வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நம் ஆரோக்கியம் நம் கையில்!

ஜலதோஷத்துக்கு துளசி கஷாயம் அல்லது சுக்கு கஷாயம் வீட்டில் தயாரித்து

News image
Updated On :5 ஜனவரி 2013, 6:35 am

தினமணி

ஜலதோஷத்துக்கு துளசி கஷாயம் அல்லது சுக்கு கஷாயம் வீட்டில் தயாரித்து, அருந்துவது மிகச் சிலர்தான். நாகரீகம் மாறிவரும் காலமிது. பாட்டி வைத்திய முறையில் கஷாயம் தயாரிக்கத் தெரிந்திருந்தாலும், வீட்டில் தயாரிக்க நேரம் இல்லை என கூறுகிறார்கள்.
 வீட்டில் உள்ள சமையல் அறை பொருள்களை வைத்துக்கொண்டு, எளிமையாக, குறைந்த செலவில், நிரந்தரமாக பல நோய்களை குணப்படுத்த முடியும்.
 விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தாய்வழி இயற்கை மருத்துவ முறையில் பலவகை உணவு வகைகளை தயாரித்து பொதுமக்களிடம் விற்பனை செய்து, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் இயற்கை மருத்துவர் ஜி.மாறன் (52). அவரிடம் பேசியபோது:
 1995ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஆசிரியர் பால்ராஜ், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சித்தையன், தொழிலதிபர் கடற்கரை நாடார் ஆகியோர் இயற்கை வாழ்வியல் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். நான் இயற்கை முறை வைத்தியம் படித்துள்ளால், அந்த அமைப்புக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்தேன். மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இயற்கை மருத்துவர்கள், வர்மக்கலை பயிற்சியாளர்கள், யோகா பயிற்சியாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கூடி, பாரம்பரிய உணவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இயற்கை உணவுகளே உடலுக்கு தீங்கு விளைவிக்காது உள்ளிட்டவை குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என பேசிவந்தோம். கூட்டம் முடிந்ததும் அனைவருக்கும் முளைகட்டிய தானியம் உள்ளிட்டவற்றை வழங்கிவந்தோம். முளைகட்டிய தானியத்துக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் 2001 ஆம் ஆண்டு இதற்கு என தனியே கடை தொடங்கினேன்.
 பின்னர் கம்பு, பாசிப் பயறு, உளுந்து, வெந்தயம், கொள்ளு ஆகியவற்றை முளைகட்டி வைத்தும், முடக்கத்தான் கீரை சூப், வெந்தயக்களி ஆகியவற்றையும் விற்பனை செய்யத்
 தொடங்கினேன்.
 மேலும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் காலை இடைவேளையின்போது, முளைகட்டிய பயறு வகைகளை நேரடியாகக் கொண்டு சென்று விற்பனை செய்யத் தொடங்கினோம். தொடக்க காலத்தில் 50 பேர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். தற்போது 5000 பேர் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு விநியோகம் செய்ய 10 உதவியாளர்கள் உள்ளனர்.
 தற்போது என்னென்ன தயாரித்து விற்பனை செய்து வருகிறீர்கள்?
 எள் உருண்டை, அவல் சாலட், நிலவேம்பு கஷாயம், காரட் கீர், பீட்ரூட் கீர், சோற்றுக்கற்றாழை ஜூஸ், நவதானிய சத்துமாவு, முருங்கை சூப், நெருஞ்சிமுள் கஷாயம் உள்ளிட்டவற்றைத் தயார் செய்கிறோம். இவற்றைத் தயார் செய்ய பாரம்பரிய முறை தெரிந்த 4 பெண்களை வேலைக்கு வைத்துள்ளேன்.
 நீங்கள் தயாரிக்கும் பொருள்களின் மருத்துவ குணங்ளைக் கூறுங்கள்?
 இடுப்பு வலி, முதுகு வலி, பெண்களுக்கான மாத விலக்குப் பிரச்னை, வெள்ளைப் படுதல் ஆகியவற்றுக்கு வெந்தயக்களி, நரம்புத் தளர்ச்சிக்கு முருங்கை சூப், சிறுநீரக கல் அடைப்பு நீங்க நெருஞ்சி முள் கஷாயம், மூட்டு வலி, வாய்வு, மலச் சிக்கலுக்கு முடக்கத்தான் கீரை சூப், சளி இருமலுக்கு துளசி டீ, கண் பார்வைக்கு கேரட் கீர், ரத்தச்சோகைக்கு பீட்ரூட் கீர், முடி கொட்டுதல் நிற்க கருவேப்பிலை கீர், அல்சர், மூலம், உஷ்ணக் கடுப்பு ஆகியவற்றுக்கு சோற்றுக் கற்றாழை ஜூஸ், உடல் வலிமைக்கு நவதானிய சத்துமாவு ஆகும்.
 இந்த வகைகளைத் தயாரிக்க என்ன பொருள்களை உபயோகிக்கிறீர்கள்?
 பாலுக்கு பதில் தேங்காய் பால், உப்புக்கு பதில் இந்துப்பு, சீனிக்கு பதில் கருப்பட்டி, வெல்லம், வெள்ளை அரிசிக்கு பதில் கைகுத்தல் அரிசி ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இந்த பொருள்கள் உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது.
எஸ்.பாலசுந்தரராஜ்

வெந்தயக் களி
 தேவை: 500 கிராம் கைகுத்தல் புழுங்கல் அரிசி, 500 கிராம் கைகுத்தல் பச்சை அரிசி, 500 கிராம் தொலியுடன் கூடிய உளுந்து, 200 கிராம் வெந்தயம், 2 கிலோ கருப்பட்டி, 1 கிலோ செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், 250 கிராம் சுக்கு, 50 கிராம் ஏலக்காய்.
 அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியே 8 மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்பட்டியை போதிய அளவு தண்ணீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதில் ஏலம் மற்றும் சுக்கைப் போட வேண்டும். பின்னர், அதனை வடிகட்டி எடுத்துக்கொண்டு, மீண்டும் அதனை அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள மாவைப் போட்டு கிண்ட வேண்டும். பின்னர் இடைவெளிவிட்டு, விட்டு, நல்லெண்ணெயை விட்டுக் கிண்ட வேண்டும்.
 இதையடுத்து, இறக்கிவைத்த பின்னர் மீதம் உள்ள எண்ணெயை ஊற்றி கிண்டி பரிமாற வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.