கலைமகளின் கைப்பொருள்!

வீணை என்றாலே நினைவுக்கு வருவது கல்விக் கடவுளான சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணைதான்..!
கலைமகளின் கைப்பொருள்!
Updated on
2 min read

வீணை என்றாலே நினைவுக்கு வருவது கல்விக் கடவுளான சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணைதான்..!

வீணையின் தலைநகர் தஞ்சாவூர். அங்குதான் வீணைகள் பல நூற்றாண்டு காலமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பாரம்பரிய கலைப்பணியை முப்பத்தைந்து ஆண்டுகளாக செய்து வரும் சிற்பி ராஜேந்திரன் வீணைகள் உருவாக்கப்படுவது குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்:


""எங்கள் குடும்பம் பல தலைமுறைகளாக வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. எனக்கு வீணை செய்வதில் 35 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. உதவிக்கு 4 கலைஞர்கள் இருக்கிறார்கள். இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் ஆசாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

வீணையைத் தொடக்கத்தில் அத்தி மரத்தில் செய்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. சுமார் நூறு ஆண்டுகளாக பலா மரத்தில்தான் வீணை உருவாகிறது. நன்கு விளைந்த சுமார் 40 ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுள்ள பண்ருட்டி பலா மரங்களிலிருந்துதான் வீணைகளைச் செய்கிறோம். ஒரு பலா மரத்திலிருந்து மூன்று அல்லது நான்கு வீணைகள் வரை செய்யலாம். பலா மரத்தை 5 அடி நீள மர உருளைகளாக அறுத்து எடுத்து, மரத்தை அறுக்கும் இடத்திலேயே கோடரியால் வெட்டி, கொத்தி கரடு முரடான வீணை வடிவத்தில் மர உருளையை மாற்றுவார்கள்.

அப்போது வீணையின் மரப் பகுதியின் பருமன் இரண்டு அங்குலமாக இருக்கும். அதை எங்கள் பட்டறைக்குக் கொண்டு வந்து குடைந்து இழைத்து, உப்புத்தாள்களைக் கொண்டு தேய்த்து தேய்த்து கால் அங்குல பருமன் அளவுக்கு கொண்டுவர வேண்டும். பருமன் குறைய குறைய இசையின் அதிர்வுகள் வலிமையாகவும் துல்லியமாகவும் அமையும். வீணையின் குடம், தண்டு பகுதியில் உள்ளே இருக்கும் "காலி இடம்' தெரியாத மாதிரி கால் அங்குல தடிமனுள்ள பலா பலகை வைத்து மூடுவோம். அப்போதுதான் அடிப்படை அளவில் வீணை வேலைகள் நிறைவாகிறது.

வாடிக்கையாளர் விரும்பும் கடவுள் படத்தை வீணையில் செதுக்கி அதில் "ஜெர்மன் சில்வர்' என்னும் உலோகத்தாளை பதிப்போம். வீணைக்கு பாலிஷ் பூச்சு கொடுப்போம். மெட்டு, பிருடை, லங்கர், மேரு, குதிரை, மேல் ரேக், பக்க ரேக், "குப்பி, "குமிழி, வளையம், மெழுகு, போன்றவற்றை வீணையில் பொறுத்துவோம்.

பிறகு வீணையில் தந்திகளை (கம்பிகள்) இணைப்போம். வீணை ரெடி. முப்பதாயிரத்திலிருந்து இரண்டு லட்சம் வரை வீணை விற்கப்படுகிறது. இதுவரை சுமார் 5000 வீணைகள் தயாரித்துக் கொடுத்திருக்கிறேன். தஞ்சை வீணை உலக அளவில் பிரசித்தி பெற்றது. மத்திய அரசு இந்தக் கலைப் பொக்கிஷத்திற்கு, "புவிசார் குறியீடு' வழங்கி தஞ்சாவூரைக் கெளரவித்துள்ளது. பலர் வீணையை மீட்டத் தெரியாவிட்டாலும், வீட்டில் காட்சிப் பொருளாக வீணையை வைக்கிறார்கள். வெளிநாடுகளுக்கும் வீணைகள் ஏற்றுமதி ஆகின்றன.

தஞ்சாவூர் வீணைகளில் "ஏகாந்த வீணை', "ஒட்டு வீணை' என்று இரண்டு வகை வீணைகள் உண்டு. இணைப்பு இல்லாமல் ஒரே பலா மரத்தடியில் செய்யப்படும் வீணை "ஏகாந்த வீணை' என்று அழைப்பார்கள். மூன்று மரத்துண்டுகளில் குடம், தந்திகள் பொருத்தப்படும் தண்டு, யாழி (யாளி) பகுதிகளை செதுக்கி இணைப்பதை "ஒட்டு வீணை' என்பார்கள். நான் மடக்கும் வீணையை வடிவமைத்திருக்கிறேன். ஒட்டு வீணையின் பாகங்கள் ஒட்டப்பட்டு விடுவதால் அதை மடக்கி வீணையின் நீளத்தைக் குறைக்க முடியாது. மடக்கும் வீணையில் வீணையின் நாலே கால் அடி நீளத்தை இரண்டு அடியாக குறைக்க முடியும். பயணத்தின் போது வீணையை மடக்கி பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். இந்த மூன்று வீணைகளும் இசையில் எந்த வித மாற்றத்தையும் தராது. என்றாலும் ஏகாந்த வீணைக்குத்தான் வரவேற்பு அதிகம்.

வீடுகளில் அலுவலகங்களில் காட்சிப் பொருளாக வைக்க யாழ்களையும் வடிவமைத்து வருகிறேன். ஒரு வாரத்திற்கு முன்பு கரூரில் இருப்பவருக்கு மயில் யாழ் செய்து வழங்கியுள்ளேன். நான்கு அடி உயரமும் இரண்டு அடி அகலமும் கொண்ட மயில் யாழுக்கு 40,000 ரூ ஆனது. இந்த யாழ்களை வாசிக்க முடியாது. அழகுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்குத் தொடர்ந்து வீணையை உருவாக்கி அனுப்பிக் கொண்டு வருகிறோம்.

தஞ்சாவூரில் பல நூறு கலைஞர்கள் வீணைகள் செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். இப்போது வெறும் முப்பது நாற்பது கலைஞர்கள் மட்டுமே உள்ளனர். எனக்கு வயது 62 .

எனது மகன் இந்தத் தொழிலுக்கு வரவில்லை. ஆனால் நான் பல சிஷ்யர்களை உருவாக்கியிருக்கிறேன். வீணை கைவினைஞர்கள் குறைந்து விட்டதாலும் வீணை உற்பத்திக்காக வரும் ஆர்டர்கள் மட்டும் குறையவில்லை.

வீணைகளைச் உருவாக்கும் கலைஞர்கள் பலரும் வீணையின் ஒரு பகுதிதான் செய்வார்கள். முழுமையாக வீணையைக் குடம் முதல் யாளிவரை நிறைவு செய்யத் தெரிந்த கலைஞர்கள் நான்கு அல்லது ஐந்து பேர் தான் இருக்கின்றோம். என்னிடம் தொழில் கற்றவர்களுக்கு இந்தக் கலையை நுணுக்கமாகக் கற்றுக்கொடுத்து இருக்கின்றேன். அவர்கள் என் பெயர் சொல்வார்கள். அந்த அளவுக்கு நிறைவு அடைகிறேன்'' என்கிறார் வீணை சிற்பி ராஜேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com