

திருக்குறளால் தான் பணியாற்றும் பள்ளி மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டி வருகிறார் தலைமை ஆசிரியர் ராஜசேகரன். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஹிந்து மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இவர் திருக்குறளை மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற முயற்சியில் பல்வேறு திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறார்.
அவரிடம் பேசிய போது நம்மிடம் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்:
""உலகப்பொதுமறையான திருக்குறள் தெய்வநூல். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாகக் கூடி வாழவும், புறவாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) விளக்குகிறது. இதனை மாணவர்கள் தங்கள் இளமை காலத்தில் படித்தால் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்வார்கள். தவறான எண்ணங்கள், பழக்க வழக்கம் அவர்களை நெருங்காது என்பது என்னுடைய நம்பிக்கை. அதனால் திருக்குறளை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த பிப்ரவரி 2021 முதல் திருக்குறள் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கினேன்.
எனது நண்பர்கள், நல விரும்பிகள் மூலம் சிறு தொகை திரட்டினேன். மாதத்திற்கு 2 முறை திருக்குறள் பேரவை கூட்டம் நடக்கும். இதில் எவ்வளவு குறள் ஒப்பிக்க வேண்டும் என்று நாங்களே இலக்கை நிர்ணயம் செய்வோம். உதாரணத்திற்கு முதல் கூட்டத்தில் 200 குறள், என்றால் இரண்டாவது கூட்டத்தில் 400 குறள் என்ற இலக்கை நிர்ணயம் செய்வோம்.
இலக்கைத் தாண்டி குறள் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசு வழங்குவோம். இந்தப் பரிசு வழங்குவதிலும் மாறுபாடு காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்கள் எத்தனை குறள் ஒப்பித்தாரோ, குறள் ஒன்றிற்கு 1 ரூபாய் விதம் அவர்கள் வங்கியில் செலுத்திவிடுவோம். இந்தத் திட்டத்திற்குக் "குறள் வங்கி' என்று பெயர். இது மாணவர்களை திருக்குறள் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், சேமிப்பு பழக்கத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இருந்த மாணவன் ஒருவன் சிகிச்சை முடிந்த பிறகு படிப்படியாகத் திருக்குறளை கற்று 1330 குறளை ஒப்பிவித்து அனைவரது பாராட்டையும் பெற்றான். நாங்கள் மட்டுமல்ல தமிழக அரசும் தமிழ் வளர்ச்சித்துறை மூலமாக மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. இதற்கு முன் 1330 குறளையும் ஒப்பிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலுள்ள மாணவர்களுக்கு மட்டும் ரூ. பத்து ஆயிரம் பரிசு வழங்கினார்கள். தற்போது 1330 குறளை ஒப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கு, அது எத்தனை பேராக இருந்தாலும் அவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்குகிறார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்தப் பள்ளி சர்.சி.வி.ராமன் உடன் இணைந்து "ராமன் விளைவை" கண்டறிந்த "தேசிய விஞ்ஞானி" டாக்டர். கே.எஸ் கிருஷ்ணன் பணியாற்றிய பள்ளியாகும்.
பிறந்த நாள் மூலிகை வனம் திட்டம்: பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அவர்களது பிறந்த நாள் அன்று ஏதாவது ஒரு மூலிகை செடியை வழங்கிறோம். அவர்கள் வீட்டில் செடியை நல்ல முறையில் வளர்த்து எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் செடியை படம் பிடித்து அனுப்ப வேண்டும். நல்ல முறையில் மரம் வளர்த்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பள்ளி ஆண்டு விழாவில் பரிசு வழங்கி கெளரவிக்கிறோம்.
நூலக வாசிப்பு திட்டம்: தற்போது பள்ளிக்கு வரும் 9 -ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் நூலகம் திறந்துள்ளது. ஒவ்வொரு மாணவரும் நூலகத்தைப் பயன்படுத்தும் போது பதிவேட்டில் பெயர் எழுதி கையொப்பம் இட வேண்டும். இதில் ஒரு மாதம் முடிந்த பிறகு பதிவேட்டை ஆய்வு செய்து யார் அதிகம் நூலகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை வழங்குகிறோம்.
பெருமைக்குரிய பெற்றோர்: தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் தன்னுடைய அம்மா-அப்பாவை பள்ளிக்குக் கட்டாயம் அழைத்து வர வேண்டும். பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டுப் பெருமைக்குரிய பெற்றோர் என்று ஊக்குவிக்கிறோம்.
இந்தப் பள்ளி மாணவர்கள் பேட்மிண்டன் போட்டிகளில் தேசிய அளவில் சாதித்து, தங்கப்பதக்கம் பெற்று தமிழக முதலமைச்சரின் 2 லட்சம் பரிசு பெறுவதற்கு 4 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இது தவிர மாவட்ட அளவில் வாலிபால் போட்டிகளிலும், சிலம்பப் போட்டிகளிலும் ஆண்டுதோறும் இப்பள்ளி மாணவர்கள் ஜொலித்து வருகிறார்கள். யோகா போட்டியில் உலக சாதனை படைத்த மாணவன் மற்றும் மாணவி ஆகியோரும் இந்தப் பள்ளியில் தான் படித்து வருகின்றனர்.
எங்கள் பள்ளியில் 1549 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தி எதிர்காலத்தில் நல்ல முறையில் அவர்களைப் பயணிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். எங்களது திட்டங்களைப் பெற்றோரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்'' என்றார் ராஜசேகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.