புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெற்றிக்குப் பின்னால்...

பளபளப்பான ஆடை இல்லை... கழுத்து நிறைய நகைகள் இல்லை... பார்ப்பதற்கு எளிமையான உருவம்... ஆனால் இவரது பாட்டு எந்த வயதினரையும் ஓர் இடத்தில்

News image
Updated On :15 டிசம்பர் 2013, 2:55 am

ஸ்ரீதேவி குமரேசன

பளபளப்பான ஆடை இல்லை... கழுத்து நிறைய நகைகள் இல்லை... பார்ப்பதற்கு எளிமையான உருவம்... ஆனால் இவரது பாட்டு எந்த வயதினரையும் ஓர் இடத்தில் அசையாமல் இருத்திவிடும்... வேடந்தாங்கல் சரணாலயத்தில் இருந்து சென்னைக்கு பறந்து வந்திருக்கும் கிராமிய கான குயில்... மகிழினி மணிமாறன் தான் கடந்து வந்த பாதையை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...

பல வெளிநாடுகளில் இருந்து பலவிதமான பறவைகள் வந்து கூடும் வேடந்தாங்கல் பக்கத்துல உள்ள வளையபுத்தூர் கிராமம் எனது ஊர். விவரம் தெரிந்த நாளாய் நாட்டுப்புற பாடல்கள் கேட்டு வளர்ந்தவள். சிறு வயதில் இருந்தே என் தாயின் தாலாட்டு எத்தனையோ நாள் எங்கள் பசியை மறக்கச் செய்திருக்கிறது.
 சின்னவயதில் இருந்தே பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் டி.வி. ரேடியோ பெட்டியெல்லாம் கிடையாது. என் அம்மா நாற்று நடுதல், களைபறித்தல் போன்ற விவசாய வேலைகள் எல்லாம் செய்யும் போது கிராமியப் பாடல்கள், நாட்டுப்புற பாடல் நிறைய பாடிக் கொண்டிருப்பார்கள். அவற்றையெல்லாம் கேட்டு, கேட்டு நானும் சிறு வயதிலிருந்தே கிராமிய பாடல்கள் பாடுவேன்.
 என் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் அடிக்கடி என்னைப் பாடச் சொல்லி கேட்பார்கள். அப்போதே என்னை அறியாமலே எனக்கு இசை மீது ஆர்வம் வந்து விட்டது. ஆனால் முறைப்படி சங்கீதம் எதுவும் கற்றுக் கொண்டதில்லை. பத்தாம் வகுப்பு பெயிலாகிவிட்டேன். அந்த நேரத்தில் என் அப்பா இறந்துவிட்டார்.
 அதன் பிறகு படிப்பைத் தொடரமுடியவில்லை. வேலைக்கு போக வேண்டிய சூழல். அதற்காக எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள ஊருக்கு வேலைக்குச் சென்றேன். அங்கே பறை இசை பயிற்சி பள்ளி துவங்கவுள்ளதை அறிந்து அதில் சேர்ந்தேன். அங்கே நாடகங்கள் போடுவது, பாடல்கள் பாட, நாட்டுப்புற பாடல்கள் எழுத,பறை இசை பாட பயிற்சியளித்தார்கள். அதில் எல்லாவற்றிலும் நான் கலந்து கொள்வேன்.
 தொடர்ந்து அக்கம்பக்கத்து ஊர்களில் கோவில் விசேஷங்கள்,திருவிழாக்கள், பிறந்தநாள் விழாக்கள் என சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடுவேன். இந்தச் சூழலில் பறை இசை பயிற்சி பள்ளி நடத்திய மணிமாறன் அவர்களும், நானும் காதல் திருமணம் செய்து கொண்டோம். அவர் 300க்கும் மேற்பட்ட பறை இசை பாடல்கள் எழுதி ஆல்பம் வெளியிட்டு வந்தார்.
 ஒருமுறை அதில் என்னை டிராக் பாட அழைத்து சென்றிருந்தார். அங்கே வந்திருந்த தபேலா இசைக் கலைஞர் ஒருவர் எனது குரலை கேட்டுவிட்டு, குரல் நன்றாக இருக்கிறது வாய்ப்புகள் வந்தால் அழைக்கிறோம் என்று தொலைபேசி எண்ணை வாங்கி கொண்டார். இருபது நாட்களில் ஒரு படத்திற்கு பாட வாய்ப்பு வந்திருப்பதாக அழைத்தார். அந்த சமயம் நான் கோயம்புத்தூரில் ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். அங்கே கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வரமுடியாமல் போய்விட்டது. நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டோமோ என்ற வருத்தம் இருந்தது. அதன் பிறகு ஐந்து வருடம் கழித்து இசையமைப்பாளர் இமான் சார் இசையில் பாட அழைத்தார்கள். மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது. உடனே கிளம்பி சென்னை வந்தோம். கும்கி படத்தில் "சொய்... சொய்...' பாடல் பாட வாய்ப்பு கொடுத்தார்.
 வெளிநாடுகளில் இருந்து இரை தேடி வந்து பறவைகள் கூடும் சின்ன கிராமத்தில் பிறந்த நான் இன்று வெளிநாடுகளுக்கு சென்று பாடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. பொதுவாக ஓர் ஆணிண் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள்.
 ஆனால் என்னுடைய வெற்றிக்கு பின்னால் எனது கணவர் தான் இருக்கிறார். நான் பாட வேண்டும் என்பதில் என்னைவிட அவருக்குத் தான் ஆர்வம் அதிகம். அந்தஅளவிற்கு நிறைய பயிற்சிகள் கொடுத்திருக்கிறார். அதே போல் என் வெற்றியைக் கண்டு ஆனந்தப்படும் இன்னொரு உள்ளம் எனது தாய். அவர்களிடம் என்னை யாராவது பாராட்டினால் அவர்கள் பதிலுக்கு அழுது கொண்டிருப்பார்கள். அவர்களது ஆனந்த கண்ணீர் என்னை மேலும் பல வெற்றிகள் குவிக்கத் தூண்டி விடுகிறது.
 கும்கி படத்தின் பாடலுக்காக கலைவளர்மணி விருது அரசு சார்பில் அளித்தார்கள்,அதன் பிறகு விகடன் விருது, எடிசன் விருது, சிகரம் தொட்டப் பெண்கள் என்ற ரேடியோ மிர்ச்சி விருது என்று சினிமா உலகம் என்னை பெருமைப்படுத்தியது. நிறைய படிக்காத என்னை பல பள்ளிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். அதெல்லாம் சினிமா தந்த வரவேற்பு தான்.
 என் பெயரை வைத்து நான் ஈழத்தமிழர் என்றும், யார் என்று தெரியாது என்றும் சொல்லிவிடுகிறார்கள். ஒரு புறம் அப்படியிருந்தாலும். எனக்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்து கொண்டு தான் இருக்கிறது. கும்கிக்கு பிறகு 27 படங்களில் பாடியுள்ளேன். அதில் 2 படங்கள் வெளியாகியுள்ளன. மற்ற படங்கள் விரைவில் வெளிவரவுள்ளன. பவதாரிணி, தேவிஸ்ரீபிரசாத், ஸ்ரீகாந்த் தேவா போன்ற நல்ல இசையமைப்பாளர்களின் படங்களும் இதில் உண்டு. ஒரு படத்தில் நடித்தும் இருக்கிறேன்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.