தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குடகு தந்த முதல் இரண்டு இந்திய ராணுவ தளபதிகள்

கர்நாடகாவில் உள்ள இயற்கை எழில் மிக்க ரம்மியமான மலைப்பிரதேசம் குடகு.

News image
Updated On :3 மே 2020, 12:11 pm

அ. குமார்


கர்நாடகாவில் உள்ள இயற்கை எழில் மிக்க ரம்மியமான மலைப்பிரதேசம் குடகு. இந்திய ராணுவத் துறையில் திறமையான இரு ராணுவ தளபதிகளை தந்த பெருமையை பெற்ற இடமாகும். இவர்கள் மட்டுமின்றி இப்பகுதியை சேர்ந்த பலர் இந்திய ராணுவத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதை போல், சுதந்திரப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த பல தியாகிகளும் இங்கு
உள்ளனர்.

மாநில பிரிவினைக்கு முன் சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்த குடகு வாழ் மக்களை "கொடவா' என குறிப்பிடுவதுண்டு. பாரம்பரிய கலாசாரம், உடை பண்பாடுகளையும், வீரத்தையும் இன்றளவும் கடை பிடிக்கும் இவர்கள் பேசும் "துளு' மொழியில் தமிழ் வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதை காணலாம்.

குடகு மாவட்டத்தின் மடிகேரி பகுதியில் சுதந்திரப் போராட்டத்தில் முதன் முதலாக பிரிட்டிஷ் அரசால் 1837-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட விடுதலை வீரர் அப்பய்ய கவுடா, அவரது சமகாலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு நீண்ட காலம் சிறைத்தண்டணை பெற்ற தியாகிகள் ஆகியோர் சிலைகளுடன், இந்திய ராணுவத்தில் பங்கேற்ற பீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா, ஜெனரல் திம்மய்யா ஆகியோர் சிலைகளுடன் மேலும் பல ராணுவ வீரர்கள் சிலைகளையும் காணலாம். இவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் பீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா மற்றும் ஜெனரல் கே.எஸ். திம்மய்யா ஆவர்.

கோனிகொப்பல் அருகே குண்டா என்ற கிராமத்தில் வசித்து வந்த கோதண்டரா குடும்பத்தைச் சேர்ந்த திவான் மண்டே பண்டா திம்மய்யாவின் பேரன் கோதண்டரா குட்டய்யா, குடகு மாகாணத்தின் உயர்ந்த பதவியான துணை கமிஷனராக 1901 முதல் 1909- ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவரது குடும்பத்தை சேர்ந்த கோதண்டரா மாதப்பா கரியப்பா மற்றும் கோதண்ட சுப்பய்யா திம்மய்யா ஆகியோர் இந்திய ராணவத்தில் முறையே பீல்ட் மார்ஷல் மற்றும் ஜெனரலாக பதவிவகித்தனர்.

முதன்முதலாக இந்திய ராணுவத்துறைக்கு தளபதிகளை தந்த பெருமை இந்த குடும்பத்தையே சேரும். குட்டய்யாவின் இளைய சகோதரர் மாதப்பாவின் மகன்தான் பீல்ட் மார்ஷல் கரியப்பா. குட்டய்யாவின் பேரன்தான் ஜெனரல் திம்மய்யா.

1899-ஆம் ஆண்டு பிறந்த கரியப்பா, இந்திய ராணுவத்தின் மூத்த குடிமகன் என்ற பெருமையை பெற்றிருந்தார். இளமையில் மடிகேரி அரசு மத்திய உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்து முடித்த பின்னர், மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1919-ஆம் ஆண்டு இந்தூர் டாலி கேடட் கல்லூரியில் பயிற்சி பெற்று, இரண்டாம் உலகப் போரின் போது பம்பாய் 88வது கர்நாடக இன்பேன்ட்ரியில் சேர்ந்து இரண்டாவது லெப்டினென்ட்டாக அமர்த்தப்பட்டார். தொடர்ந்து ஈராக்கில் பணியாற்றிய பின்னர் லெப்டினென்ட்டாக பதவி உயர்வு பெற்றார்.

கோட்டாவில் நடந்த ஸ்டாப் காலேஜில் பங்கேற்ற முதல் இந்திய ராணுவ அதிகாரி என்ற சிறப்பை பெற்ற கரியப்பா, வனத்துறை அதிகாரியின் மகளான முத்து மச்சியா என்பரை மணந்து, ஒரு மகன் மற்றும் மகளுக்கு தந்தையானார். இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் "ஆபிசர் ஆப் தி மோஸ்ட் எக்ஸலன்ட் ஆர்ட்ர்' என்ற விருதைப் பெற்றார். கூடவே பிரிகேடியர் பதவி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது.

1949 முதல் 1953-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் முதல் "கமாண்டர் இன் சீஃப்' பதவி வகித்த இவர், பின்னர் ஓய்வு பெற்றவுடன் 1953 முதல் 1956-ஆம் ஆண்டு வரை இந்திய ஹை கமிஷனராக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இந்திய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 1993-ஆம் ஆண்டு இவர் காலமாவதற்கு முன் இந்தியாவின் "பீல்ட் மார்ஷல்' என்ற பெருமையை பெற்ற இரு ராணுவ தளபதிகளில் இவரும் ஒருவராக இடம் பெற்றார்.

1906-ஆம் ஆண்டு மடிகேரியில் பிறந்த திம்மய்யாவின் இயற்பெயர் சுப்பய்யா ஆகும். திம்மய்யா என்பது இவரது தந்தை பெயர். டேராடூனில் உள்ள பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மிலிட்டரி காலேஜில் சேர்ந்து படித்து கொண்டிருந்த போது, இங்கிலாந்தில் உள்ள ராயல் மிலிட்டரி கல்லூரிக்கு, இந்தியாவிலிருந்து பயிற்சிக்கு அனுப்பப்பட்ட ஆறு பேரில் இவரும் ஒருவராக இடம் பெற்றார். 1926-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த இவர் 1935-ஆம் ஆண்டு கோதண்டரா நீனா என்பவரை மணந்து கொண்டார். பணி நிமித்தமாக கோட்டாவுக்கு சென்றபோது திம்மய்யா மனைவியையும் அழைத்துச் சென்றிருந்தார். அந்த சமயத்தில் கோட்டாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இவர்களிருவரும் இடிபாடுகளிலிருந்து அந்நாட்டு மக்களை மீட்க பெரிதும் உதவியாக இருந்தனர்.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது திம்மய்யாவுக்கு சிறந்த ராணுவ சேவைக்கான விருது வழங்கப்பட்டது. ஜப்பானியர்கள் சரணடைந்த போது, இந்தியாவின் சார்பாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1953 முதல் 1955-ஆம் ஆண்டு வரை நியூட்ரல் நேஷனல் ரீபேட்ரியேஷன் கமிஷன், தலைவராக பொறுப்பேற்றார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற இவர் கொரியா யுத்தத்தின் போது போர் கைதிகளை பரிமாற்றம் செய்வதில் திறமையாக செயல்பட்டார்.

1954-ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது பெற்ற திம்மய்யா, 1957 முதல் 1961-ஆம் ஆண்டு வரை இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பணியாற்றினார். 1964-ஆம் ஆண்டு சைப்ரஸிற்கு அனுப்பப்பட்ட ஐக்கிய நாடுகள் படையின் தளபதியாக பொறுப்பேற்ற சென்றவர், அங்கேயே மரணமடைந்தார். கரியப்பா மற்றும் திம்மய்யா இருவருமே இந்தியா நாட்டின் பெருமைக்குரியவர்களாக விளங்கினர்.

இருவருமே சிறுவயது முதலே சவால்களை எதிர்கொண்டு நம்பிக்கையுடன் பொறுப்புகளை ஏற்று செயல்படுத்துவதில் திறமையானவர்களென பெயரெடுத்தனர். பிரிட்டிஸ் இந்திய ராணுவத்தில் கரியப்பா லெப்டினென்ட் பதவியில் அமர்த்தப்பட்டதே இதற்கு எடுத்துக்காட்டாகும். அதே நேரத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு சமமான கெளரவம் இவருக்கும் கிடைத்தது.

1948-ஆம் ஆண்டு காஷ்மீர் பிரச்னை எழுந்த போது போரைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் மேற்குப் பகுதிக்கு லெப்டினென்ட் ஜெனரல் கரியப்பா தலைமையில், லெப்டினென்ட் ஜெனரல் ஸ்ரீநாகேஷ் மற்றும் மேஜர் ஜெனரல் திம்மய்யாவும் ராணுவ வீரர்களுடன் அனுப்பப்பட்டனர். லடாக்கை இந்தியா மீட்டெடுத்ததில் திம்மயாவுக்கு பெரும் பங்கு உண்டு.

கரியப்பாவின் நண்பர் லெப்டினென்ட் ஜெனரல் நாதுசிங்கிற்கு முதலில் கமாண்டர் இன் சீஃப் பதவி வழங்க முன் வந்த போது அவர் அதை ஏற்க மறுத்து, இந்தியாவுக்காக 1949-ஆம் ஆண்டு போரிட்ட கரியப்பா தான், பொருத்தமானவர் எனக் கூறியதால், மூன்று நூற்றாண்டுகளாக இருந்த பழைமையான காலனி ஆட்சி ராணுவம் 1949-ஆம் ஆண்டு இந்திய தேசிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.

நம் தேசத்தை பாதுகாக்க அயராது பாடுபட்டு வரும் ராணுவ வீரர்களை பாராட்ட அவர் தவறியதே இல்லை. இவர்களிருவரைப் போல் பல ராணுவ வீரர்களை இந்திய ராணுவத்திற்கு அனுப்பி வைத்த வகையில் குடகு தனிச்சிறப்பை பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.