தெரியுமா?... தெரியுமா?... தெரியுமா?...

நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை குணப்படுத்த நேரடி மருந்து மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபயாடிக்) மருந்துகளையும் வழங்குவது வழக்கம்.
தெரியுமா?... தெரியுமா?... தெரியுமா?...
Updated on
2 min read

அறிதிறன் பேசி பயன்பாடு

உலகம் முழுவதும் அறிதிறன் பேசி (ஸ்மார்ட்போன்) பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், காலை தூங்கி எழுந்தவுடன் முதல் ஐந்து நிமிடங்களில் அறிதிறன் பேசியை தேடி எடுத்து விடுவதாக 61 சதவீதத்தினரும், முதல் அரை மணி நேரத்தில் அறிதிறன் பேசியை எடுத்துவிடுவதாக 88 சதவீதத்தினரும், 96 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் ஒரு மணி நேரத்துக்குள் எடுத்துவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதேபோல், 74 சதவீதம் பேர், இரவு தூங்கச் செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை அறிதிறன் பேசியை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 53,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.


நோய் எதிர்ப்புக்கு புதிய மருந்து

நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை குணப்படுத்த நேரடி மருந்து மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபயாடிக்) மருந்துகளையும் வழங்குவது வழக்கம்.

இது கிருமிகள், பாக்டீரியாக்களை கொன்று நோயை குணப்படுத்தும். வருங்காலத்தை கருத்தில் கொண்டு விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

ஏற்கெனவே "வான்கோமைசின்' என்ற நோய் எதிர்ப்பு மருந்து புழக்கத்தில் இருந்தது. அந்த மருந்தால் இப்போது பலன் இல்லை. இதே மருந்தை மேலும் வீரியப்படுத்தும் வகையில் ஆய்வு செய்தனர்.

அதில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 1000 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கிறது. எனவே கிருமிகளால் உருவாகும் அனைத்து நோய்களையும் இது கட்டுப்படுத்துமாம்


"பஸ் லாட்ஜ்'

பல தடங்களில் ஓடும் பேருந்துகள் அதிகபட்சம் 20  ஆண்டுகள்  உழைப்பிற்குப் பிறகு சாலைகளில் ஓட  முடியாது.  பணிமனையில் ஓய்வு எடுக்கத்தான் வேண்டும். அல்லது மறு சுழற்சிக்கு அனுப்பப்பட வேண்டும். 

கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கிறது. பழைய பஸ்களை புதியதாக்கி  லாட்ஜாக மாற்றியுள்ளது. 

மூணார் மலைப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் ஹோட்டல்களில் விடுதிகளில் தங்க வசதியில்லாதவர்கள் இந்த "பஸ் லாட்ஜை'ப் பயன்படுத்திக் கொள்ளலாம். பஸ்ஸில்,   ரயிலில் இருப்பது மாதிரியான படுக்கை, ஏசி, ஹீட்டர்,  குடிதண்ணீர், விளக்குகள்  வசதி  அனைத்தும்   உண்டு.  சாமான்களைப் பாதுகாப்புடன் வைக்க தனி அறையும், காப்பாளரும் உண்டு. இந்த "பஸ் லாட்ஜ்'  மூணாறு கேரள அரசு பணிமனையில் உள்ளதால், தங்குபவர்கள்  குளிக்க , இயற்கை கடன்களை முடிக்க வசதியான   வாஷ் ரூம்கள் உண்டு. 

"பஸ் லாட்ஜில்'  மாலை 6 மணி முதல்  மறுநாள் முற்பகல்  11  மணி வரை தங்குவதற்கு  கட்டணம் நூறு ரூ பட்டுமே. பாதுகாப்பு கட்டணம் நூறு ரூ. இந்தத் தொகை லாட்ஜை விட்டு போகும் போது பயணிகளுக்குத் திருப்பித் தரப்படும்..

பயணிகள் குழுவாக வந்தால் 16  படுக்கைகள் கொண்ட "பஸ் லாட்ஜை‘  மொத்தமாக 1600  ரூ வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். 
இரவு வேளையில், பஸ்ஸில் உணவும் கிடைக்கும். பக்கத்தில் இருக்கும் உணவுவிடுதிகளில் வாங்கிவர உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கரோனா காலம் என்பதால் பயணிகள் "பஸ்லாட்ஜை' விட்டுக் கிளம்பியதும்  கிருமிநாசினி கொண்டு பஸ் சுத்தம் செய்யப்படும். "பஸ்லாட்ஜ்'ஜில்  தங்க முன் பதிவு வசதியும் இருக்கிறது.

தமிழக அரசும் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களில் இது மாதிரியான "பஸ்லாட்ஜ்'களை அறிமுகப்படுத்தலாமே..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com