அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

நான்கு வயதில் பக்திச் சொற்பொழிவு!

மார்கழி மாதம், திருப்பாவை சொற்பொழிவு. நடந்த இடம் சேலம், குகை பகுதி. சொற்பொழிவை நிகழ்த்தியவர் ஸ்ரீராம்.

News image
Updated On :22 மார்ச் 2015, 8:43 am IST

மார்கழி மாதம், திருப்பாவை சொற்பொழிவு. நடந்த இடம் சேலம், குகை பகுதி. சொற்பொழிவை நிகழ்த்தியவர் ஸ்ரீராம். கூடவே தனது 4 வயது மகனையும் அங்கே அழைத்துச் சென்றிருந்தார். சொற்பொழிவின் கடைசி நாள். பையனின் துறுதுறுப்பைப் பார்த்தவர்கள், அவனை ராமாயண சொற்பொழிவு நிகழ்த்தச் சொல்கிறார்கள். கொஞ்சம் கூடத் தயக்கம் இல்லாமல், எதையும் மனப்பாடம் செய்யாமல், கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல், உணர்வுப்பூர்வமாக சிறுவன் ராமாயணத்தைச் சொல்லச் சொல்ல அருகில் இருந்தவர்கள் வியப்பினால் மெய்மறந்து நிற்கிறார்கள்.
 அதற்குப் பிறகு "ஆழ்வார்கள் வைபவம்' என்று தலைப்புக் கொடுத்து தினமும் 15 நிமிடங்கள் - பத்து நாட்கள் பேசச் சொல்கிறார்கள். அதற்கு அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து 17 நாட்கள் சென்னை திருவல்லிக்கேணி நம்பிள்ளை சந்நிதியில் திருப்பாவை சொற்பொழிவை நிகழ்த்துகிறான் அந்தச் சிறுவன். 2013 இல் ஒரு மாதம் திருப்பாவை சொற்பொழிவை செகந்தராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்த்துகிறான். கடந்த ஆண்டு ஸ்ரீ ரங்கத்தில். இந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அந்தச் சிறுவன், பள்ளிகள், கோயில்கள், தொலைக்காட்சிகள் என எல்லாவற்றிலும் பக்திச் சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறான். சென்னையில் அவனுக்கு "உபன்யாசச் செல்வன்' விருது கொடுக்கிறார்கள். அந்தச் சிறுவன், சடஜித். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவன்.
 ஆங்கில வழிக் கல்வி பயிலும் நமது குழந்தைகளின் நாவில் தமிழ் தத்தளித்து அல்லற்படும் வேளையில்... இது எப்படி சாத்தியம்? வியப்புடன் சடஜித்தின் அம்மா பத்மாவிடம் கேட்டோம்...
 ""எனது மகன் சடஜித் நான்கு வயதிலேயே பக்தி சொற்பொழிவு செய்ய ஆரம்பித்துவிட்டான். இது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. காரணம் அவனுடைய சூழல் அப்படிப்பட்டது. அவனுடைய தாத்தா பூவராஹசார்யார் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. படித்தவர். கல்லூரியில் ஆசிரியராக இருந்தவர். பெங்களூரில் அந்தக் காலத்திலேயே தமிழில் உபன்யாசம் செய்தவர். இன்று பெங்களூரில் தமிழில் உபன்யாசம் இயல்பாக நடக்கிறதென்றால் அவர் அந்தக் காலத்தில் செய்த உபன்யாசங்கள் அதற்கு அடித்தளமாக இருந்தன.
 எனது கணவர் ஸ்ரீராமும் உபன்யாசம் செய்பவர். பெங்களூரில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை இதற்காகவே விட்டவர். நானும் எம்.சி.ஏ. படித்து வேலைக்குச் சென்றவள்தான். நானும் வேலையை விட்டுவிட்டேன். எனது கணவரின் பரம்பரை ஊரான ஆழ்வார் திருநகரிக்கு வந்துவிட்டோம்.
 காரணம் இங்கே ஒரு பூர்வீக வீடு உள்ளது. இந்த வீட்டில் பூஜை செய்வதற்கு முதலில் நிறையப் பேர் இருந்தார்கள். அதனால் என் குடும்பத்தினர் வெளியூர்களில் வேறு வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது அந்த வீட்டில் பூஜை செய்ய யாரும் இல்லை. அதனால் நாங்கள் ஆழ்வார்திருநகரிக்கு வந்துவிட்டோம்.
 இந்த ஊர் நம்மாழ்வார் அவதரித்த திருத்தலம். என் மாமனார், என் கணவர் இருவருக்குமே உபன்யாசம் செய்வதுதான் பணி. ஆத்மதிருப்திக்காகச் செய்யும் பணி. வீட்டில் செய்திகளுக்காக மட்டுமே டிவி பார்ப்போம். அது தவிர எல்லா நேரங்களிலும் பக்தி சொற்பொழிவு நிகழ்த்துவதற்கான தயாரிப்பு வேலைகள்... படிப்பது... வழிபடுவது என்று. இந்தச் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த என் மகன் நான்கு வயதிலேயே பக்தி சொற்பொழிவு செய்யத் தயாரானதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
 மேலும் அவனுக்கு இயல்பாகவே திறமையும் இருக்கிறது. எந்தச் சொற்பொழிவு செய்வதென்றாலும் அதற்காக எழுதி மனப்பாடம் செய்வது எல்லாம் அவன் அறியாதவை. சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு முதல்நாள், அப்பாவும், தாத்தாவும் சொல்வதைக் கவனமாகக் கேட்பான். நன்கு புரிந்து கொள்வான். பின்னர் எந்தத் தடங்கலுமில்லாமல் சொற்பொழிவை நிகழ்த்திவிடுவான். அவன் மிகவும் அனுபவித்து, உரிய முக பாவங்களுடன், குரல் ஏற்ற இறக்கங்களுடன் சொல்வதைக் கேட்கும்போதுதான் நமக்கு ஆச்சரியம் ஏற்படும். அவன் தினம்தோறும் பயில்வது - பயிற்சி செய்வது, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மட்டும்தான்.
 எவ்வளவு நேரம் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும் என்று அவன் நினைக்கிறானோ, அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட பேசமாட்டான்.
 வெளியிலிருந்து பார்க்கிறவர்கள், படிக்கிற சிறு குழந்தையை நாங்கள் இப்படி சொற்பொழிவு செய்யச் சொல்லி படாதபாடு படுத்துகிறோம் என்று நினைப்பார்கள். உண்மையில் நாங்கள் அவனை உபன்யாசம் செய்யத் தூண்டியதில்லை. அவனை உபன்யாசகர் ஆக்க வேண்டும் என்று விரும்பியதும் இல்லை. அவனாக விரும்பித்தான் இதைச் செய்கிறான். அவன் விருப்பப்பட்டுச் செய்வதால் நாங்களும் அவனுக்கு ஊக்கமளிக்கிறோம்.
 அவனுடைய இந்தத் திறமைக்கு அவன் பயிலும் பள்ளியும் ஒரு காரணம். ஆழ்வார்திருநகரியிலுள்ள "மாளவியா நர்சரி & பிரைமரி பள்ளி'யில் படிக்கிறான். மார்கழி மாதம் முழுவதும் பள்ளியில் அவனுக்கு லீவு கொடுத்துவிடுகிறார்கள். இப்படி லீவு எடுத்தாலும் படிப்பிலும் அவன் முதல் மாணவன்.
 மனப்பாடம் செய்வது அவனுக்குப் பிடிக்காது. என்றாலும் இக்காலத்தில் மனப்பாடம் செய்யாமல் தேர்வு எழுத முடியாத நிலை. எனவே அவன் பாடத்தை நன்கு புரிந்து படிப்பான். நன்கு புரிந்து கொண்டதை மனப்பாடம் செய்வான். பள்ளியில் ஆசிரியை சொல்லித் தரும்போது நன்கு கூர்ந்து கவனிப்பான். ஆசிரியைகளிடம் ஏகப்பட்ட கேள்விகளை எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பான். இயல்பாகவே எதையும் எளிதில் உள்வாங்கும் திறன் - புரிந்து கொள்ளும் திறன் அவனுக்கு அதிகமாக இருப்பதால், பாடங்களை எளிதில் படித்துவிடுவான். வழக்கமாக பாடங்களை நன்கு கவனித்து வரும் அவன், தேர்வுக்குச் சிலநாட்கள் முன்னதாகத்தான் தேர்வுக்காகப் படிக்க ஆரம்பிப்பான்.
 என்னைப் பொறுத்த அளவில் என் மகன் திறமைவாய்ந்த பக்தி சொற்பொழிவாளராக இருப்பதற்குக் காரணம் அவனுடைய விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப நாங்கள் நடந்து கொண்டதுதான். அதற்கும் மேல் கடவுள் அருளும்,பெரியவர்களின் ஆசியும் இருப்பதுதான்'' என்றார்.
 - ந.ஜீவா
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.