/

வெற்றி நம் கையில்!

தமிழகத்தின் பண்டைய விளையாட்டுகளில் ஒன்றான சிலம்ப விளையாட்டு, தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. தமிழக கிராமத்து விளையாட்டுகளான கிளித் தட்டு, குஸ்தி உள்ளிட்ட பல விளையாட்டுகள் தற்போது விளையாடப

Updated On :26 செப்டம்பர் 2012, 7:31 am

தமிழகத்தின் பண்டைய விளையாட்டுகளில் ஒன்றான சிலம்ப விளையாட்டு, தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. தமிழக கிராமத்து விளையாட்டுகளான கிளித் தட்டு, குஸ்தி உள்ளிட்ட பல விளையாட்டுகள் தற்போது விளையாடப்படுவதில்லை. ஆனால், சிலம்பம், கபடி உள்ளிட்ட சில விளையாட்டுகள் இப்போதும் விளையாடப்பட்டு வருவது சந்தோஷத்துக்குரியது. அண்மையில் தேசிய அளவிலான போட்டியில் விளையாடி தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு வேதியல் துறை மாணவர்கள் சி. நாகராஜ், பி. மஹாராஜா.

தேசிய அளவிலான சிலம்பக் குழுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றது குறித்து கேட்டோம்:

எந்த வயதில் நீங்கள் சிலம்பம் விளையாடத் தொடங்கினீர்கள்?

நாங்கள் இருவரும் ராஜபாளையம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும்போது, செல்வராஜ் என்பரை குருவாகக் கொண்டு, சிலம்பம், வாள்வீச்சு, களரி, மல்யுத்தம் உள்ளிட்டக் கலைகளில் பயிற்சி பெறத் தொடங்கினோம்.

சிலம்பம் தற்காப்புக் கலையுடன் கூடிய விளையாட்டாக இருந்ததால், எங்களுக்கு அதன் மீது ஆர்வம் அதிகரித்தது. எங்கள் ஆர்வத்தை புரிந்துகொண்ட பயிற்சியாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் சிலம்ப விளையாட்டில் பயிற்சி அளிக்கத் தொடங்கினர்.

முதன்முதலில் எப்போது போட்டியில் கலந்து

கொண்டீர்கள்?

2004-ம் ஆண்டு விருதுநகர் மாவட்ட சிலம்பக் கழகம், விருதுநகரில் நடத்திய 11-12 வயது பிரிவினருக்கானப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாமிடம் பெற்றோம். பின்னர், 2006-ல் ராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில், கம்பு வீச்சு மற்றும் கம்பு சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றோம். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளோம்.

பல விளையாட்டுகள் இருக்கும்போது சிலம்பத்தைத் தேர்வு செய்தது ஏன்?

பயிற்சி பெறத் தொடங்கும்போது, எங்களை ஒரு கதாநாயகனாக கற்பனை செய்து கொண்டு பயிற்சி பெற்றோம். வித்தியாசமான இந்த விளையாட்டில் வெற்றி பெற்றால், பலரின் பார்வை நம் பக்கம் திரும்பும் என எண்ணினோம். பின்னர், படிப்படியாக முன்னேறி பல வெற்றிகளைப் பெற்றது மனதுக்கு நிறைவாக இருந்தது.

கிடைத்த பல வெற்றிகளால், தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், வேகமும் வளர்ந்தது. நம்மால் முடியும் என தொடக்கத்தில் நம்பிக்கை வைத்தோம். அந்த நம்பிக்கையை இன்றளவும் குறையாமல் வைத்திருக்கிறோம்.

இப்போது, கல்லூரியில் படித்தாலும், தினசரி காலையில் நாங்களே சிலம்பப் பயிற்சி எடுத்துக் கொள்வோம். தற்போது, இந்த சிலம்பக் கலையானது எங்களது நாடி, நரம்பு, ரத்தத்தில் கலந்துவிட்டது. இனி வெற்றி மட்டுமே குறிக்கோளாகும்.

தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது எப்படி?

பல மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால், பிப்ரவரி மாதம் கன்னியாகுமரியில் நடைபெற்ற போட்டித் தேர்வில் கலந்துகொண்டோம். அதில், சிறப்பாக விளையாடியதால், தமிழக அணியில் இடம் பெற்றோம்.

தேசிய அளவிலான போட்டியில் எந்தெந்த மாநில எணிகள் கலந்துகொண்டன?

தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பக் கழகம், கன்னியாகுமரியில் 8-வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டியை மார்ச் மாதம் நடத்தியது. இதில், மஹாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், உத்திரபிரதேசம், தமிழகத்திலிருந்து இரு அணிகள் ஆகியவை கலந்துகொண்டன. இதில், சீனியர் பிரிவில் தமிழ்நாட்டு அணியில் குழுப் போட்டியில் கலந்து கொண்ட 10 பேரில் நாங்கள் இருவரும் இடம் பெற்றிருந்தோம்.

இறுதிப் போட்டியில் எந்த அணியுடன் விளையாடினீர்கள்?

கர்நாடக அணியுடன் மோதினோம். அந்த அணி வலுவாக இருந்தது. எனினும், தமிழகத்துக்காக விளையாடுகிறோம் என்ற உணர்வு உற்சாகத்தை கொடுத்தது. ஒட்டுமொத்தக் குழுவும், கூட்டு முயற்சியில் விளையாடி தங்கப் பதக்கத்தைப் பெற்றோம். கடைசி சில நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது. எனினும், கவனத்தை சிதற விடாமல் வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணித்து வெற்றி பெற்றோம்.

இந்த வெற்றி மூலம் நாங்கள் இருவரும் இந்திய அணியில் இடம்பெற்றுவிட்டோம். விரைவில் ஆசிய அளவில் இலங்கையில் நடைபெற உள்ள சிலம்பப் போட்டியில் கலந்துகொள்ள, எங்களது பெயரை தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பக் கழகம் அறிவித்துள்ளது. இலங்கையில் போட்டி நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இலங்கைக்கு சென்று தங்கப்பதக்கம் பெற வேண்டும், என சபதம் எடுத்துள்ளோம் என்றனர்.

எதிர்காலத்தில் நாகராஜன் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும், மஹாராஜா சுகாதாரத் துறை அதிகாரியாகவும் வேண்டும் என்ற லட்சியம் கொண்டுள்ளனர். அவர்கள் எண்ணங்கள் ஈடேற வேண்டிக் கொள்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.