தூக்கம் வர என்ன செய்யலாம்?

படுத்த நில நிமிடங்களிலேயே தூங்கிப்போவது ஒரு வரம்.
தூக்கம் வர என்ன செய்யலாம்?
Updated on
2 min read

படுத்த நில நிமிடங்களிலேயே தூங்கிப்போவது ஒரு வரம். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. சிலருக்கு படுத்த பின்னரும்,  நீண்ட நேரத்திற்குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100.... 200..... 300 வரை எண்ணத் துவங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. 

இப்படி எண்ணுவதற்கு "கெளண்டிங் ஷீப்' என்று பெயர்.

இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது என்கிறது ஓர் ஆய்வு. அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம். சுவாரஸ்யமாக, இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள். 

உதாரணமாக கிரீச்சிடும் பறவைகளின் ஒலிகள். மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுபவையாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவற்றுக்கெல்லாம் மேலாக, இருக்கவே இருக்கிறது பழைமையான ஒரு முறை. அது தான் புத்தகம் படிப்பது. இதுவும் தூக்கத்தை வரவழைக்கிற விஷயங்களில் முக்கியமானது தான். 

துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிபோகிறவர்களும் இருக்கிறார்கள். விசித்திரமாக, கடிகாரத்தின் டிக் டிக் ஒசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம், வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. 

தூங்குவதில் பல ரகம் உண்டு. சிலர் அடித்து போட்டது போல் தூங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர். குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம். பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. 

அமெரிக்க மருத்துவ அமைப்பு ஒன்று தூக்கம் குறித்து மேற்கொண்ட ஆய்வில், வாரம் முழுவதும் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது, நீண்ட நாள்கள் குறைவான நேரமே தூக்கம் மேற்கொள்வது ஆகியவற்றால் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அளவு குறைவதாக தெரியவந்துள்ளது. இந்த ஹார்மோன் குறைவால், தாம்பத்ய ஆர்வமும் குறைந்து விடுமாம். மேலும், தசைகளில் தளர்ச்சி, வலுவிழந்த எலும்புகள், ஆற்றல் குறைந்து போதல் மற்றும் கவனமின்மை ஆகியவை ஏற்படும் என்றும், மேலும், இதனால் வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் ஏற்பட்டு இருதய வியாதிகள், ஸ்ட்ரோக் மற்றும் டையாபடீஸ் 2 ஆகியவையும் ஏற்படுகின்றன என்றும் அந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளளது.  

குறைந்த அளவு தூக்கம் உடைய மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் நெப்ரஸ்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சமந்தா கிளின்கின்பியர்டு மற்றும் சக ஆய்வாளர்கள் 14 ஆயிரத்து 382 மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் ஆய்வு நடத்தினர். அவர்களில் பாதி பேர் ஆண்கள் மற்றும் மீதி பேர் பெண்கள். மேலும் அவர்களில் 63.5 சதவீதத்தினர் வெள்ளை நிறத்தவர்கள். அந்த ஆய்வில், 8 முதல் 10 மணி நேரம் வரை தூக்கம் கொண்ட மாணவர்கள் சாதாரணமாக நடந்து கொள்கின்றனர். ஆனால் 7 மணி நேரம் மற்றும் அதற்கு குறைவாக தூக்கம் கொண்ட மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபாடு நிறைந்தவர்களாக காணப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com