புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிறுவர்களே பங்கேற்கும் "கோட்டி புவா'!

ஒடிசா மாநிலத்தில் மிகப் பழமையான கிராமிய நடனத்தின் பெயர் "கோட்டி புவா'. இதிலுள்ள சிறப்பு என்னவெனில், இதில் பங்கேற்பவர்கள் அனைவருமே சிறுவர்கள்.

News image
Updated On :27 ஜூன் 2015, 2:01 pm

அ. குமார்

ஒடிசா மாநிலத்தில் மிகப் பழமையான கிராமிய நடனத்தின் பெயர் "கோட்டி புவா'. இதிலுள்ள சிறப்பு என்னவெனில், இதில் பங்கேற்பவர்கள் அனைவருமே சிறுவர்கள். பெண்களைப் போலவே கூந்தலை வளர்த்து நெற்றியில் திலகமிட்டு கண்களுக்கு மை பூசி நகைகள் அணிந்து அசல் பெண்களைப் போலவே அபிநயித்து நடனமாடுவார்கள். பார்ப்பவர்களுக்கு அசல் பெண்கள் ஆடுவது போலவே இருக்கும். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களே சொன்னால்தான் பார்வையாளர்கள் நம்புவார்கள். அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.

ஆன்மிகத் தலமான பூரி நகரம் அருகே உள்ள "ரகுராஜ்புர்'தான் "கோட்டி புவா' நடனக் கலையின் பிறப்பிடமாகும். ஒடிய மொழியில் "கோட்டி' என்றால் ஒருவர் என்றும் "புவா' என்றால் சிறுவன் என்றும் பொருள். இந்த நடனத்தைப் பயிலும்போது சிறுவயது முதலே கடின முயற்சியும் கட்டுப்பாடும் தேவை. இந்த நடனத்தைக் கற்கும் சிறுவர்களும் வெட்கப்படாமல் ஆர்வத்துடன் கற்கின்றனர். பெண்களைப்போலவே உடல் முழுக்க அனைத்து நகைகளையும் அணியலாம். கையில் வளையல், கழுத்தில் நெக்லஸ், நெற்றிச்சுட்டி, ஒட்டியாணம், காலில் சலங்கை என அனைத்தையும் அணிவதோடு பெண்மைக்குரிய நளினத்தோடு அபிநயித்து ஆடவும் பயிற்சியளிக்கப்படுகிறது. சிறுவயது முதலே பயிற்சி பெறும் சிறுவர்கள் பருவ வயது வரை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.

இந்திய நடனங்களைப் போலவே "கோட்டி புவா' நடனத்திலும் குருவந்தனா, பூரி ஜகந்நாதரைப் பூஜித்துப் பாடுவது, பார்வையாளர்களை வரவேற்று ஆடுவது போன்ற நிகழ்ச்சிகள் இதிலும் உண்டு. கிருஷ்ணா ராதை சரிதம், ஜகந்நாதர் சரிதம் போன்ற காவியங்கள் முக்கிய நிகழ்ச்சிகளாகும். 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் ஜெயதேவின் கீத கோவிந்தத்தை அடிப்படையாக வைத்து பாதம், குச்சிப்புடி, கதக் போன்ற நடனங்கள் அமைந்துள்ளதால், சிறுவயதில் சிறுவர்களுக்கு அபிநயம், முத்திரை போன்றவற்றைப் பிடிப்பது சுலபமாக இருக்குமென்று கருதுகிறார்கள்.

16-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த "கோட்டி புவா' நடன நிகழ்ச்சியில் பாடும்போது பக்கவாத்தியங்களாக ஒடிசாவில் கலாசார நிகழ்ச்சிகளின்போது பயன்படுத்தும் மர்தாலா என்ற வாத்தியமும், புல்லாங்குழல், வயலின், ஆர்மோனியம் போன்ற இசைக் கருவிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய நடனங்களில் குறிப்பாக கதகளி, குச்சிப்புடி நடனங்களில் ஆண்கள், பெண் வேடமிடுவது வழக்கமாகும். மேலும் இந்த வகை நடனங்களில் 16 வயது முதல் 60 வயதுள்ளவர்கள் பெண் வேடத்தில் நடனமாடுவது ஏற்கப்படுகிறது. தொடக்கத்தில் முழுக்க முழுக்க சிறுவர்களே பங்கேற்கும் "கோட்டி புவா' நடன நிகழ்ச்சிகள் கோயில்களில் மட்டுமே நடைபெற்றன. வெளியே பொது மேடைக்கு வந்த பிறகே மக்கள் வரவேற்பைப் பெற்றது. அதேவேகத்தில் நாளடைவில், ஏறக்குறைய ஒடிசி நடனத்தை ஒத்திருந்ததால் வரவேற்பு குறையத் தொடங்கியது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக ஒடிசா அரசு முயற்சியால் ஆண்டுதோறும் "கோட்டி புவா' நடனத் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளன. இதனால் ஒடிசா மாநிலத்தில் பல்வேறு நடன அமைப்புகள் மீண்டும் இந்த நடனக் கலைக்கு புத்துயிர் அளிக்க வந்ததுடன் சிறுவர்களுக்குப் பயிற்சியளிக்கவும் தொடங்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஒடிசாவுக்கு அப்பால் பிற மாநிலத் தலைநகர்களிலும் இந்த நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதில் தீவிரமாக உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.