இசை கிராமம்

கேரளம் பாலக்காடுக்கு அருகில் இருக்கும் "பெருவெம்பா' கிராமத்திற்கு "இசை கிராமம்' என்ற செல்லப் பெயருண்டு. காரணம்...
இசை கிராமம்
Updated on
2 min read

கேரளம் பாலக்காடுக்கு அருகில் இருக்கும் "பெருவெம்பா' கிராமத்திற்கு "இசை கிராமம்' என்ற செல்லப் பெயருண்டு. காரணம்... இந்த ஊரிலிருந்துதான் இசைக்கருவிகளான மிருதங்கம், தபேலா, மத்தளம் ஆகியவை, பல தலைமுறைகளாக இந்தியாவிற்கும், வெளிநாடுகளுக்கும் செல்கிறது.
இசையை சுவாசித்து இசையையே வெளிவிடும் "பெருவெம்பா'வுக்குள் நுழைந்ததுமே... பல திசைகளிலிருந்து காம்போஜி, (ஹனுமத்)தோடி, மலஹரி, ராகங்களில் மிருதங்கம் முழங்கும் தாள, லயம் காதுகளில் இசையின் தேன் மழையாகப் பொழியும். தரப் பரிசோதனைக்காகப் புதிதாக உருவாக்கிய மிருதங்கங்களை இசைத்துப் பார்ப்பார்கள்.
மிருதங்கம் தயாரிப்பில் காசுமணி என்பவரின் பெயர் மிகவும் பிரசித்தம். காசுமணி மூன்றாவது தலைமுறை கைவினைஞர். முதுகலை பட்டதாரியான மகன் ராஜேஷும் நான்காம் தலைமுறை கைவினைஞராக மிருதங்கம் உருவாக்கும் தொழிலுக்கு வந்து விட்டார்.
கோவையைப் பூர்விகமாகக் கொண்ட "மிருதங்க பிரம்மா' காசுமணி மனம் திறக்கிறார்:
""மிருதங்கத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்காகக் கையாளும் இரண்டு வகை மிருதங்கம் உண்டு. பெண்களுக்காக வாசிக்கப் பயன்படுத்தும் மிருதங்கம் 18 முதல் 22 அங்குலம் வரை நீளம் இருக்கும். 24 முதல் 26 அங்குலம் வரை நீளம் கொண்டது.
விரல்களால் தட்டி ஒலி எழுப்ப, மிருதங்கத்தில் இருபுறத்திலும் தலா மூன்று அடுக்கு தோல் வட்டங்கள் பொருத்தப்படுகின்றன. நடுவில் உள்ள தோலில் சுரத்திற்காகவும், தெளிவான ஒலிக்காகவும் கருப்பு வட்டம் ஒன்றை வரைவோம். பிரத்யேக கருப்புக் கற்களைத் தூளாக்கி, சோற்றுடன் கலந்து தோலில் பூசுவோம். இதற்கு "மஷியிடல்' (மை இடுதல்) என்பார்கள். இந்தக் கலவையில் மிச்சமாகக் கிடைக்கும் கப்பித் துகள்களை முதல் தோலுக்கும் இரண்டாம் தோலுக்கும் இடையில் பரப்பி வைப்போம்.
கன கம்பீரமான துல்லிய தாள ஒலிக்கு இந்தக் கப்பிகள் அதிர்ந்து உதவும். இதைக் "கப்பி' மிருதங்கம் என்பார்கள். காரைக்குடி மணி (அய்யர்) பயன்படுத்தியது கம்பீர ஒலி எழுப்பும் "கப்பி' மிருதங்கம். மிருதங்கத்தைத் தட்டினால் விருப்பப்படும் சுதி, லயம் கிடைக்க தோலை இழுத்துக் கட்டியிருக்கும் தோல்கயிறுகளின் இடையில் சிறு மரத் துண்டை செருகுவார்கள். இப்போது சிறு மரத் துண்டுகளுக்குப் பதிலாக "நட்டு போல்ட்டு' வைத்து தாங்களாகவே டியூன் செய்யும் மிருதங்கங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டது.
மிருதங்கம் செய்ய 30 ஆண்டுகள் வயதான பலா மரத்தைப் பயன்படுத்துவோம். அதற்காகப் பொருத்தமான மரங்களைப் பண்ருட்டியிலிருந்து வரவழைக்கிறோம். மரத்தைப் பல துண்டுகளாக அறுத்து இரு பக்கமும் துளைகள் வருமாறு குடைந்து எடுப்போம். முதலில் உளியால் குடைவோம். இப்போது கருவிகள் புழக்கத்திற்கு வந்திருப்பதால் குடைவது எளிதாகிவிட்டது. மிருதங்கம், தப்லா, மத்தளம், செண்டை போன்ற தாள இசைக்கருவிகளை நாங்கள் உருவாக்கினாலும், அதிகம் செய்வது மிருதங்கம் தான். இந்த ஊரில் மட்டும்தான் மிருதங்கம் உருவாக்கப்படுகின்றன. இந்தத் தொழிலில் சுமார் முப்பது குடும்பங்கள் ஈடுபட்டிருக்கின்றன. எல்லா வேலைகளும் முடிந்த மிருதங்கத்தை எடை 9 முதல் 12 கிலோ வரை இருக்கும். விலை 15000 முதல் 20000 ரூ வரை.
ஆண்டிற்கு சுமார் ஐம்பது அறுபது மிருதங்கங்கள் செய்து வந்தோம். கரோனா வந்ததிலிருந்து கச்சரிகள் நடப்பதில்லை. இசைப்பள்ளிகளும் நடப்பதில்லை. அதனால் மிருதங்கத்தின் தேவை சட்டென்று குறைந்துவிட்டது. எங்களுக்கு முகவரியையும் அடையாளத்தையும் மிருதங்கம் கொடுத்திருக்கிறது. அதனால் எனது குடும்பம் தொடர்ந்து மிருதங்க தயாரிப்பில் ஈடுபடும்'' என்கிறார் காசுமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com