ரோபோ!

உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
ரோபோ!
Published on
Updated on
1 min read

உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இயந்திர ரோபோக்களும், இனப்பெருக்கம் செய்யும் ரோபோக்களும் வேறு வேறு. ஏனென்றால் இனப்பெருக்கம் செய்யும் ரோபோக்கள் ஸ்டெம் செல்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன. அளவில் மிகச் சிறியது. ஒரு மில்லி மீட்டர் அளவு கூட நீளஅகலம் இருக்காது.

இனப்பெருக்கம் செய்யும் ரோபோக்கள் மனித உடலுக்குள் பயணிக்கும். மிதக்கும்... பல வாரங்கள் உணவு ஏதுமின்றி வாழவும் செய்யும். தவளையின் ஸ்டெம் செல்லிலிருந்து "ஜெனோபோட்' என்று அழைக்கப்படும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன. ஸ்டெம் செல் தமிழில் "கரு அணு' அல்லது "குருத்தணு' என்று அழைக்கப்படுகிறது. கரு அணு, குருத்தணு என்பது அனைத்துப் உயிரினங்களிலும் உண்டு. இவை புதிய உயிரணுக்களை உருவாக்கும் திறன் கொண்டது.

தவளையின் கருவிலிருந்து சுரண்டி எடுக்கப்படும் செல்களைப் பராமரித்து இனப்பெருக்கம் செய்ய வைத்து "ஜெனோபோட்' கள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்கம் ஆனதும், அவை பிளக்கப்பட்டு தேவைக்கேற்ற மறுவடிவம் தரப்படுகிறது. அதன் பிறகு தானாகவே அந்த செல் ரோபோக்கள் செயல்படத் தொடங்கும்.

"ஜெனோபோட்'களை பிளக்கும் போது பிளவு பட்டப் பகுதிகள் தன்னைத் தானே சரி செய்து குணமாக்கிப் புதுப்பித்துக் கொள்ளும். இந்த செல் ரோபோக்கள் மருந்துகளை மனித உடலுக்குள் கொண்டு செல்ல பயன்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கதிர் வீச்சுள்ள கழிவுகளையும், கடலில் கலந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்களையும் ஈர்த்து அவற்றை செயல் இழக்க வைக்கும்.

வெர்மான்ட் , டஃப்ட், ஹார்வார்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்த "ஜெனோபோட்' ரக ரோபோக்களைக் சென்ற ஆண்டு கண்டுபிடித்தார்கள். இந்த ஆண்டு, "ஜெனோபோட்' ரக ரோபோக்களை இனப்பெருக்கம் செய்துகொள்ளும் திறன் உள்ளதாக தரம் கூட்டியுள்ளனர். தவளையின் திசு என்பதால் இனப்பெருக்கத்தில் தலைப் பிரட்டை தானே தோன்றும். உடலுக்குள் தவளையா என்று நினைக்க வேண்டாம். ஒரு "ஜெனோபோட்' டிலிருந்து பிறக்கும் இன்னொரு "ஜெனோபோட்' செல்வடிவத்திலேயே அதாவது தாய் "ஜெனோபோட்' உருவம் போலவே சிறிதாகவே இருக்கும்.

தவளைகள் தங்களது இனப்பெருக்கத்தை வித்தியாசமாக செய்து கொள்கின்றன. தவளையின் திசுக்களை கருவிலிருந்து பிரிக்கும் போது தானே வளர்ந்து பிறகு திசுக்களாக இனப்பெருக்கம் செய்து கொள்ளும் திறனையும் பெற்றுவிடுகின்றன. மனித உடல் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதில் இந்த ரக ரோபோக்கள் இனி பெரும்பங்கு வகிக்கும்.' என்று சொல்கிறார் விஞ்ஞானி மைக்கேல் லெவின். "ஜெனோபோட்' ரக ரோபோக்கள் உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் தலைமை விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com