நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எஸ்.வி. ரங்காராவ் 100

நாம் அனைவரும் சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையில் நடிப்பதுண்டு. அந்த நடிப்பில் கோபம், வீரம், சோகம், அன்பு, சிரிப்பு போன்ற சூழ்நிலைகளுக்கு தகுந்த உணர்ச்சிகள் மற்றும் முகபாவனைகள் இருக்கும்.

News image
Updated On :30 ஜூன் 2018, 6:30 pm

ரா. சுந்தர்ராமன்

நாம் அனைவரும் சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையில் நடிப்பதுண்டு. அந்த நடிப்பில் கோபம், வீரம், சோகம், அன்பு, சிரிப்பு போன்ற சூழ்நிலைகளுக்கு தகுந்த உணர்ச்சிகள் மற்றும் முகபாவனைகள் இருக்கும். ஆனால், அதே சூழ்நிலைகள் மீண்டும் வந்தால் அதே உணர்ச்சிகளைக் காட்ட முடியுமா என்றால் சாதாரண மனிதர்களால் முடியாது. ஆனால், அதே சூழ்நிலைக்கு ஏற்கெனவே காட்டிய உணர்ச்சிகள், முகபாவங்களைக் காட்டுபவர்கள் நடிகர்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.

மனிதர்கள் அனைவரும் குணாதிசயங்கள் உட்பட அனைத்திலும் வேறுபட்டவர்கள்.இது நடிப்புத் திறமைக்கும் பொருந்தும். சில நடிகர்கள் தங்களுக்குள் இருக்கும் சொந்த நடிப்புத் திறமையினால், ஒப்பீடு செய்யமுடியாதபடி நடித்து ரசிகர்கள் அனைவரையும் மயக்கும் திறமை பெற்றிருப்பார்கள். அப்படிப்பட்ட நடிகர்களுள் ஒருவர் ஆந்திர மாநிலம் தந்த அரிய நடிகர் எஸ்.வி. ரங்கா ராவ் (Samarla Venkata Ranga Rao).


இந்தியாவின் அபூர்வ நடிகர்களுள் ஒருவரான எஸ்.வி.ரங்கா ராவிற்கு 03-07-2018 அன்று பிறந்த நாள் நூற்றாண்டு.
1918-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ஆம் நாள், ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நூஜ்வீத் என்ற சிறிய கிராமத்தில், எஸ்.கோடீஸ்வரராவ்-நரசம்மா தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார்.இவருக்கு உடன்பிறந்தவர்கள் 11 பேர். இவரது தந்தைக்கு அடிக்கடி மாறுதல் வரும் அரசாங்க வேலை. எனவே பாட்டி வீட்டில் வளர்ந்தார். 12 வயது சிறுவனாக இருக்கும்போதே, மேடை நாடகங்களில் விருப்பம் காட்டினார். இவரது விருப்பத்திக்கேற்ப, ஒருமுறை கலாபரிஷத் நாடக விழாவைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர்களுடன் நாடக விழாவிற்குச் சென்ற எஸ்.வி.ரங்காராவ், பல்லாரி ராகவாச்சாரியா மற்றும் கோவிந்த ராஜுலு சுப்பராவ் ஆகிய இருவரின் நாடகங்களைப் பார்த்தார். நாடக முடிவில் நடித்தவர்களின் நடிப்புத் திறமைக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த கரவொலியும் அங்கீகாரமும் நடிப்புத் துறைக்கு வருவதற்கு சிந்திக்க வைத்தன.
தனது பாட்டியுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார், எஸ்.வி.ரங்காராவ். நாடகம் அவரது உயிர்மூச்சாயிற்று. சென்னையில் நடக்கும் நாடகங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவார். அதேபோல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் வங்காளப் படங்களையும் விரும்பி பார்ப்பார். குறிப்பாக சாந்தாரம் (ஹிந்தி), தேவகிபோஸ் (பெங்காளி அல்லது வங்காளம்) இயக்கிய அனைத்துப் படங்களையும் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 
எஸ்.வி.ரங்காராவுக்கு நடிப்பின் மீது இருந்த காதலை தெரிந்து கொண்ட பள்ளி நிர்வாகம் அவரது நடிப்பைப் பரிசோதிப்பதற்காக, பள்ளியில் நடைபெற்ற நாடகத்தில் சிறிய வேடத்தை தந்து நடிக்கச் சொன்னார்கள். எந்தவித ஒத்திகையும் இல்லாமல் வசனம் பேசி நடித்தார். விளைவு, அவர் வசனம் பேசப் பேச பார்ப்பவர்கள் மத்தியில் பலத்த கரவொலி. புகழுக்கு மயங்காதவர்கள் யாரேனும் உண்டா? அதேபோன்று எஸ்.வி.ரங்காராவும் கரவொலி எனும் அங்கீகாரத்திற்கு மயங்கி தனது வாழ்க்கை நடிப்பு எனும் கலைத்துறைக்குத்தான் என்பதை மீண்டும் உறுதி செய்தார்.
இதற்கிடையே பள்ளி இறுதி வகுப்பை சென்னையிலும், இண்டர்மீடியட் (அந்தக்காலத்து பியுசி) படிப்பை விசாகப்பட்டிணத்திலும், பட்டப்படிப்பை (பிஎஸ்சி) காக்கிநாடா கல்லூரியும் முடித்தார். 
பட்டப்படிப்பை முடித்த பிறகு நடிப்புத்துறையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால், குடும்பத்தினருக்கு இவர் நடிப்பில் ஈடுபடுவது உவப்பாக இல்லை, எந்தவிதமான ஆதரவும் தரவில்லை. இருந்தும் மனம் தளராமல், காக்கிநாடவில் இருக்கும் "யங் மென்ஸ் ஹேப்பி கிளப்' (Young Men's Happy Club) (தற்போது வயது 102) நடத்திய அனைத்துவிதமான நாடகங்களிலும் நடித்து வந்தார். 
"யங் மென்ஸ் ஹேப்பி கிளப்' பற்றி ஒரு சிறிய ப்ளாஷ்பேக், இந்த கிளப்பில் இருந்துதான் பல புகழ்பெற்ற தெலுங்குத் திரை நட்சத்திரங்கள் தோன்றினார்கள். எஸ்.வி.ரங்காராவ், நடிகை அஞ்சலி தேவி, திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் பி. ஆதிநாராயண ராவ் (அஞ்சலி தேவியின் கணவர், மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற தமிழ்ப் படத்தை தயாரித்து இசையமைத்தவர்) தயாரிப்பாளர் வி.பி. ராஜேந்திர ப்ரசாத், இவர், சிவாஜி கணேசன் நடித்த "எங்கள் தங்க ராஜா', "உத்தமன்', "பட்டாக்கத்தி பைரவன்' ஆகிய மூன்று தமிழ்ப் படங்களைத் தயாரித்து இயக்கியவர். விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ராஜேந்திர ப்ரசாத்திடம் உதவியாளராக இருந்தவர். இவர்களெல்லாம் நமக்குத் தெரிந்த நட்சத்திரங்கள், நாம் அறியாத பல தெலுங்கு நட்சத்திரங்கள் சி.கிருஷ்ணவேணி, ரலங்கி, வெங்கட்ராமையா, நாடக நடிகர் சுப்ரமணிய சாஸ்திரி, இசையமைப்பாளர் செல்லபில்லா சத்யம் போன்றோர் யங் மென்ஸ் ஹேப்பி கிளப்பில் இருந்துதான் உருவானார்கள். 
எஸ்.வி.ரங்காராவ், பட்டப்படிப்பிற்கு பிறகு, முதுநிலைப் படிப்பு படிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கு மிகவும் நெருக்கமான உறவினர் சொல்லி தீயணைப்புத் துறையில் உள்ள வேலைக்கு மனு செய்தார் .மனு போட்ட 3-ஆவது நாளே வேலைக்கான பயிற்சியில் சென்னையில் சேரச்சொல்லி கடிதம் வந்தது. பயிற்சி எடுத்தார், மச்சிலிபட்டிணத்தில் தீயணைப்புத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அவருக்கு வேலை பிடிக்கவில்லை, மனம் முழுவதும் நடிப்பதிலேயே இருந்தது. எனவே வேலையை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், எஸ்.வி.ரங்காராவின் உறவினர் பி.வி. ராமாநந்தம், "வரூதினி' (அல்லசானி பெத்தன்னா எழுதிய மனு சரித்ரா என்ற நாவலின் தழுவல்) என்ற தெலுங்குப் படத்தை எடுப்பதற்கு திட்டமிட்டிருந்தார். இப்படத்தில் எஸ்.வி.ரங்காராவை கதாநாயகனாக நடிக்க அழைத்தார். வாய்ப்புக்காக ஏங்கிய எஸ்.வி. ரங்காராவ், தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சூட்டிங்குக்காக சேலம் சென்றார். சேலத்தில் இருந்த மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவைப் பார்த்தவுடன் ஆச்சரியம் கலந்த பிரமிப்பு. மாதம் ரூ.250 சம்பளத்தில் நடித்தார். ரூ.250 சம்பளம் என்பது மிகவும் அதிகத் தொகை. ஆனால், படம் மிகப்பெரிய தோல்வி, வெளியிட்ட வேகத்திலேயே பெட்டிக்குள் சென்றது.
படத் தோல்வியால் விரக்தியடைந்த ரங்காராவ், ஊருக்குத் திரும்பினார், சொந்த ஊருக்கு அல்ல, ஜாம்செட்பூருக்கு, அங்கே டாடா நிறுவனத்தில் வேலை காத்திருந்தது. தன்னைக் கைவிட்ட திரைத்துறைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேலைக்குச் சேர்ந்தார்.
ஆனாலும், நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தால், ஜாம்ஷெட்பூரில் ஆந்திர அúஸாசியேஷன் இருந்தது. அங்கு நடைபெற்ற அனைத்து கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
எஸ்.வி.ரங்காராவ் திரையுலகைக் கைவிட்டார், ஆனால், திரையுலகம் இவரைக் கைவிடவில்லை, இரண்டாவது வாய்ப்பு பி.வி. சுப்பாராவ் இயக்கிய "பல்லெட்டூரி பிள்ள' (Village Baby) (1950) என்ற தெலுங்கு படம் மூலம் வந்தது. வில்லனாக நடிக்க வேண்டும், உடனே கிளம்பி வரவேண்டும் என்ற அழைப்புக் கடிதம் ரங்காராவ் கையில் கிடைத்தது. ரங்காராவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி, ஊருக்கு கிளம்ப தயாரானார். அப்போது அவரது தந்தை இறந்த துக்க செய்தி வந்தது. தந்தைக்கு தளேஸ்வரத்தில் இறுதி சடங்குகள் செய்துவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை திரும்பினார். தாமதமாக சென்னை வந்ததால், ரங்காராவின் வில்லன் கதாபாத்திரம் ஏ.வி.சுப்பாராவிற்கு கொடுக்கப்பட்டது. தாமத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்த இயக்குநர், அதே படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்தார்.
அதே ஆண்டு (1950) விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் "சவுக்காரு' என்ற படத்தைத் தயாரித்தது. நிறுவனர்களில் ஒருவரான சக்ரபாணிதான் கதை-வசனம் எழுதினார். இயக்கம் எல்.வி.பிரசாத். இப்படத்தில் சுன்னப்பு ரெங்காடு என்ற ரவுடி கதாபாத்திரம். சொந்த ஊரில் இருந்த ரவுடியான ரிக்ஷா ஓட்டுநரை மனதில் நினைத்துகொண்டு நடித்தார். இப்படத்தில் ரங்காராவ் உள்பட அனைவரது நடிப்பும் நன்றாக இருந்ததால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் .இதே படத்தில் ஜானகி என்ற பெண் நடித்தார். தமிழ்த் திரைப்பட உலகில் ஏற்கெனவே ஒரு ஜானகி இருந்ததால் பெயரை வேறுபடுத்தி காண்பிப்பததற்காக "சவுக்காரு' என்ற படத்தின் பெயரை தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொண்டார். அவர்தான் செளகார் ஜானகி.
"சவுக்காரு' படம் வெளிவந்தவுடன் எஸ்.வி.ரங்காராவின் திரைப்பயணம் ஏறுமுகமாகவே இருந்தது. அவர் நடித்த தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்கள் அனைத்துமே வசூலில் சக்கை போடு போட்டன.
1963-ஆம் ஆண்டு வெளிவந்த "நர்த்தனசாலா' தெலுங்குப் படம், இந்தோனேசியாவின் தலைநகரான ஜாகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்க படவிழாவில் திரையிடப்பட்டது. விழாவில் கலந்து கொள்வதற்காக இவர் சென்றது இந்திய நடிகர் என்ற பெயரில். ஆனால் திரும்பி வரும்போது வெறும் இந்திய நடிகராக மட்டும் திரும்பி வரவில்லை. ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பரிசையும் எடுத்துக் கொண்டுதான் வந்தார்.
இயற்கையான உருவத்தால் மட்டுமல்லாமல், நடிப்பாலும் உயர்ந்து நின்றவர். இந்தப் பட்டமும் புகழும் எஸ்.வி.ரங்காராவை மேலும் உயர்த்திவிட்டன. எஸ்.வி.ரங்காராவ் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இரண்டு தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். நான்கு தெலுங்குத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
நடிப்பில் மகிழ்ச்சி, சிரிப்பு, சோகம் அல்லது துக்கம், கோபம், வீரம், அச்சம், வெறுப்பு, அதிசியம், அமைதி போன்ற நவரசங்களையும் வெள்ளித் திரையில் தந்த நாயகன் எஸ்.வி.ரங்காராவ் 1974ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.

பெயர் தந்த திரைப்படங்கள்

  • பாதள பைரவி 
  • தேவதாஸ் 
  • மிஸ்ஸியம்மா 
  • நான் பெற்ற செல்வம் மாதர்குல மாணிக்கம் மாயாபஜார் 
  • சாரதா 
  • எங்க வீட்டுப்பிள்ளை நம்நாடு
  • அன்னை
  • அன்னை இல்லம்
  • இருவர் உள்ளம்
  • கல்யாணியின் கணவன்
  • குங்குமம்
  • காக்கும் கரங்கள்
  • படிக்காத மேதை

விருதுகள்

  • இந்திய அரசின் ஜனாதிபதி விருது } 5 முறை
  • ஆந்திர அரசின் நந்தி விருது } 2 முறை (இயக்கத்திற்காக) 
  • பிலிம்பேர் சிறப்பு விருது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.