தேங்காய் நார் புரட்சி!

""இந்திய தென்னை மரத்தின் விளை பொருளான தேங்காயின் நார்க்கழிவிற்கு வெளிநாடுகளில் பலத்த வரவேற்பு!
தேங்காய் நார் புரட்சி!
Updated on
3 min read


""இந்திய தென்னை மரத்தின் விளை பொருளான தேங்காயின் நார்க்கழிவிற்கு வெளிநாடுகளில் பலத்த வரவேற்பு! இந்தியாவிலிருந்து டன் கணக்கில் வெளிநாடுகளுக்கு தேங்காய் நார்க் கழிவுகள் ஏற்றுமதியாகிறது. விவசாய உலகில் "மண் இல்லாமல் வேளாண்மை' குறித்து இந்தியாவில் இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டாலும், வெளிநாடுகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே "மண் இல்லாமல் வேளாண்மை'யைத் தொடங்கிவிட்டார்கள். நாம் ஐம்பது ஆண்டுகள் பின் தங்கி உள்ளோம்'' என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த செந்தில். சுமார் 20 ஆண்டுகளாக தேங்காய் நார்க் கழிவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவரும் செந்தில் அடிப்படையில் எந்திரவியல் பொறியியல் பட்டதாரி.

செந்தில் தொடர்கிறார்:

""தேங்காயின் தங்கம் என்று சொல்வது தேங்காயை உரிக்கும் போது கிடைக்கும் நார்களில், (சவுரி) ஒட்டிக் கொண்டிருக்கும் மென்மையான துகள்கள்தான் கழிவு. பொதுவாக தேங்காயை உரித்தால் கிடைக்கும் அனைத்துமே கழிவாகத்தான் கருதப்படுகிறது. கயிறு தயாரிக்கும் இடங்களில் தேங்காயை மூடியிருக்கும் நார்களைத் பிரித்து எடுத்து கயிறாகத் திரிப்பார்கள். இந்த நார்களை இர்ஸ்ரீர்ய்ன்ற் ஊண்க்ஷழ்ங் வஹழ்ய் என்பார்கள். அப்படி நார்களைத் தனியாக எடுக்கும் போது உதிரும் மென்மையான துகள்களைக் கழிவாக ஓரிடத்தில் கொட்டுவார்கள். இந்தத் துகள்களை ‘இர்ண்ழ் டண்ற்ட்' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

துகள்கள் குவியலாகி, பெரிய மேடாகும் போது தீயிட்டு கொளுத்துவார்கள். அதுதான் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நடந்து வந்தது. சுருக்கமாகச் சொன்னால், 2000 வரை இந்த "காயர் பித்' என்கின்ற, தேங்காய் நார்க்கழிவின் பயன்பாடு குறித்து தமிழகத்தில் ஏன் இந்தியாவில் யாருக்குமே தெரியாது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தத் தேங்காய் நார்க் கழிவுகளை இங்கிருந்து எடுத்துச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டது. இந்தக் கழிவுகளை, மண்ணுக்குப் பதிலாகப் பயன்படுத்தி, பயிர்களை விளைவிக்கலாம்; அதுவும் குறைந்த அளவு தண்ணீரில் பன்மடங்கு விளைச்சல் பெறலாம் என்பதை அனுபவபூர்வமாக அறிந்து கொண்டார்கள். இந்தக் கழிவுகளில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்றவற்றுடன் நீர் அல்லது சாணக் கரைசலை அளவுடன் தெளித்து மக்கச் செய்து அவற்றின் வீரியத்தைக் குறைத்து, கரிசல் மண் போலான இந்த உரம் உதிரியாகவும் கிடைக்கும். "குரோ பேக்'களில் வைத்து விற்கப்படும் "மண்' இந்த "காயர் பித்' தான். "காயர் பித்'தை மக்கச் செய்யாமல் பெரிய சிறிய செவ்வக, சதுர கட்டிகளாக மாற்றி அவற்றில் பயிர்களை விளைய வைக்கின்றார்கள்.

தமிழகத்தில் தேங்காய் நார்க்கழிவுகளை சாலை ஓரங்களில் போட்டு எரிப்பது, சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு என்பதால், கெடுபிடிகள் அதிகமாகி அபராதம் போடும் அளவுக்குப் போக, கழிவுகளை என்ன செய்வது? எங்கே கொண்டு போய்க் கொட்டுவது?..என்று திகைத்துக் கொண்டு இருந்த தேங்காய் விவசாயிகளிடம், கழிவுகளை என் நிலத்தில் கொண்டு வந்து கொட்டுங்கள் என்று சொல்ல... அப்பாடா.. தலைவலி தீர்ந்தது என்று பெரு மகிழ்ச்சியுடன் கழிவுகளைக் கொண்டு வந்து எனது நிலத்தில் கொட்டினார்கள். அப்படிக் கொட்டுவதற்கு, ஒரு டிராக்டருக்கு 200 ரூபாய் கட்டணமாகவும் எனக்கு கொடுத்துவிட்டுப் போனார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. இப்போது, நார்களை பிரித்து எடுக்கின்ற ஒரு சிறு தொழிற்கூடத்தில் இருந்து, தேங்காய் நார்க் கழிவுகளைப் பெற ஐந்து லட்சம் ரூபாய் முன்பணம் கொடுக்க வேண்டும். அது தவிர, ஒரு டிராக்டர்கழிவுக்கு 12ஆயிரம் ரூபாய் கட்டணம் நான் செலுத்த வேண்டும். அதுவும், அவர்கள் சொல்லுகின்ற நேரத்தில் அங்கே சென்று, அள்ளிக்கொண்டு வர வேண்டும். தவறினால், வேறு போட்டியாளர்கள் அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். அந்த அளவுக்குத் தேவை, போட்டிகள் பெருகி, தேங்காய் நார்க் கழிவு தங்கத்திற்கு நிகரான விலைமிக்கப் பொருளாக மாறிவிட்டிருக்கிறது.

எதிர்காலத்தில், பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்காமல் பயிர் விளைவிக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் அது தேங்காய் நார்க்கழிவுகளில் மட்டும்தான் சாத்தியம் ஆகும். இன்று, இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சில தெற்கு ஆசிய நாடுகளைத் தவிர, சீனா உட்பட அனைத்து நாடுகளிலும், தேங்காய் நார்க் கழிவுகளில்தான் விவசாயம் பெருமளவில் நடைபெறுகின்றது. ஐரோப்பா நாடுகள், ஜப்பானில் விளைநிலங்களின் மீது பசுமைக் குடில்கள் அமைத்து விதையை ஊன்றி, அது முளைப்பதற்குத் தேவையான பருவநிலையை ஏற்படுத்தி, எந்த விதையாக இருந்தாலும், அதை முளைக்க வைத்து விடுவார்கள். அப்படி முளைக்க வைப்பதற்குப் பயன்படுத்துகின்ற "மண்'தான் இந்தத் தேங்காய் நார்க் கழிவுகள்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இப்போது பெரும்பாலும், "காயர் பித்' விவசாயம்தான் நடைபெறுகிறது.

தேங்காய் நார்க் கழிவின் சிறப்பு என்னவென்றால், ஒரு கிலோ "காயர் பித்', 15 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி உள்வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளும். அந்தத் தண்ணீரை, அதில் இருந்து நீங்கள் பிரித்து எடுக்கவே முடியாது. எனவே, அதில் செடிகள் விளைவதற்கு, நீங்கள் கூடுதலாகத் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய தேவை மிகமிகக் குறைவு. தேங்காய் நார்க் கழிவுகளை மண்ணில் கலந்தால், மண் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். சாதாரண விளை நிலத்தில், பத்து ஆயிரம் சதுர அடியில், பத்து ஆயிரம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி, 100 கிலோ தக்காளியை விளைய வைக்கிறோம் என்றால், இந்தக் காயர் பித்தைப் பயன்படுத்தி, 1000 சதுர அடியில், வெறும் 100 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 1000 கிலோ தக்காளி விளைய வைக்கும் மாயாஜாலத்தை நடத்தலாம்.

தலைநகர் சென்னையில் மட்டும், "காயர் பித்' ஏற்றுமதி செய்கின்ற 120 நிறுவனங்கள் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல; தென்னிந்தியா முழுவதும் இந்தத் தொழில் வேகமாகப் பரவி விட்டது. கடந்த ஆண்டில் மட்டும், "காயர் பித்' ஏற்றுமதி மூலம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பணம் 1200 கோடி. இந்த ஆண்டு, அதை விட உயரும்.

"காயர் பித்' உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நான் மட்டுமே, 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றேன். தாத்தா, அப்பா விவசாயி. அந்த வழியில் நானும். இப்போது இந்தத் தொழிலுக்கு, அரசு 75 விழுக்காடு மானியம் தருகிறது. இந்தத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து இருக்கின்றோம். அதற்கு நான்தான் பொருளாளர். நம்மிடம் இருந்து வாங்கிய காயர் பித்தில் அவர்கள் என்னென்ன மாறுதல்கள் செய்கின்றார்கள் என்பதையும் நேரில் பார்த்தேன். நமது நாட்டு இயற்கை வேளாண்மை குறித்து, அவர்கள் என்னிடம் ஆர்வமாகக் கேட்பார்கள். நானும் சொல்லுவேன். டன் கணக்கில் தேங்காய் நார்த் கழிவுகளை நாம் ஏற்றுமதி செய்தாலும், இந்தக் கழிவைப் பயன்படுத்தி பெரிய அளவில் விவசாயம் செய்ய நாம் முனைப்பு காட்டவில்லை என்பது வருத்தமான விஷயம்.

எனது நிலத்தில், யூரியா பயன்படுத்துவது இல்லை. யூரியா போட்டு விளைவித்த மஞ்சள், குவிண்டாலுக்கு 6500 ரூபாய் கிடைக்கின்றது. எனது நிலத்தைப் பற்றி வணிகர்களுக்குத் தெரியும். எனவே, எங்களுக்கு, குவிண்டாலுக்கு ரூ 13 ஆயிரம் தருகின்றார்கள் செயற்கை உரங்களால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மட்டும்தான் கூடுதல் விளைச்சல் பெற முடியும். அதன்பிறகு, அந்த மண் முழுமையாகக் கெட்டு விடுகின்றது. அதன்பிறகு, நீங்கள் என்னதான் மருந்து உரம் போட்டாலும், அதே விளைச்சல்தான் கிடைக்கும். கூடுதலாக எதிர்பார்க்க முடியாது.

பாலைவன துபாயில், அபுதாபி செல்கின்ற வழியில், "எமிரேட்ஸ் ஆர்கானிக் புராடக்ட்ஸ்' என்ற நிறுவனத்திற்குச் சென்றேன். அந்த ஒரு நிறுவனத்தில் மட்டும், காயர் பித் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு, 1200 கிலோ தக்காளி விளைவித்து, அமீரகக் கூட்டு அமைப்பில் உள்ள ஆறு நாடுகளுக்கும் அனுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.

தேங்காய் நார் கழிவுகளில் இருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதத்தை குறைப்பதற்கும், லிக்னின் மற்றும் செல்லுலோஸ் அளவை குறைப்பதற்கும், தேங்காய் நார்க்கழிவானது மக்க வைக்கப்படுகிறது. இவ்வாறு மக்கச் செய்வதால் உரச்சத்து அதிகரித்து, அதிலுள்ள சத்துக்களை தாவரங்கள் எளிதாக உறிஞ்சிக் கொள்ளும் வகையில் மண்ணை தேங்காய் நார் கழிவு பக்குவப்படுத்துகிறது. ரசாயன உரங்களை மண்ணில் கலக்க தயங்காத நம்மவர்கள் இயற்கை உரமான காயர் பித்தை நிலத்தில் சேர்க்கத் தயங்குகிறார்கள்'' என்கிறார் செந்தில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com