காலடிகளுக்கு  கீழும் வரலாறு !

விழுப்புரம் மாவட்டத்தில்  புராதன  சின்னங்கள்  எங்கும்  பரவிக் கிடக்கின்றன. தமிழர் நாகரிகத்தின் வேர்களைத் தேடி  ஊர் ஊராக    நண்பர்களுடன் சுற்றி வருபவர்  விழுப்புரத்தைச் சேர்ந்த செங்குட்டுவன்.
காலடிகளுக்கு  கீழும் வரலாறு !
Updated on
3 min read

விழுப்புரம் மாவட்டத்தில் புராதன சின்னங்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. தமிழர் நாகரிகத்தின் வேர்களைத் தேடி ஊர் ஊராக நண்பர்களுடன் சுற்றி வருபவர் விழுப்புரத்தைச் சேர்ந்த செங்குட்டுவன்.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சுமார் எட்டு ஆண்டுகளாக தமிழ் கலாசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் செங்குட்டுவன். தனது கண்டுபிடிப்புகள், பதிவுகள் குறித்து மனம் திறக்கிறார்:

""விழுப்புரம் மாவட்டத்தில் தமிழர் கலாசாரத்தின் சிதறல்கள் கிடைப்பது போல் ஏனைய மாவட்டங்களில் கிடைக்கும் என்பது சந்தேகம்தான்..! பழைமைச் சின்னங்களைத் தேடும் பயணங்களின் மூலமாக பல புதிய கண்டறிதல்கள் ஆச்சரியத்தைத் தருகின்றன. அனுபவங்களாகியிருக்கின்றன.
செ.கொத்தமங்கலம், எஸ்.மேட்டுப்பாளையம் மற்றும் பரிக்கல் ஆகிய இடங்களில் முதுமக்கள் தாழிகள் பெருமளவில் கிடைக்கின்றன. இதை தொல்லியல் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதினால், அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.

"கல் மரங்கள்'

பொதுவாக மரங்கள் மண்ணுக்குள் புதைந்து மக்கிப் போகும். ஆனால் பிரத்யேக வேதியியல் மாற்றத்தினால் சில மரங்கள் மக்கிப் போவதில்லை. மண்ணுக்குள் கல் ஆகிறது. இது ஒரு அறிவியல் அதிசயம். இத்தகைய தொல்லுயிர் மரங்கள் உலகின் எங்கோ சில இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை மற்றும் பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. திருவக்கரை பகுதியில் அதிக அளவிலான கல் மரங்கள் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கின்றன. இவை 1781-இல் ஐரோப்பிய விஞ்ஞானி சோனராட் என்பவரால் வெளியுலகிற்கு தெரிய வந்தவை.

கல் மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டிவை. இவற்றைப் பாதுகாக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினோம். இதன் விளைவாக, திருவக்கரையில் கல் மரங்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசின் புவியியல் சுரங்கத் துறை "ஜியோ பார்க்' அமைக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பயணத்தைக் தொடங்கி புதுச்சேரியில் கடலில் கலக்கும் சங்கராபரணி ஆற்றங்கரையில் எங்களின் இன்னொரு பயணம் நிறைவுற்றது. தென்பெண்ணை ஆறு வரையிலும் சில நேரங்களில் அதையும் தாண்டி கெடிலம் நதிக்கரையிலும் நடுவில் பம்பை ஆற்றிலும் எங்களின் இன்னொரு பயணம் தொடர்ந்தது.

இந்தப் பயணம் குறித்து முகநூலில் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். எனது முகநூல் பதிவுகளைப் பார்த்த பலரும் "எங்கள் பகுதிகளிலும் இந்த மாதிரியான சிற்பங்கள் இருக்கின்றன. முதுமக்கள் தாழிகள் தென்படுகின்றன' என்று தகவல்கள் தரத் தொடங்கினர். இதனால் எங்கள் பயணம் முடிவில்லா வரலாற்று ஆய்வுப் பயணமாகவும் உரு மாறியது..

பாறை ஓவியம்: விழுப்புரம் அருகில் உள்ள கல்யாணம்பூண்டி கிராமத்தில் சிறிய குன்றுகள் காணப்படுகின்றன.

அங்குள்ள எழுத்துப்பாறையை ஆய்வு செய்த போது விலங்கு, மனிதன், குறியீடுகளைக் கொண்ட பாறை ஓவியங்கள் இருப்பதைப் பார்த்தோம். இவை, 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இந்தப் பாறைகளுக்கு அருகில் இருக்கும் பாறைகள் கற்களுக்காக உடைக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பாறைகளை உடைத்து தீர்த்து விட்டால் அடுத்த இலக்கு பாறை ஓவியங்களைத் தாங்கி நிற்கும் பாறைகள் மீது பதியுமோ என்று மனம் பதைபதைக்கிறது.

விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தில் முக்கால்வாசி மண்ணில் புதைந்த நிலையில் சிற்பம் ஒன்றைக் கண்டோம். அது "என்ன சாமி' என்றே தெரியாமல் மக்கள் வணங்கி வந்தனர். அடையாளம் காண, அந்தச் சிற்பத்தை மண்ணில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்று சொன்னோம். மக்கள் எளிதில் ஒத்துக்கொள்ளவில்லை. "சாமி குத்தம் ஆகிவிடும்...' "ஊருக்கு சோதனைகள் வரும்' என்று பயந்தனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிற்பம் வெளியே எடுக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினோம். ஒருவழியாக கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர். சிலையை வெளியே எடுத்த போதுதான் தெரிந்தது அது, பல்லவர் கால (கி.பி.8ம் நூற்றாண்டு) சோமாஸ்கந்தர் குழுமச் சிற்பம் (சிவபெருமான், பார்வதி, குழந்தை முருகன்) என்று. இப்போது அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.

"சதிக்கற்கள்' எனப்படும் "நடுகற்கள்', "துர்க்கை' என வணங்கப்பட்டு வரும் கொற்றவை, "மூதேவி' என வழங்கப்பட்டு வரும் "மூத்ததேவி', சண்டிகேஸ்வரர், போத்தராஜா (திரெளபதியம்மன் தளபதி) உள்ளிட்ட சிற்பங்களையும் பல இடங்களில் கண்டுபிடித்தோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக பல இடங்களில் காணப்படும் சிற்பம் மூத்ததேவி ஆகும். தமிழ்நாட்டில் பெண் தெய்வ வழிபாட்டில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தவர் மூத்ததேவி. சங்க இலக்கியங்களில் "தவ்வை' எனக் குறிப்பிடப்படும் இவரை வடமொழியில் "ஜேஷ்டா' என்று அழைப்பார்கள். மூத்ததேவி விளைச்சல், செல்வம், தாய்மை, தூய்மை ஆகியவற்றின் அடையாளமாக வணங்கப்பட்டு வந்தவர். காக்கை கொடியுடன் இருக்கும் மூத்ததேவியின் வாகனம் கழுதை. பெருத்த வயிற்றுடன் கால்களை அகட்டிய நிலையில் காணப்படும் மூத்ததேவியுடன் அவரது குழந்தைகளான மாந்தன் மாந்தி ஆகியோரும் சிற்பங்களில் உடன் இருப்பார்கள். தூய்மைக்கான தெய்வம் என்பதால் சிற்பத்தில் துடைப்பம் செதுக்கப்பட்டிருக்கும். செல்வத்திற்கு உரியவள் என்பதால் பணப் பெட்டியும் பக்கத்தில் இருக்கும். சங்ககாலம் முதல் பல்லவர் காலம் வரை மூத்ததேவி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வந்தது. அழுக்குப் பொதியைச் சுமக்கும் கழுதை, துடைப்பம் போன்றவை காலப்போக்கில் அமங்கலமாகக் கருதப்பட்டன. போதாக்குறைக்கு மூத்ததேவி "மூதேவி' என்றும் மருவியது. இதனால் "மூதேவி' வழிபாடு மெல்ல மெல்ல மறைந்தது. பேரங்கியூர் கிராமத்தில் உள்ள பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் அழகு வாய்ந்தது.

கொட்டப்பாக்கத்துவேலி கிராமத்து மூத்ததேவி சிற்பம் பாதிக்கு மேல் மண்ணில் புதையுண்டு இருந்தது. கிராம மக்கள் இதை, "மதுரை வீரன்' எனப் பெயரிட்டு உணவு படையலிட்டு வந்தனர். ஆனாலும் இந்த சிற்பத்தை வெளியே எடுத்துப் பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு ஆவல். ஆனால் அப்பகுதி மக்கள் ஒத்துக்கொள்ளவில்லை. நன்னாடு கிராமம் போலவே இங்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அவர்களிடம் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்து சிற்பம் வெளியே கொண்டுவரப்பட்டது. அப்போது தான் தெரிந்தது அது, பல்லவர் கால மூத்ததேவி என்று. மேலும் சிற்பத்தின் இன்னொரு பக்கம் சோழர் கால கல்வெட்டும் இடம்பெற்றிருந்தது. ஏரிக்கு தூம்பு வைத்ததைச் சொல்லும் கல்வெட்டு அது'' என்கிறார் செங்குட்டுவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com