
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் கடையநல்லூர் ஷேக் ஹுசைன் என்றால் பாம்புகள் நடுங்கும். அவரது கட்டளைக்கு அடங்கும். தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் ர.ஷேக் ஹுசைன் பாம்புகளின் தோழனாக இருப்பதுடன், வீடுகளில் புகுந்து விட்ட பாம்புகளை பத்திரமாக மீட்டு வனத்துறையில் ஒப்படைத்து வருவதைத் தனது கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
இதுவரை 5000 க்கும் மேற்பட்ட பாம்புகளை உயிருடன் மீட்டுள்ளார். வனத்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு துறை ஊழியர்களுக்கு பாம்புகளை கையாளும் முறை குறித்தும், எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் பயிற்சி அளித்து வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாம்புகள் மற்றும் பாம்புக்கடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அவருடன் பேசிக்கொண்டிருந்தால் பாம்புகள் குறித்த பல தகவல்களைப் பெற முடிகிறது.
உலகில் 3000க்கும் மேற்பட்ட பாம்பினங்களும், இந்தியாவில் 280 மேற்பட்ட பாம்பினங்களும் உள்ளன. 280 பாம்பினங்களில் 70 வகையான பாம்புகள் நஞ்சுடைய பாம்புகளாகும். இந்த 70 வகையான பாம்புகளில் நல்லபாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டைவிரியன் பாம்புகள் மட்டும் மனித குடியிருப்புப் பகுதிகளில் வாழக்கூடிய நஞ்சுடைய பாம்புகளாகும்.
நல்லபாம்புகளின் உடலில் காணப்படும் சிறப்பான உறுப்பு தலையில் இருக்கும் ஒரு விரியக் கூடிய தசை ஆகும். இது எதிரியை அச்சுறுத்தவே ஆகும். இதனை படம் எடுத்தல் என்பர். இப்பாம்புகள் மஞ்சள் கலந்த வெள்ளை, கரும்பழுப்பு மற்றும் வெளிர் சாம்பல் நிறங்களில் இருக்கின்றன. இப்பாம்புகள் தனது அசைந்தியங்கும் தாடைகளின் உதவியுடன் இரையை முழுதாக விழுங்கும்.
இவை பல்லி, சிறு பாம்புகள், பறவைகள் மற்றும் சிறு பாலூட்டி வகைகளை உணவாக உட்கொள்கின்றன. இப்பாம்பு கற்களுக்கு அடியில், இடிபாடுகளுக்கிடையில் வாழக்கூடிய தன்மையுடையது. சில சமயம் வீட்டுக்குள்ளும் புகுந்து விடும். இப்பாம்பு கடித்தால் மனிதனுக்கு இறப்பு நேரிடும். இப்பாம்பின் நஞ்சு மனிதனின் நரம்பு மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கண்ணாடி விரியனும் நஞ்சுடைய பாம்புகளில் ஒன்று. தடித்த உடல், கழுத்தைவிடப் பெரிய முக்கோண வடிவ தலை இருக்கும். தலையின் மேற்பகுதியிலுள்ள செதில்கள் சிறியனவாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன. பெரிய மூக்குத்துளை உடையதாகவும், கண்மணி செங்குத்தாகவும் உள்ளன. பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலுடையது.
விரியன் பாம்பின் நஞ்சு குருதிச் சிதைப்பானாகும். ஆகவே மருத்துவர்கள் ரத்தம் உறையும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர். இது மிகவும் கொடிய நஞ்சாகும். ஆறு மணி நேரத்தில் உயிரிழக்க நேரிடும்.
கட்டு விரியன்-எண்ணெய் விரியன், எட்டடி விரியன், பனை விரியன் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பொதுவாக வயல்களிலும் எலி வளை, கரையான் புற்று, கற்குவியல் போன்ற இடங்களில் இவை காணப்படுகின்றன. மற்றும் நீர்நிலைகளுக்கு அருகிலும் இவை காணப்படுகின்றன. இது இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் பாம்பு.
ஆண் பாம்புகள் தங்கள் எல்லைக்குள் மற்றவர்கள் நுழைவதை விரும்பாதவை. கட்டுவிரியன் மற்ற பாம்புகளையும் எலிகளையும் இரையாகக் கொள்கிறது. இதன் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் பாதிக்ககூடியது. மேலும் தீண்டியவுடன் தசைகளைச் செயலற்றதாக்கி விடும். பாம்பு கடித்தவுடன் ஏறத்தாழ 6-8 மணிநேரத்திற்குள் மரணம் ஏற்படலாம். மூச்சு மண்டலம் செயலிழப்பதாலேயே பொதுவாக உயிரிழப்பு ஏற்படுகிறது.
சுருட்டை விரியன் அளவில் சிறியதாக இருந்தாலும் இதன் நஞ்சு சிவப்பணுக்களை அழிக்கும் குருதி நச்சு வகையைச் சேர்ந்தது. தொல்லை செய்தால் உடன் தாக்கக்கூடியது. பெரும்பாலான இறப்புகளுக்கு சுருட்டை விரியன்களும் காரணமாகின்றன. எலிகள், பல்லி, ஓணான்கள், தவளைகள், தேள்கள் மற்றும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மலைக்காடுகளிலும், தென்காசி மாவட்டம் புளியரை மேக்கரை, கடையநல்லூர், புளியங்குடி வனபகுதியிலும் அதிகமாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே இவை வசிக்கும். நீர் நிறைந்த பகுதிகளை ஒட்டியே வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன.
காடுகளை ஆக்கிரமிக்கும் முறைகளால்இவ்வினம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. 10 அடி முதல் 13 அடி நீளம் வரை வளரும். 6 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். இவற்றில் தென் தாய்லாந்து நாட்டில் உள்ள நக்கோன்-சி-தம்மாரத் மலையில் பிடிபட்ட ஒரு பாம்பு 18.5 அடி நீளம் இருந்தது. இவை பெரும்பாலும் மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது பாசியின் பச்சை நிறத்திலான உடலில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தினாலான பட்டைகளுடன் காணப்படுகின்றன. இப்பாம்புகள் மிகப்பெரிய கண்களுடன் வட்டவடிவ கண்பார்வை கொண்டவையாகும்.பாம்புகளில் இச்செதில்களின் எண்ணிக்கையும் மற்றும் வடிவமும் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்தை வேறுபடுத்திக் கண்டறியஉதவுகிறது. இந்த நிற அமைப்பு இளம் பருவத்தில் மிகவும் சற்று வெளிச்சமாக காணப்படும். ஆண் இனம் பெண்ணை விட அதிக நீளமாகவும், தடிமனாகவும் இருக்கின்றது. இவற்றின் வாழ்நாள் 20 ஆண்டுகள்.
தவறான முதலுதவி: ஒருவரை பாம்புகடித்துவிட்டால் அவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஒருவரை பாம்பு கடித்து விட்டால், பலருக்கும் திரைப்படங்களில் பார்த்த காட்சிகள்தான் நினைவுக்கு வரும். பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்தே விஷத்தை உறிஞ்சி எடுப்பது போல் திரைப்படங்களில் காட்டப்படும்.அப்படி செய்யக்கூடாது.
பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிவது, நெருப்புவைப்பது, கத்தியால் கீறிவிடுவது இவை எல்லாமே தவறான முதலுதவிகள். பாம்பு கடித்த இடத்தில் மஞ்சள் போன்ற பொருள்களைப் பூசக் கூடாது. பாம்புக்கடிக்கு ஆளானவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவரை நடக்க வைத்து அழைத்து செல்லக் கூடாது. படுக்க வைத்தோ, உட்கார வைத்தோ அழைத்துச் செல்ல வேண்டும்.
பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. பெரும்பான்மையான பாம்புகள் விஷமற்றவையே. இந்தியாவில் உள்ள நச்சுப் பாம்புகளில் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கரு நாகம், ராஜ நாகம் போன்ற பாம்புகள்தான் ஆபத்தானவை.
கடித்த பாம்புகளுக்கேற்ப விஷக்கடிக்கு சிகிச்சை அளிக்கப்படும். விஷத்தில் இரண்டு வகை. ஒன்று, நியூரோடாக்ஸின் என்ற விஷம். இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மிகவும் ஆபத்தானது. ராஜநாகம், நல்ல பாம்பு போன்ற பாம்புகள் கடிப்பதால் இந்த வகை விஷம் உடலில் ஏறும். அரை மணி நேரத்தில் விஷமுறிவு மருந்து கொடுத்துவிட்டால், கடிபட்டவரின் உயிரைக் காப்பாற்றிவிடலாம்.
மற்றொன்று, ஹீமோடாக்ஸின் என்ற விஷம். இது, ரத்த செல்களைப் பாதித்து ரத்த உறைதலைத் தடுக்கும் அல்லது ரத்த சிவப்பணுக்களை அழித்துவிடும். கட்டுவிரியன் கண்ணாடிவிரியன், சாரைப்பாம்பு போன்ற பாம்புகள் கடித்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக பாம்புகளை தொல்லைப்படுத்தினால் மட்டுமே தங்களை பாதுகாத்துக் கொள்ள தாக்கும்'' என்றார் ஷேக் ஹுசைன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.