55 வயதில் 50 ஆண்டு கலைப்பணி
புராணப் பின்னணியுடன் பக்திரஸ நாட்டிய நாடகங்கள் ஒரே மேடையில் கடந்த 373 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதும், வேற்று மொழியில் அமைந்த அந்த நாடகங்களை இன்றளவும் விரும்பி பார்க்கிறார்கள் என்பதும்


புராணப் பின்னணியுடன் பக்திரஸ நாட்டிய நாடகங்கள் ஒரே மேடையில் கடந்த 373 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதும், வேற்று மொழியில் அமைந்த அந்த நாடகங்களை இன்றளவும் விரும்பி பார்க்கிறார்கள் என்பதும் ஆச்சரியமான தகவல் அல்லவா? மரபு சார்ந்த கலை வடிவங்களில் "பாகவதமேளம்' என்று அழைக்கப்படும் நாட்டிய நாடகங்களே அவை.
இந்த கலையானது விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாகத் தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் சாலியமங்கலம் கிராமத்தில் வேறூன்றியது. பின்னர் மராட்டிய மன்னர்கள் ஆதரவும் தொடர்ந்தது.
தற்போதைய தலைமுறைகளில், சி.எஸ்.எம்.சுப்ரமணியன் என்று அழைக்கப்படும் சுரேஷ், சென்னையில் தென்னக ரயில்வேயில் மூத்த மின் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இவருக்கு வயது 55. இவரின் கலைப்பணிக்கு வயதோ 50 ஆண்டுகள்!
ஆண்டுதோறும் நரசிம்ம ஜெயந்தி விழாவின் போது சாலியமங்கலம் கிராமத்தில் நடைபெறும் "பக்த பிரகலாதா' நாட்டிய நாடகத்தில் தனது 5 வயது முதல் வேடங்கள் தரித்து நடிக்கத் தொடங்கினார். முதலில் பிள்ளையாராகச் சில ஆண்டுகள், பின்னர் சில ஆண்டுகள் பால்வடியும் முகத்துடன் பிரகலாதனாக, பின்னர் 32 ஆண்டுகள் நளினத்துடன் லீலாவதியாக பெண் வேடத்திலும் நடித்தார். தற்போது கடந்த 9 ஆண்டுகளாக ஆக்ரோஷமான "ஹிரண்யகசிபு' என்னும் அசுர குல அரசன், என அவரது கலைப்பணி தொடர்கின்றது.
"ருக்மணி பரிணயம்' நாடகத்தில் ருக்மணியாகவும் நடித்ததும் உண்டு. இந்த கிராமியக் கலையில், இவருடைய ஈடுபாடு எத்தகையது, கடந்து வந்த பாதைகள் என பல தகவல்கள் அவரிடம் உரையாடும்போது கிடைத்தது.
சாலியமங்கலத்தில் அக்ரஹாரத்தில் வசித்து வந்த வீணை வித்வான் சுந்தரமய்யரின் பெண் வயிற்றுப் பேரனான சுரேஷ் கர்நூலில் வசித்து வந்த தன் தந்தையிடம் இருந்ததால் அங்கேயே பள்ளிப் படிப்பு முதல் உயர் கல்லூரி படிப்புவரை பயின்றார். அங்கு அவர் கற்ற தெலுங்குமொழி இவரின் நாடக வாழ்க்கைக்கு பெரிதும் துணையாக இருந்தது. ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் சாலியமங்கலம் வரும் இவர் சிறிது சிறிதாக நாடகங்களில் பங்கேற்க தொடங்கிவிட்டார். இது குறித்து அவர் கூறுகிறார்:
""இந்தக் கலையில் மேன்மேலும் மிளிர வேண்டும் என்ற ஆர்வத்துடன் பரத நாட்டிய நுணுக்கங்களை தஞ்சையில் வசித்து வந்த சில நாட்டிய, நட்டுவாங்க கலைஞர்களிடமும், சென்னையில் புகழ்பெற்ற தனஞ்சயன் தம்பதியினரிடமும் கற்றேன்.
அலுவலக பணிகளுக்கு இடையூறு இல்லாமல் நேரம் கிடைத்த போதெல்லாம் பிரபல பாகவதர்களுடன் கலந்து கொண்டு ராதாகல்யாணம், சீதாகல்யாணம் போன்ற உத்ஸவங்களில் பாகவத பத்ததியுடன் கூடிய பஜனைகளுக்கு அபிநயம் பிடித்து ஆடுவது உண்டு. சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களில் சபாக்களிலும், அமெரிக்காவில் உள்ள கிருஷ்ணன் கோயிலிலும் ஆட வாய்ப்பு கிடைத்தது . திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் எனது கலைத்திறனை காட்ட வாய்ப்பு கிடைத்தது. அப்போது "நிருத்யகலாமணி' என்ற பட்டம் அளித்தது கௌரவமாக இருந்தது.
நாடகம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக நான் நடிக்கும் பாத்திரங்களுக்கு தேவையான மேக்கப் சாதனங்களை சென்னையில் வாடகைக்கு எடுத்து கிராமத்திற்கு எடுத்துச் செல்வேன். தற்போது அம்பத்தூரில் வசித்து வருகிறேன். எனது ஓய்வு நேரத்தில் அடுத்த தலைமுறையினரை தயார் செய்யும் பணியைச் செய்து வருகிறேன். எனது இருமகன்களுக்கும், கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் விடுமுறை நாட்களில் என் இல்லத்தில் சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறேன். பரத நாட்டிய நுணுக்கங்களையும் , அங்க அசைவுடன் வசனங்கள் பேசி ஆடுவது எப்படி என்றும் ஆடி காண்பிக்கிறேன்'' என்கிறார்.
இவர் தான் நடிக்கும் கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போவதும் உண்டு. உதாரணமாக ஸ்ரீ நரசிம்ம அவதாரக் காட்சியில் நரசிம்மருடன் வாக்குவாதம் செய்யும் தருணத்தில் மிகவும் ஆக்ரோஷமாக அவரை தன் பரம எதிரியாக நினைத்து வார்த்தைகளை (அக்காலத்தில் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது) அள்ளி வீசுவார். கலா ரசிகர்கள் இதனை மிகவும் ஆர்வத்துடன் கேட்பர். பின்பு நாடகம் முடிந்து வேடங்கள் கலைந்த பிறகு மானசீகமாக நரசிம்மரிடம் மன்னிப்பு கேட்பாராம்.
வரும் மே 17-ஆம் தேதி சாலியமங்கலத்தில் நடைபெற உள்ள 374 ஆண்டு பாகவதமேள நாட்டிய நாடகத்தில் இவருடைய ஆக்ரோஷமான "ஹிரண்யகசிபு' வேடத்தில் ஆற்றப்போகும் நடிப்பினை கண்டுகளிப்போம்.
இவருடன் உரையாடும் போது கிடைத்த அபூர்வ தகவல், சினிமாராணி என்று அழைக்கப்பட்ட டி.பி.ராஜலட்சுமி மற்றும் நடிப்பிசைப் புலவர் என்றழைக்கப்பட்ட கே.ஆர்.ராமசாமி இருவரது பூர்வீகம் சாலியமங்கலம்.
டி.பி.ராஜலட்சுமி தனது ஐந்து வயதிலேயே காதால் கேட்டதை அப்படியே பாடுவதும் கண்ணால் பார்ப்பதை அப்படியே ஆடிக் காட்டுவதாகத் திகழ்ந்ததற்கு இக்கிராமத்தில் நடைபெற்ற பாகவதமேள நாட்டிய நாடகங்களே காரணம் என்று சொல்லலாம்.
சாலியங்கலம் தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் (திருவாரூர் வழி) தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...