நாட்டார்மங்கலத்துக்கு இரண்டு விருதுகள்!

ஆசிரியர் பணியை துறந்து, ஊராட்சி தலைவராக மக்கள் பணியாற்றிவரும் கடலூர் மாவட்டம், நாட்டார்மங்கலம் ஊராட்சி தலைவர் சுதா மணிரத்தினம் இப்போது மத்திய அரசின் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.
நாட்டார்மங்கலத்துக்கு இரண்டு விருதுகள்!
Updated on
2 min read

ஆசிரியர் பணியை துறந்து, ஊராட்சி தலைவராக மக்கள் பணியாற்றிவரும் கடலூர் மாவட்டம், நாட்டார்மங்கலம் ஊராட்சி தலைவர் சுதா மணிரத்தினம் இப்போது மத்திய அரசின் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.
 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டார்மங்கலம் ஊராட்சியின் தலைவராக இருப்பவர் சுதா மணிரத்தினம். அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியராக 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்று, மக்களால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊராட்சி தலைவராக பணியாற்றி வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து:
 ""காட்டுமன்னார்கோவில் தொகுதியிலேயே மிகப் பெரிய கிராமம் என்ற சிறப்பும், அதிக மக்கள் தொகைக் கொண்ட கிராமம் என்ற பெருமையும், எங்க ஊருக்கு மட்டும் தான் உண்டு. 2,500 குடும்பங்கள் வசித்து வரும் இங்கு, தலித், வன்னியர், பிள்ளைமார், முதலியார் போன்ற அனைத்து சாதி மக்களும் வசித்து வருகிறோம்.
 பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சியாக இருந்தாலும், கிராம மக்கள் அனைவரும் நீங்கள் தான் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைத்தனர். நான் அவர்களிடம், நம் கிராமத்தை முன்னேற்ற வேண்டுமென்றால் வார்டு உறுப்பினர்கள் அனைவரையும் பெண்களாக போட்டியிட வைக்க வேண்டும் என்றேன். கிராமத்தை இந்தியாவிலேயே முன்மாதிரியாக மாற்ற எல்லோரும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்ற இரண்டுக் கோரிக்கைகளை வைத்து, இதற்குச் சம்மதித்தால் தான், நான் தேர்தலில் நிற்பேன் என்று கூறினேன்.
 இதைக்கேட்ட கிராம மக்களும் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டனர். தலித் மக்கள் வாழும் பகுதியில் 5 வார்டுகளும், முதலியார்கள் பகுதியில் 3 வார்டுகளும், வன்னியர், பிள்ளைமார் இருக்கும் பகுதிகளில் 1 வார்டும் உள்ளது. இந்த வார்டுகளில் இருந்து ஆளுமைத் திறன் கொண்டப் பெண்களாகப் பார்த்து மக்களே தேர்ந்தெடுத்தனர். இதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
 எங்களுக்கு எதிராக யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நாங்கள் அனைவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.
 இதனால் இந்த கிராமத்தை முன் மாதிரி கிராமமாக மாற்றிக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில்தான் பிளாஸ்டிக் ஒழிப்பு, சாலைகள், தெருக்களை சுத்தமாக வைத்திருப்பது, குடிசைகள் இல்லாத கிராமமாக உருவாக்குவது போன்ற திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கினோம்.
 ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருந்தன. இப்போது அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் 150 காங்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளுக்குள் குடிசை இல்லாத கிராமமாகவும், அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் உள்ள கிராமமாக மாற்றுவதே பிரதான லட்சியம்.
 இந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் தீபா, முத்துலட்சுமி, லட்சிய வீரமணி, அஞ்சலை தேவி, கண்ணகி, ராதா, தமிழரசி, வேம்பு, விசாலாட்சி ஆகிய 9 பேரும் விவசாய தொழிலாளர்கள். விவசாயப் பணிகள் இல்லாத காலத்தில் கிராமத்தில் பெண்களின் வருவாயை பெருக்க தொழிற்பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இப்போது பல்வேறு விதமான சுய தொழில் பயிற்சிகள் பெண்களுக்கு அளிக்கப்படுகிறது.
 நூலகத்தில் இப்போது 1,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. நகரங்களுக்கு இணையாக பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு இடங்களில் மேல்நிலைத்தொட்டி கட்டப்படவுள்ளது. கிராமத்தில் 10 தெருக்கள் உள்ளன. நகரங்களில் உள்ளதுபோல் ஒவ்வொரு தெருவிற்கும் பெயர் வைக்க உள்ளோம்.
 ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மற்றவர்களால் கேலி, கிண்டல் செய்யப்பட்ட ஊராட்சி தேசிய அளவில் சிறந்த ஊராட்சி என்ற நிலைக்கு வந்துள்ளது. இப்போது எங்கள் ஊராட்சியின் செயல்பாடுகளைப் பார்க்க பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மக்கள் பிரதிநிதிகள் வந்து செல்கின்றனர். எஞ்சியுள்ள மூன்றரை ஆண்டுகளில் இந்த ஊராட்சியை முழு தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றி, இந்தியாவிலேயே வேறு எங்கும் இதுபோன்ற கிராம ஊராட்சி இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்'' என்கிறார் கிராமத்தின் டீச்சர் சுதா மணிரத்தினம்.
 - கே.விஜயபாஸ்கர்
 படங்கள்: வி.சிவபாலன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com