
வணிகத்தால் வளம் பெற்றுத் திகழும் நாடு எதுவோ, அதுவே செல்வத்தால் சிறந்து விளங்கும். உள்நாட்டு வணிகத்தைக் காட்டிலும் அயல்நாட்டு வணிகத்தை வளர்த்து வாழும் நாடே சிறப்பான நாடாகும். அயல்நாட்டு வணிகம், தம் நாட்டு பொன்னைக் கொடுத்து பிற நாட்டுப் பொருளைப் பெறுவதாக அமைதல் கூடாது.
அத்தகைய நாடு வணிகத்தால் வளம் பெறுவதற்கு மாறாக, தான் முன்னர் பெற்றிருந்த வளத்தையும் இழந்துவிடும். அதற்கு மாறாகத் தன்னாட்டுக் கைத் தொழில்கள் ஆக்கித்தரும் பொருள்களை அயல்நாடுகளுக்கு அனுப்பி அவற்றிற்கு ஈடாக அந்நாடுகளிலிருந்து பொன்னைப் பெறும் வணிகமே வளம் தரும் வணிகம். இவ்வுண்மைகளை உணர்ந்து வணிகத்தை வளர்த்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.
தமிழர்கள் திரைகடலோடி திரவியம் தேடினர். கிரேக்கம், ரோம் எகிப்து, பாபிலோனியா, ஈராக் ஆகிய மேலை நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
வணிகர்கள் தம் பண்டங்களை விற்பனைக்கு எடுத்துச்செல்லும் பொழுது கூட்டங்கூட்டமாக செல்வார்கள். இவ்வாறு செல்லும் கூட்டங்களுக்கு "வாணிகச் சாத்துக்கள்' என்று பெயர். ஆறலை கள்வருக்கு அஞ்சி அவர்கள் கூட்டமாக சேர்ந்து செல்வது வழக்கம்.
கொள்வதிலும் மிகை கொளாது. கொடுப்பதிலும் குறைவு படாது மிக நேர்மையாகத் தம் வணிகத்தை நடத்தி வந்தனர்.
மக்கள் காசு கொடுத்து எந்த பண்டத்தையும் வாங்கியதாகத் தெரியவில்லை. சங்க காலத்தில் காணம் என்னும் பொற்காசுகள் வழக்கத்திலிருந்ததாக அறிகிறோம். பொற்காசுகள் வேப்பம்பழம், உகாப்பழம், போன்ற உருவில் கட்டியாக இருந்தன.
தமிழ்நாட்டில் காவிரிபூம்பட்டினத்தில் சங்க காலச் சோழர் காசு ஒன்றும், அழகன் குளத்தில் பாண்டியர் காசு ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கரூரில் சங்ககாலச் சேரர்களின் காசுகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்காசுகள் வழக்கத்திலிருந்தும் பண்டங்கள் ஏன் காசுகளுக்கு விற்கப்படவில்லை. காரணம் காசுகள் புழக்கத்திற்கு வராத நிலையில் பண்டமாற்று முறை நிகழ்ந்திருக்கலாம். சங்கம் மருவிய காலத்தில் காசுகள் புழக்கத்தில் வந்திருக்கும். காசுகள் கொடுத்து பொருள்களை பெறுதலும், பண்டமாற்று முறையால் பொருள்களை பெறுதலும், சங்கம் மருவிய காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும்.
பண்ட மாற்று முறை பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பண்ட மாற்றுக்கு நெல் ஒரு முக்கிய பொருளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. நெல் வெள்ளையுப்பிற்கு மாற்றாகக் கொள்ளப்பட்டது.
நெய்யை விற்று கட்டிப் பசும்பொன் பெறாது எருமைக் கன்றுகளை மாற்றாகப் பெற்றனர். பச்சைப் பயற்றுக்கு ஈடாக கெடிறு என்னும் மீன் மாற்றிக் கொள்ளப்பட்டது. சில காலங்களில் நெல்லின் விலையும் உப்பின் விலையும் சமமாக இருந்தது.
பண்டமாற்று முறையில் குறியெதிர்ப்பு என்னும் முறை நிலவி வந்தது. ஒரு குறிப்பிட்ட அளவு பண்டத்தைக் கடனாகக் கொண்டு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அதைத் திருப்பி கொடுப்பதுதான் இம்முறையாகும்.
வணிகம் செழிப்புடன் வளர, ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருளை மற்றொரு இடத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய சாலை வசதிகள் தேவை. சாலை வசதியிருந்தால் தான் போக்குவரத்து எளிதில் நடைபெறும். போக்குவரத்திற்குத் தகுதியான சாலைகள் அமைய வழி கோலியவர்கள் வேட்டையாடுவதில் ஈடுபட்டிருந்த கற்கால மக்கள். அவர்கள் வேட்டைக்கு செல்லும் பொழுது சிறிய பாதைகள் தோன்றின. கால்நடைகளை மேய்ச்சல், நிலம் தேடி ஒட்டிச் செல்லும் பொழுது இச்சிறிய பாதைகள் பெரிய பாதைகளாயின. அவைகளே பிற்காலத்தில் பெருவழிகளாக மாறின.
சங்க இலக்கியங்களால் இப்பெருவழிகளைப் பற்றி அறியமுடிகிறது. இப்பெருவழிகளில் கழுதைகள் மிளகுப் பொதிகளைச் சுமந்து கொண்டு திரளாக சென்றன. அம்மிளகுப் பொதிகளுக்கு சுங்கம் செலுத்த பெற்றது. அப்பெருவழிகளில் செல்லும் வணிகர்களையும் வழிப்போக்கர்களையும் வில்லேந்திய வீரர்கள் பாதுகாத்து வந்தனர்.
சில பொருள்கள் உற்பத்தியான இடத்திலேயே விற்பனையாயின. சில பொருள்கள் ஊர் ஊராக சென்று விற்கப்பட்டன. உப்பு அப்படி விற்கப்பட்ட ஒரு பொருளாகும். மிளகையும் ஊர் ஊராக சென்று விற்பதுண்டு. பொருள்களை வண்டிகளின் மீதும்
கழுதைகளின் மீதும் ஏற்றிச் செல்வர். சரக்கு பொதுகளின் மீது அவற்றின் அளவோ எடையோ பொறிக்கப்பட்டிருக்கும். அவற்றை ஏற்றிச் சென்ற வண்டிகளின் மீதும் அளவு பொறிப்பதுண்டு. தாம் விற்கும் பண்டங்களைப் பற்றியக் குறிப்பு எழுதப்பெற்ற கொடிகளை வணிகர்கள் தம் கடைகளின் முன்பாகப் பறக்க விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
("தமிழர் நாகரீகம்' நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.