குடும்பமே சுகாதார சேவையில்!

மதுரையை  அடுத்துள்ள காரியாபட்டியில் கிராம மக்களின் கல்வி, பெண்கள் நலம், சுகாதார விழிப்புணர்வுக்காகக்  கடந்த இருபது ஆண்டுகளாகச் சேவையாற்றி வருகிறார் அழகர்சாமி.
குடும்பமே சுகாதார சேவையில்!
Updated on
2 min read

மதுரையை அடுத்துள்ள காரியாபட்டியில் கிராம மக்களின் கல்வி, பெண்கள் நலம், சுகாதார விழிப்புணர்வுக்காகக் கடந்த இருபது ஆண்டுகளாகச் சேவையாற்றி வருகிறார் அழகர்சாமி. அவருக்கு கடந்த ஓராண்டு காலமாக புதிய பொறுப்பும் சேர்ந்து கொண்டது. ஆம்..! கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை கிராம மக்களிடையே பரப்புவதுடன், முகக்கவசம், கிருமி நாசினி, கப சுரக் குடிநீரை மக்களுக்கு வழங்கும் சேவையும் சேர்ந்து கொண்டது.

இனி அழகர்சாமி பேசுகிறார்:

""என்ன தான் செய்திப் பரிமாற்ற வேகம் ராக்கெட் வேகத்தை எட்டினாலும், கிராமப்புறங்களில் கல்வி, பெண்கள் நலம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு குறைவாகத்தான் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி கிராமமும் இதற்கு விதிவிலக்கல்ல.

காரியாபட்டி பகுதிகளில் மழை எப்போதும் அந்நியம்தான். பருவத்தில் கூட மழை பெய்யாது. அதனால், நிலத்தடி நீர் மட்டம் நாளுக்குநாள் குறைவதுடன் நீரில் சுண்ணாம்பு சத்து அதிகமாகி கிராம மக்களுக்குச் சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

தொடக்கத்திலேயே சிறுநீரகப் பிரச்னைகளைக் கண்டுபிடிக்க மதுரை, விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைகளின் சிறுநீரக சிறப்பு மருத்துவர்களை அழைத்து அவ்வப்போது இலவச மருத்துவ முகாம்களை எங்களது எஸ்.பி.எம் அறக்கட்டளை சார்பாக நடத்தி வருகிறேன்.

இதயம், கண், புற்றுநோய் தொடர்பாக அறக்கட்டளை நடத்தும் மருத்துவ முகாம்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணி புரியும் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்பார்கள். அவர்கள் மக்களைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைக்குப் பரிந்துரை செய்கிறார்கள். ரத்தம் தேவைப்படுவோருக்கு பொருத்தமான ரத்தப் பிரிவை தானமாகப் பெற ஏற்பாடுகள் செய்து வருகிறேன். இதற்குப் பக்க பலமாகத் தோளோடு தோளாக நிற்பவர்கள் கல்லூரி, பள்ளிமாணவர்கள்.

எனது அப்பா ஹோமியோபதி மருத்துவராக இருந்தார். அதனால் நான் ஆங்கில மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால் கனவு நனவாகவில்லை. மக்களுக்கு மருத்துவராகச் சேவை செய்ய முடியவில்லை. ஆனால் மக்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சேவை செய்பவராக மாறுவோம் என்று சமூக நல விரும்பியாக மாறினேன். மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினேன்.

பலவித மக்களுடன், மருத்துவர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. உடல்நலம் பேணுவதற்கு எத்தனை முக்கியத்துவம் தர வேண்டும்.

பலவித நோய்கள் குறித்த உபாதைகள், தாக்கங்கள், சுகாதாரத்தின் தேவை, விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை என்பதைப் புரிந்து கொண்டேன். அவற்றை எனது ஊரான காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடிவு செய்தேன். அதற்காக என்னால் ஆன உதவிகளைச் செய்வதற்காக "எஸ் பி எம்' அறக்கட்டளையைத் தொடங்கினேன்.

எனது மனைவி காரியாபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிகிறார். அவர் எனது செயல்பாடுகளுக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து வருகிறர். என்னால்தான் ஆங்கில மருத்துவர் ஆக முடியவில்லை.

மூத்த மகனை மருத்துவராக்கலாம் என்று ஆங்கில மருத்துவம் படிக்க வைத்தேன். மருமகளும் ஆங்கில மருத்துவர் தான். அவரும் தனது சேவையைத் தொடங்க உள்ளார். அறக்கட்டளையின் சார்பாக நடத்தும் மருத்துவமனையில் ஏழைகளுக்குக் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

எனது அறக்கட்டளையின் சேவைகளைப் பாராட்டிப் பல விருதுகளைப் பல சமூக நல அமைப்புகள் வழங்கியிருந்தாலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2019 -இல் பாராட்டி விருது வழங்கியது, எனது அறக்கட்டளைக்கு அங்கீகாரமாக அமைந்திருக்கிறது. அதில் கிடைத்த உற்சாகம்தான் கரோனா காலத்தில் நோய் அபாயத்தைத் தள்ளி வைத்து மக்கள் சேவை செய்யும் ஊக்கத்தைத் தந்தது'' என்கிறார் அழகர்சாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com