வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இந்தியா என்றால் ரேதான்! 

சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' என்ற ஈரானிய மொழித் திரைப்படம் 1997} ஆம் ஆண்டு வெளியாகி உலகளாவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

News image
Updated On :22 ஏப்ரல் 2018, 12:51 pm

சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' என்ற ஈரானிய மொழித் திரைப்படம் 1997} ஆம் ஆண்டு வெளியாகி உலகளாவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குழந்தைகளின் பார்வையில் வாழ்க்கையின் அழகியலை இதுவரை இவரைப்போல யாரும் சொன்னதில்லை என அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் மஜீத் மஜீத்தை விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடினார்கள். "த கலர் ஆஃப் பாரடைஸ்', "மெசஞ்சர் ஆஃப் காட்', "பரான்' என அவர் இயக்கிய படங்கள் எல்லாமே கிளாசிக் வகைக்குரியவை. 

"" "சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' எனது மூன்றாவது படம். மிக எளிமையான படம். அந்தப் படத்தை கிட்டத்தட்ட ஈரானில் உள்ள அத்தனை தயாரிப்பாளர்களும் நிராகரித்தார்கள். 1997} இல் அந்தப் படம் வெளியாகி 56 சர்வதேச விருதுகளை அள்ளிக் குவித்தது. சிறந்த வெளிநாட்டு படங்களின் பிரிவின் கீழ் ஆஸ்கருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதலாவது ஈரானிய படமும் அதுதான். அன்று முதல் எந்த சமரசமும் இல்லாமல் நான் விரும்பிய படத்தை இயக்கக் கூடியதாக உள்ளது'' என்கிறார் மஜீத் மஜீத். 
தில்லிக்கு வந்திருந்த அவரிடம் பேசினோம்:

குழந்தைகளின் பார்வையில் கதை சொல்வதை உங்கள் அளவுக்கு உலகத்தில் யாரும் பின்பற்றவில்லையே?

குழந்தைகள், விருப்பு வெறுப்பு இல்லாமல் எந்த நிறக் கண்ணாடியும் அணியாமல் உலகத்தை அப்படியே பார்க்கிறார்கள். குழந்தைகளின் மனங்கள் கறை படியாத அற்புத பளிங்குக் கற்களாக இருப்பதால் அவர்களின் பார்வையில் கதை சொல்லும்போது, கதை சொல்லியாக என்னால் பல விஷயங்களை பட்டவர்த்தனமாக, எவ்வித சமரசங்களுக்கும் உள்ளாகாமல் சொல்ல முடியும். குழந்தைகளின் பார்வையில் கதை சொல்வது என்பது, கறை படியாத மனங்களின் பார்வையில் கதை சொல்லும் உத்தி. அது உண்மையில் இலகுவானது. 

வங்காள இயக்குநர் சத்யஜித்ரே உங்களின் ரோல் மாடல் என பல தடவைகள் கூறியுள்ளீர்களே?

இந்தியா என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் சத்யஜித்ரேதான். அவர் இயக்கிய "பதேர் பாஞ்சாலி' படத்தை உலகில் உள்ள அத்தனை இயக்குநர்களையும் மீண்டும் மீண்டும் பார்க்குமாறு வலியுறுத்துகிறேன். கேமராக் கோணமாக இருக்கட்டும். இல்லை, கதை சொல்லும் உத்தியாக இருக்கட்டும் அந்தப் படத்தை ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் ஏதாவது ஒரு புது விஷயத்தை நான் கற்றுக் கொள்கிறேன். இன்னொரு விஷயம், "பதேர் பாஞ்சாலி' மிக எளிமையான கதை. அதைப் படமாக்க கோடிக்கணக்கான பணம் தேவையில்லை. ஆனால், இந்தியாவில் "பதேர் பாஞ்சாலி' போன்ற படங்கள் ஏன் இப்போது உருவாவதில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

என்ன காரணமாக இருக்கலாம் என நினைக்கிறீர்கள்?

இந்தியாவில் ஆயிரக்கணக்கான கதைகள் உள்ளன. ஆனால், இந்திய சினிமா இயக்குநர்கள் செக்குமாடுகள் போல குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிக்கி இருக்கிறார்கள். அண்மைக் காலத்தில் வெளியாகி பெரு வெற்றி பெற்ற 10 படங்களை எடுத்துப் பாருங்கள். அவற்றில் குறைந்தது 80 சதவீதமான படங்கள் ஒரே மாதிரியானதாகத் தான் இருக்கும். 

ஹிந்தி சினிமாவின் மாபெரும் கமர்சியல் இயக்குநர் ஒருவர் என்னை அண்மையில் சந்தித்தார். "சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' பார்த்துத்தான் சினிமாக்கு வந்ததாக சொன்னார். "ஆனால், உங்கள் படங்களுக்கும் சில்ட்ரன் ஆப் ஹெவன் போன்ற படங்களுக்கும் துளியளவும் சம்பந்தம் இல்லையே' என்று கேட்டேன். ""சில்ட்ரன் ஆப் ஹெவன்' போன்ற மெல்லிய உணர்வுகளைக் கூறும் படங்களையே படமாக்க விரும்பினேன். ஆனால், கமர்சியலாக வெற்றியடைந்துவிட்டு அப்படியான படங்களை இயக்கலாம் என விட்டுவிட்டேன்' என்றார். "இப்போதுதான் மிகப்பெரிய கமர்சியல் இயக்குநர் ஆகிவிட்டீர்களே இப்போது இயக்கலாமே' என்று கேட்டேன். "இல்லை. இப்போது என் மேல் ஒரு கமர்சியல் இமேஜ் விழுந்துவிட்டது. மென்மையான படங்களை மக்கள் என்னிடம் இருந்து ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என்றவர், "இப்போது நான் இயக்கும் படங்கள் எனக்கே பிடிப்பதில்லை' என்றும் சொன்னார். "உங்கள் மனதுக்குப் பிடிக்காத வேலையை ஏன் செய்கிறீர்கள்?' எனக் கேட்டேன். அவரிடம் பதில் இல்லை. 

இந்தியாவில் நல்ல படங்கள் வெளிவர என்னதான் செய்ய வேண்டும்?

திரைப்படங்கள் ஒரு தேசத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பன. அந்த வகையில், இந்திய தேசத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்க வேண்டிய படங்கள் தப்பும் தவறுமாக மிக மோசமான முறையில் உருவாக்கப்படுகின்றன என்றால் அதை சீர் செய்ய வேண்டியது அரசின் கடமையே.

பிராந்திய மொழிப் படங்கள் தொடர்பாக அறிந்து வைத்துள்ளீர்களா?

தமிழ், மலையாளம், வங்காளம், மராத்தி போன்ற பிராந்திய மொழிகளில் உள்ள சினிமாக்கள் தொடர்பாக அறிந்து வைத்துள்ளேன். எல்லாம் சரிவர அமைந்தால் நான் அடுத்து இயக்கவுள்ள படம் வங்காள மொழியில் இருக்கும். சத்யஜித்ரேயின் இயக்கிய மொழியில் படம் இயக்கவுள்ளேன் என்பதை நினைக்க மகிழ்ச்சியாக உள்ளது. 

ஈரானை விட்டு வெளியே படம் இயக்குவீர்கள் என யாரும் நினைக்கவில்லையே?

மனித உணர்வுகள் எல்லாத் தேசத்துக்கும் பொதுவானவை. மனித உணர்வுகளைப் படம் பிடிக்கும்போது அவற்றை தேச, மொழி, மத எல்லைக்குள் அடக்க முடியாது. ஈரானைப் போல இந்தியாவும் பழம்பெரும் தேசம். ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே கலாச்சாரக் கூறுகள் பல ஒன்றாக உள்ளன. ஆகவே இந்தியாவில் படம் இயக்குவது கஷ்டமாகத் தெரியவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.