/

நாளைய சாதனையாளரை இன்றே உருவாக்குங்கள்!

""இன்றைய இளைஞர்கள் படிப்புக்கு ஏற்ற நல்ல வேலையைப் பெறவும், கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் பெரிய போராட்டமே

News image
Updated On :9 ஆகஸ்ட் 2015, 8:10 am

ஸ்ரீதேவி குமரேசன

""இன்றைய இளைஞர்கள் படிப்புக்கு ஏற்ற நல்ல வேலையைப் பெறவும், கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் பெரிய போராட்டமே நடத்துகிறார்கள். இதற்குக் காரணம் திறமையிருந்தும் கம்யூனிகேஷன் ஸ்கில் இல்லாததே'' என்கின்றனர் பிரதீப் ஆண்டனி மற்றும் லியோ பெர்ணான்டஸ். இருவரும் வெளிநாட்டில் ஐடி நிறுவனத்தில் மனிதவளப் பிரிவில் பணிபுரிந்தவர்கள். அவரவர் நிறுவனங்களுக்காக உலக அளவில் இதுவரை 5000-க்கும் மேற்பட்டவர்களைப் பணிக்காகத் தேர்வு செய்தவர்கள். இவர்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, போட்டி நிறைந்த உலகில் இனி வரும் காலங்களில் இளைஞர்கள் தங்களை எப்படித் திறமை மிக்கவர்களாக மாற்றிக் கொள்வது? என்பது குறித்து ஒரு பாடத்திட்டத்தை வகுத்துள்ளனர். இதற்காக சென்னை சேத்துபட்டில் "டேலன்டீஸ்' என்ற பயிற்சியகத்தையும் தொடங்கி உள்ளனர். இதுகுறித்து பிரதீப் நம்மிடம் கூறியது...

""நாங்கள் இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். லியோ, டாடா நிறுவனத்திலும், நான் ஐடி நிறுவனத்திலும் வேலை பார்த்தோம். ஒரு கட்டத்தில் எங்கள் இருவருக்கும் இயந்திரம் போன்று ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் இருந்து மாற்றம் தேவைப்பட்டது. இதனால் வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கே திரும்பிவிட்டோம். அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபோது, நாங்கள் பணியில் இருந்தபோது உலக அளவில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை வேலைக்காகத் தேர்வு செய்திருக்கிறோம். அதில் பெரும்பாலானோர் நல்ல கல்வித் தகுதியிருந்தும் நேர்முகத் தேர்வை எதிர்கொள்வதில் பின்தங்கியே உள்ளனர். இந்த நிலை பரவலாக அனைத்து நாட்டு இளைஞர்களிடமும் இருப்பதை அறிந்தோம். அப்படியே வேலையில் சேர்ந்தாலும் புது இடம், புது மொழி, புது ஆட்களுடன் பழகுவதிலும் திணறுகிறார்கள். ஆனால் இன்றையச் சுழலில் ஒரு நிறுவனம் ஓர் இளைஞனை வேலைக்குத் தேர்வு செய்யும்போது அவர் பாடப்பிரிவுகளில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்பதை மட்டும் பார்ப்பதில்லை. அவர் எப்படிப்பட்ட சூழலையும் சமாளிக்கும் திறமைசாலியா, அவருக்கு கம்யூனிக்கேஷன் ஸ்கில் இருக்கிறதா என்பதையும்தான் பார்க்கிறார்கள். அதனால் இதுபோன்ற இளைஞர்களுக்கு  உதவலாமே என்று நினைத்தோம்.

  இதற்காக ஓர் ஆய்வு செய்தோம். அதன்படி பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளின் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கிறார்களே தவிர, குழந்தை மற்றவர்களிடத்தில் எப்படிப் பழக வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், திறமையை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி யோசிப்பதில்லை.

 இதற்காக "பெர்ஸனாலிட்டி டெவலப்மெண்ட்' பிரிவில் தேர்ந்த நிபுணர்களின் உதவியோடு  நாங்களே ஒரு பயிற்சித் திட்டத்தை உருவாக்கினோம். அதன் பிறகு 2014-இல் "டேலன்ட்டீஸ்' என்ற கம்யூனிகேஷன் மற்றும் ஸ்கில் டெவலப்மெண்ட் நிறுவனத்தைத் தொடங்கினோம்.

Story image

 இதன் மூலம் தற்காப்பு, சுய விழிப்புணர்தல், கேட்கும் திறனை அதிகரித்துக் கொள்வது, இடத்திற்குத்  தகுந்தவாறு தங்கள் ஆடைகளைத் தேர்வு செய்வது, கோல் செட்டிங், எது முக்கியம், எது சுலபம், எது கடினம், டைம் மேனேஜ்மெண்ட், வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் முடிவு எடுக்கும் திறமை, சமூகத்தில் பண்புள்ளவனாக நடந்து கொள்வது, பெண்களை, பெற்றோர்களை மதித்தல், மொழிச் சிக்கலைச் சமாளிப்பது, பணப் பரிமாற்றம், எல்லாவற்றிலும் எப்படி தங்களைத் திறமையுள்ளவர்களாக வளர்த்துக் கொள்வது என்பதை 12 லெவலாகக் கற்றுத் தருகிறோம். முதல் வகுப்பிலிருந்து பிளஸ் டூ முடியும்வரை எங்களுடைய பயிற்சி இருக்கும். ஒரு குழந்தை பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது மிகவும் தெளிவானவர்களாகவும், தங்களைத் தாங்களே அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்.

 இதற்காக பல பிரபல பள்ளிகளை அணுகி அவர்களுக்கு "டேலன்ட்டீஸ்' பயிற்சிகளைப் பற்றி விளக்கினோம். அவர்களுக்குப் பிடிக்கவே பள்ளிகளில் இசைக்கு, யோகாவுக்கு, விளையாட்டுக்கு நேரம் ஒதுக்குவதைப்போல "டேலன்ட் டெவலப்மெண்ட்டுக்கும்' நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்கள். இந்த ஒன்றரை ஆண்டுகளில் பெங்களூர், சென்னை, ஹைதராபாத் என கிட்டத்தட்ட 4,000 பிள்ளைகள் எங்களிடம் பயிற்சி பெறுகிறார்கள். 34 பேர் பயிற்சியாளராக இருக்கிறார்கள். சமீபத்தில் வேலூரிலும், திருச்சியிலும் தொடங்கியிருக்கிறோம்.

 தங்கள் பிள்ளைகளின் மாற்றம் குறித்து பெற்றோரும், ஆசிரியரும்  மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். முக்கியமாக துறுதுறுவென இருக்கும் குழந்தைகளைவிட யாரிடமும்  பேசவோ, பழகவோ கூச்சப்படும் பிள்ளைகள் நிறையவே மாறி இருக்கிறார்கள். சாதுவான பிள்ளைகள்கூட தற்போது குரூப் லீடர், விளையாட்டுகளுக்கு லீடர் என்று மாறியிருக்கிறார்கள்.

 கல்லூரிப் பருவத்தில் இருப்பவர்களுக்காக வேறு விதமான பயிற்சிகளை உருவாக்கியிருக்கிறோம். இதனால் கல்லூரிக்காலம் முடிந்ததும் வேலைக்காகத் தங்களைத் தாங்களே தயார்செய்து கொள்வார்கள். இதுகுறித்து கல்லூரிகளிலும் பேசி வருகிறோம். தற்போது  பெங்களூரில் உள்ள "செயின்ட் கிளாரட்' கல்லூரியில் தொடங்கிவிட்டோம். அங்கு 800 பிள்ளைகள் பயிற்சி பெறுகிறார்கள். சென்னையில் சில கல்லூரிகளில் வெகு விரைவில் தொடங்க உள்ளோம்'' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.