அன்று... தொலைக்காட்சிக்காக நடனம்! இன்று... நியூயார்க் நீதிபதி!

நியூயார்க் நீதிபதியாகக் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜராஜேஸ்வரி எழுபதுகளின் மத்தியில் சென்னைத் தொலைக்காட்சியிலும் சென்னை வானொலியிலும் குழந்தைகள் நிகழ்ச்சியின் நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்.
அன்று... தொலைக்காட்சிக்காக நடனம்! இன்று... நியூயார்க் நீதிபதி!

நியூயார்க் நீதிபதியாகக் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜராஜேஸ்வரி எழுபதுகளின் மத்தியில் சென்னைத் தொலைக்காட்சியிலும் சென்னை வானொலியிலும் குழந்தைகள் நிகழ்ச்சியின் நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர். அவருடைய தாயார் காலஞ்சென்ற " சுடர்கொடி' பத்மா ராமநாதன் அப்போது நடனப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அந்தப் பள்ளியின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ராஜராஜேஸ்வரியின் பங்கு முக்கியமானதாக இருக்கும். சொந்த மகள் என்றும் பாராமல் கடுமையான பயிற்சிக்கு ராஜராஜேஸ்வரியை உட்படுத்துவார் பத்மா ராமநாதன்.

அவர்கள் குடும்பம் ஆழ்வார்பேட்டைக்குச் செல்லும் முன் திருவல்லிக்கேணியில் இந்து உயர்நிலைப் பள்ளித் தெருவில் இருந்தது.

தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற சமயங்களில் வானொலியும், தொலைக்காட்சியிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.

அமெரிக்க வானொலியில் பணி முடித்து, நான் சென்னை திரும்பிய சமயம். அப்போதைய வானொலி இயக்குநர் பி.வி. கிருஷ்ணமூர்த்தி என்னை அழைத்து, சிறுவர் நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் கொடுத்த சில காலத்திற்குப் பிறகு, பத்மா குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியின் ஒலியை மட்டும் பதிவு செய்து ஒலிபரப்புக்கு ஏற்பாடு செய்யலாமா என்று பார்க்கச் சொன்னார்.

அந்த ஒலிப்பதிவுக்கு பத்மா தன் மகள் ராஜராஜேஸ்வரியையும் அழைத்து வந்து நடனம் ஆடச் சொல்லிக் காட்டினார். சலங்கை ஒலியுடன் நடைபெற்ற அந்த நாட்டிய நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு நேயர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வானொலியில் இப்படித் தொடங்கிய பரிச்சயம் 1975 ஆம் ஆண்டில் தொடங்கிய சென்னைத் தொலைக்காட்சியிலும் தொடர்ந்தது. அங்கும்

என்னிடம் குழந்தைகள் நிகழ்ச்சிதான் வந்தது.

முக்கிய தினங்களில் நாட்டிய கலாலயா நிகழ்ச்சிகளை இடம் பெறச் செய்தேன். இன்றைய நியூயார்க் நகர நீதிபதி, அன்றைய குழந்தை நடனமணியாக நிகழ்ச்சியில் மின்னியது இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

தாளத்திற்கேற்றவாறு அடி எடுத்து வைப்பதிலாகட்டும், கை முத்திரை, முகபாவனை காட்டுவதிலாகட்டும் சிறு பிசிறு கூட வராதவாறு நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்று ராஜேஸ்வரியை வேலை வாங்குவார், பத்மா ராமநாதன். வீட்டிலும் பலநாள் பயிற்சி, டி.வி. நிலையத்திலும் ஐந்தாறு முறை பயிற்சி என்று கடுமையாக வேலை வாங்குவார்.

"நான் ஒளிப்பதிவுக்கு நேரமாயிற்று வாருங்கள்' என்று அழைத்தாலும், பயிற்சித்தளத்திற்கு, நான் நேரில் சென்று பார்த்து திருப்தி தெரிவித்த பின்னரே, மகளை ஒளிப்பதிவுக்கு பத்மா அனுப்புவார்.

ராஜராஜேஸ்வரி உட்பட ஐந்தாறு பேர் கொண்ட நடனக் குழுவை சென்னைத் தொலைக்காட்சிதன் குழந்தைகள் நிகழ்ச்சிக்கு நன்கு பயன்படுத்திக் கொண்டது, அதன் தயாரிப்பாளர், இயக்குநர் என்ற முறையில் இன்று எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் குழந்தை நட்சத்திரம், இன்று நியூயார்க் நகரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி என்றால் புல்லரிப்பு ஏற்படுகிறது.

நாட்டியப் பேரொளி, திரைப்பட நடிகை பத்மினி நடத்திய நாட்டியப் பள்ளிக்கு உதவியாக, பத்மா ராமநாதன் எழுபதுகளின் கடைசியில் அமெரிக்காவுக்குச் சென்றதும், அப்போது ஒரு சமகாலத்தில் பத்மாவும் பத்மினியும் இந்தியாவுக்கு வந்ததும், அந்தச் சமயத்தில் பத்மா, பத்மினியைக் கொண்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சியைச் சென்னைத் தொலைக்காட்சியில் நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா? என என்னைக் கேட்டதும், என்னுடைய ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கான தயாரிப்புப் பணி இறுதி நிலையில் இருந்ததால் ஒளிப்பதிவு செய்ய முடியாத நிலையில் நேரடி நிகழ்ச்சியில் (கண்ஸ்ங்) கலந்து கொள்ள பத்மினி வர முடியுமா? என்று கேட்டுக் கொண்டதும், அவ்வாறே பத்மினி வந்து கலந்து கொண்டதும் ஓர் உபரிச் செய்தி.

அது போன்ற இன்னொரு உபரிச் செய்தி நீதிபதி ராஜராஜேஸ்வரி, தன் மகனுக்குத் தன் தாயார் பெயரை முதற் பெயராகச் சூட்டி, " பத்மா சார்லி' என வைத்து தான் பயின்ற நடனக் கலையை மறந்து விடாமல் இருக்க நியூயார்க்கில் இன்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார் என்பது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com