பயணங்களே வாழ்க்கை!

இந்தியாவைச் சுற்றிக் காண்பிக்கும் பெற்றோரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? பெங்களூரைச் சேர்ந்த ஜெயுன் லோபோ - அவின் பைஸ்தான் அந்த வித்தியாசமான தம்பதியர்.
பயணங்களே வாழ்க்கை!
Updated on
2 min read

இந்தியாவைச் சுற்றிக் காண்பிக்கும் பெற்றோரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? பெங்களூரைச் சேர்ந்த ஜெயுன் லோபோ - அவின் பைஸ்தான் அந்த வித்தியாசமான தம்பதியர்.

"பள்ளியில் கற்றுத் தர முடியாத விலை மதிக்க முடியாத வாழ்வியல் பாடங்களை, இந்திய நகரங்களின், சின்ன சின்ன ஊர்களில் அவற்றை இணைக்கும் சாலைகளில் எனது குழந்தைகள் கற்றுக் கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்..' என்ற பீடிகையுடன் ஜெயுன் தொடங்கினார்.

""எல்லாக் குழந்தைகளுக்கும் நான்கு சுவர்களுக்குள் இருக்கும் வகுப்பறையில் கரும்பலகை மூலம்தான் எழுத்துக்களும், எண்களும் அறிமுகம் செய்து வைக்கப்படும். நாங்கள் நடத்திய பயணங்களால், எட்டு வயதாகும் எனது இரட்டைக் குழந்தைகளான ஏதன், எலினா வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும் எண் பலகையிலிருந்து தான் எண்களைக் கற்றார்கள். ஊர்களில் நகரங்களில் நுழையும் முன் பார்க்கும் பெயர்ப்பு பலகையிலிருந்து எழுத்துக்களைக் கற்றார்கள். வாகனங்களின் எண் பலகையிலிருந்து அந்த வாகனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது என்ற புரிதலையும் வளர்த்துக் கொண்டார்கள்.

கல்வி பள்ளியில் மட்டுமே கற்க முடியும் என்று நானும் மனைவி அவினும் நம்பவில்லை. பயணம் மூலமாகவும் கல்வி கற்க முடியும் என நம்புகிறோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெங்களூருவிலிருந்து குஜராத்தின் கட்ச் வரை நீண்ட பயணம் மேற்கொண்டோம். முன் பின் தெரியாதவர்களின் அறிமுகம் கிடைத்த போது அவர்களுடன் தங்கினோம். வயல்களில் கூடாரம் அடித்து தங்கினோம். குன்றுகளில் இரவுகளைக் கழித்தோம். ஒரு திட்டம் இல்லாமல் பயணித்தோம். பயணம் எனது குழந்தைகளுக்குப் பாடப் புத்தகமானது.

ஏதனுக்கு எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் நாட்டம் அதிகம். எலினாவுக்கோ கலை மற்றும் உடல் பயிற்சியில் ஆர்வம். இவற்றை நாங்கள் அடையாளம் கண்டு கொண்டு அவர்களது ஆர்வம் தொடர்பான காணொளிகள், புத்தகங்கள், வலைதளங்கள் மூலம் கற்பிக்கிறோம். வழி காட்டுகிறோம். பிறகு எதற்கு பயணம் என்று கேள்வி எழுகிறதல்லவா?

நாம் எதை விரும்புகிறோமோ அதை ஓய்வு பெற்ற பிறகு செய்து கொள்ளலாம் என நினைக்கிறோம். ஆனால் பின்னாளில் பலருக்கும் வயோதிகம், குடும்ப பொருளாதாரப் பிரச்னைகளால் அப்படி வாழ முடிவதில்லை. இளமைக்கால விருப்பம் கடைசி வரை கனவாகவே இருந்துவிடுகிறது. வாழும் போது பல சமரசங்களை செய்ய வேண்டியுள்ளது. பலவற்றைத் தியாகம் செய்ய வேண்டியுள்ளது.

அப்படிப்பட்ட வாழ்க்கை தேவையா என்று நாங்கள் நினைத்தோம். விளைவு... அவின் தனது 32-ஆவது வயதில் தனது வேலையையும் விட்டுவிட்டார். நண்பரின் பண்ணை வீட்டில் வாழத் தொடங்கினோம். பிறகு கப்பலில் அனுப்பப்படும் பழைய ஆனால் பிரம்மாண்ட கண்டெய்னர்களில் வாழ்க்கை தொடர்ந்தது. விறகைக் கொண்டு சமைக்கக் கற்றுக் கொண்டோம். கிடைத்ததைப் புசிக்கப் பழகினோம். நாங்கள் சமையலில் ஈடுபட்டிருக்கும் போது, எங்களை போன்ற வெளிநாட்டில் இயந்திரகதி வாழ்க்கையிலிருந்து விலகி நிற்பவர்களுடன் குழந்தைகள் உரையாடுவார்கள்.

அதனால் சில புதிய மொழிகள் கற்றுக் கொண்டார்கள். அதனால் நகர வாழ்க்கை வேண்டாம் என்று அனைவரும் தீர்மானித்துவிட்டோம். 2019-இல் பெங்களூரில் எங்களிடம் இருந்ததை எல்லாம் விற்றோம். பெங்களூரிலிருந்து மங்களூருக்கு மாறி எனக்கு சொந்தமான பண்ணையில் களிமண் வீட்டைக் கட்டி வசிக்க ஆரம்பித்தோம். 2020-இல் கரோனா பேரிடர் வீட்டுக்குள் வாசம் என்றாக்கிவிட்டது. சில ஆண்டுகளாகவே பயணம் போவது வழக்கம் ஆகிவிட்டதால், கரோனாவால் வீட்டுக்குள் அடைந்து கிடந்தது மூச்சை முட்டச் செய்தது. கரோனா தீவிரம் குறைந்ததும் பயணத்தைக் தொடங்கினோம்.
"ஜனவரி 2021-இல் கட்ச் வரை சென்று வரலாம் என்று கிளம்பினோம். இன்ஸ்ட்டாகிராமில் எங்கள் பயணத்தைக் பற்றி செய்தி போட்டோம். எங்கள் அலைவரிசையில் இருக்கும் பலர் எங்களை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்கள். நாங்கள் தனி மரமாகிவிடவில்லை. எங்களைப் போன்றவர்களும் வாழ்க்கையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்ந்தோம்.

வழியில் அழகான இடங்களை, ஊர்களை, பாலங்களை, அருவிகளை, பழப் பண்ணைகளை, கடற்கரைகள், அணைகளைக் சுற்றி பார்த்து ஆற அமர பயணித்தோம். பெட்ரோல் நிலையங்கள், கோயில் அருகில் என்று கூடாரம் அடித்துத் தங்கினோம். நண்பர்கள் வீடுகளிலும், ஹோட்டல் அறைகளிலும் சில நாள்கள் தங்கினோம். சூரத்தில் காந்தி ஆசிரமத்தில் சில நாள்கள் தங்கும் வாய்ப்புக் கிடைத்தது.

கட்ச் சென்று திரும்பும் வழியில் ஏப்ரல் மாதத்தில் கரோனாவின் இரண்டாம் அலை மஹாராஷ்டிராவைப் பற்றிக் கொண்டது. முழு ஊரடங்கு எப்போதும் வரலாம் என்ற நிலைமையைப் புரிந்து கொண்டு நேராக பெங்களூர் வந்து சேர்ந்தோம். பள்ளி, நகர வாழ்க்கைக்கு விடை கொடுத்து விட்டோம்... அடுத்தப் பயணத்திற்குத் தயாராகி வருகிறோம்'' என்கிறார் ஜெயுன் லோபோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com