தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இருபதாயிரம் கி.மீ. பயணம்

ஆன்மிகப் பயணம் என்றால் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் செல்வார்கள். இப்போது இளைஞர்களும் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 4:09 pm

ஜெ

ஆன்மிகப் பயணம் என்றால் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் செல்வார்கள். இப்போது இளைஞர்களும் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். காரைக்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை, கார்த்திகேயன் என்ற இரு சகோதரர்கள் இணைந்து 20 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோயில்களைப் பார்வையிட்டுள்ளனர்.

அவர்களிடம் ஆன்மிகப் பயணம் குறித்து கேட்ட போது சொன்னார்கள்:


""எங்களது சொந்த ஊர் காரைக்குடி அருகேயுள்ள கே. வேலங்குடி. இங்கு மாதம்தோறும் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதில் கலந்து கொள்வதற்காக நாங்கள் பெங்களூரில் இருந்து வருவோம். இதனால் ஆன்மிகத்தின் மீது எங்களுக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது. அதனால் கோயில்களுக்குச் செல்வது மிகவும் பிடிக்கும். ஏன் இந்தியா முழுவதும் உள்ள கோயில்களுக்கு சுற்றுப்பயணம் செய்யக்கூடாது என்று நினைத்தோம். குறிப்பாக இந்தியா ஓர் ஆன்மிகப் பூமி. பரந்து விரிந்த இந்நாட்டில் எண்ணற்ற கோயில்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு கோயிலும் நாட்டின் ஓவ்வொரு பகுதியில் உள்ளன. இவை அனைத்துக்கும் ஓர் வரலாறும், வித்தியாசமான கலாசாரமும் உள்ளது. இதை ஏன் நாம் தெரிந்து கொள்ளக்கூடாது என்ற ஆர்வமும் தான் எங்களை பயணம் செய்யத் தூண்டியது.

மேலும் நாங்கள் இருவரும் பெங்களுரூவில் சொந்தமாக மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுடைய பொறுப்புகளை நண்பர்களிடம் ஒப்படைத்து சில மாதங்களில் சென்று வந்து விடலாம் என்று திட்டமிட்டோம். ஆன்மிக சுற்றுப்பயணத்துக்காக எங்களின் கார் முழுவதும் இந்தியாவின் பாரம்பரியமிக்க கோயில்களை ஸ்டிக்கர்களாக மாற்றி ஒட்டினோம். நாங்கள் கோயில்களுக்கு சுற்றுப்பயணம் செல்பவர்கள் என்பதை எங்கள் வாகனமே காட்டியதால் எங்கள் பயணம் எளிதாக இருந்தது.

சுற்றுப்பயணத்தை எங்கள் ஊரில் உள்ள சொல்கேட்ட விநாயகர் கோயிலில் தரிசனம் செய்து தொடங்கினோம். மதுரை பாண்டி கோயில், கன்னியாகுமரி என ஓவ்வொரு ஊராகச் செல்லத் தொடங்கினோம் ஆன்மிக முயற்சியாக மட்டுமன்றி, இதனை சாதனை முயற்சியாகவும் செய்யத் திட்டமிட்டிருந்தோம். ஒவ்வொரு கோயிலிலும் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து, அந்த கோயிலின் வரலாறு, கலாசாரம் என அனைத்து விவரங்களையும் சேகரித்து முகநூலில் பதிவு செய்தோம்.

கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர் என இந்தியாவின் வடக்கு எல்லை வரையுள்ள அனைத்து பிரசித்தி பெற்ற கோயில்களையும் தரிசித்தோம். பின்பு அங்கிருந்து மீண்டும் ஹிமாச்சலபிரதேசம், சண்டிகர், தில்லி, உத்ரகாண்ட், உத்திரபிரதேசம், பீகார், சிக்கிம், மேற்குவங்கம், ஒடிசா, ஜார்கண்ட், சட்டிஸ்கர், மத்தியபிரதேசம், தெலங்கானா, ஆந்திரா வழியாக மீண்டும் தமிழகத்துக்கு வந்து எங்கள் ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மாள் கோயிலில் எங்களின் ஆன்மிகச் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தோம்.

இந்தப் பயணத்தின் வழியாக ஒவ்வொரு ஊரிலும் உள்ள உணவு வகைகள், மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, உடை, கலாசாரம் தொடர்பான பல விஷயங்களை இதன் மூலம் தெரிந்து கொண்டோம்'' என்கிறார்கள் சகோதரர்களான பாண்டித்துரை, கார்த்திகேயன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.