்மொழிக் கருத்தரங்கங்களும், கவியரங்கங்களும் நடத்தினோம்.

கடந்த ஆண்டு தென் மண்டலச் செயலராகப் பதவி உயர்வு பெற்று பெங்களூர் அலுவலகத்தில் பணியாற்றினேன். அப்போது, தென் இந்திய மொழிகளுக்காகப் பணியாற்றும் வாய்ப்பும், தாய்மொழியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் பேறும் கிடைத்தது. 

தற்போது, அகாதெமியின் தில்லித் தலைமை அலுவலகத்தில் சிறப்புப் பணி அலுவலராகப் (பதிப்பு) பணியாற்றி வருகிறேன். எழுத்தாளர் நீல.பத்மநாபனின் கதைகளையும், அண்ணாவின் கதைகளையும் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன். எழுத்தாளர் மேலாண்மைப் பொன்னுசாமியின் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறேன்.

திருக்குறள், இலக்கியச் சிற்பிகளின் வரிசையில் தமிழ் அறிஞர்களின் வரலாறு, கம்பர் வரலாறு ஆகியவை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

சாகித்ய அகாதெமியால் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலும் உள்ள ஆலோசனைக் குழுத் தலைவர்களின் சிறப்பான பணியின் மூலமும், ஊழியர்களின் ஒத்துழைப்பு மூலமும் இந்தியக் கலாசாரத்தை மொழி, இலக்கியம் மூலமாக பரப்பும் பணியைச் சாகித்ய அகாதெமி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

ஆங்கிலப் பள்ளி ஆசிரியையாக எனது மனைவி மார்கரெட் பணியாற்றுகிறார். பயோடெக்னாலஜி படிப்பில் புதிய படிப்பை படித்ததன் மூலம் ஜெர்மனியில் கல்வி உதவித் தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்பை எனது மகள் மேற்கொள்ள உள்ளார். மகன் இங்கிலாந்தில் பணியாற்றி வருகிறார். எனினும், நசுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து  உயிர்த்தெழுந்தாலும் இந்தப் பாரம்பரியத்தின் தொடர்பு எங்கேயும் அறுந்துவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக உள்ளேன்.

பலவித கலாசாரங்களின் மத்தியில் வாழ்ந்தாலும் தமிழ்க்  கலாசாரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு இந்தியக் கலாசாரத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பதுதான் என் எண்ணம். மேலும், பல தலைமுறைக்கும் இக் கலாசாரம் நீடிக்க வேண்டும் '' என்கிறார் பொன்னுதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.