

கரோனா பொது முடக்கத்தின்போது மருத்துவர்களின் பணி இன்றியமையாதது. கரோனா இரண்டாம் அலை உச்சமான நேரத்திலும் மக்கள் சேவையில் மகத்துவம் காட்டிய தமிழ்நாட்டிலுள்ள மருத்துவர்கள் சிலரின் நேர்காணல் இதோ:
""சமூக இடைவெளி அவசியம். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதே கரோனா பரவலை தடுக்கும் முதல் வழிமுறை. ஆனால் பல் மருத்துவரான எனக்கு இந்த விதி பொருந்தாது. காரணம் நோயாளிகளின் வாயை திறந்து பார்த்தால் தான் எனக்கு வேலை தொடங்கும். கரோனா பரவல் காரணமாக பல் மருத்துவமனைகள் அதிகம் மூடப்பட்டுவிட்டன. ஆனால் நான் சென்னை அண்ணாநகரில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன். என்னுடைய மருத்துவமனை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ்த்தளத்தில் உள்ளது. இதனால் நோயாளிகள் மூலம் கரோனா பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் அந்த அடுக்குமாடியில் குடியிருப்போர் என்னுடைய மருத்துவமனையை இயங்க அனுமதிக்கவில்லை.
பல்வலி என்றால் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது. பல்வலி என்று வருபவர்களை அடுத்த வாரம் வாருங்கள் என்று சொல்ல முடியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆன்லைன் மூலம் எங்கள் மருத்துவப்பணி தொடர்ந்தது. தொடர்ந்து காற்று சுத்திகரிப்பான் உதவியுடன் மருத்துவ சேவையில் இறங்கினோம்.
இந்த வழிமுறையை யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை. காரணம் காற்று சுத்திகரிப்பான் கரோனா பரவலை தடுப்பதற்கு சிறந்த முறையில் பயன்பட்டது. 15 நாள்களுக்கு ஒரு முறை நான் கரோனா பரிசோதனை மேற்கொள்வேன். என்னுடன் பணியாற்றும் நபர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள சொல்வேன். அவர்களும் ஒரு கட்டத்தில் பயந்தார்கள். ஆனால் எங்களுடைய சேவையை எந்த கட்டத்திலும் நிறுத்தவில்லை. பிபிஇ கிட் உதவியுடன் சிகிச்சை அளித்தோம்'' என்கிறார் பல் மருத்துவர் அருண்.
""கரோனா இரண்டாவது அலை மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. முதலில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன் லைன் மூலம் ஆலோசனை வழங்கினோம்.
காய்ச்சல், இருமல், உடல்வலி, தொண்டை வலி போன்ற அறிகுறி உள்ளவர்களை ஆன்லைன் மூலமாக பரிசோதனை செய்ய அறிவுறுத்தினோம். பரிசோதனை முடிவு பாஸிட்டிவ் என்றால் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். யாரை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும் என்று ஆலோசனை சொன்னோம். குறிப்பாக ஆக்சிஜன் அளவு, நுரையீரல் தொற்று இவை தான் பிரதானமாக பார்க்கப்பட்டது.
இவை தான் நோயாளியின் நிலை என்ன என்பதை கவனிப்பதற்கு உதவியாக இருந்தது. முதல் அலையை பொருத்தவரை தமிழகம் முழுவதுமே 8 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் இரண்டாவது அலையில் சென்னையில் மட்டுமே 8 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
இந்த கரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்குமே ஆக்சிஜன் தேவைப்பட்டது. அரசாங்கமும் பல்வேறு வழிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டது. நான்கு வாரங்கள் மிகவும் சவாலாக இருந்தது. ரெம்டெசிவிர் மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அரசே ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்தது'' என்கிறார் ராயப்பேட்டை சேர்ந்த மருத்துவர் குகன் நாத்.
""கரோனா முதல் அலை பரவலின்போது முகத்தை காக்கும் ஷீல்டு, பல அடுக்கு முகக் கவசங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது . அப்போது, திருச்சி மாநகரப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்பரவுப் பணியாளர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி மருந்துகள் வழங்கினேன். பொதுமக்களின் உடல்வெப்பநிலையை பரிசோதிக்கும் இன்ப்ரா ரெட் தெர்மல் மெஷின்களையும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கினேன்.
கரோனா காலத்தில் அளித்த மருத்துவ சேவையில் மறக்க முடியாதது 8 மாத கர்ப்பிணிக்கான தொற்றை சரி செய்து, அவரது குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க உறுதுணையாக இருந்ததுதான்.
தாய்-சேய் என இரு உயிரையும் காத்தது முதல் அலையில் எனக்கான முன்மாதிரியாக அமைந்தது. மருத்துவம் என்பது மனித குலத்துக்கான சேவை என்பதால் மருத்துவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது, கரோனா கால பணியாற்றுகின்றனர். தடுப்பூசி, முகக் கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவை மட்டுமே கரோனா தடுப்புக்கான தலையாய கடமையாகக் கருத வேண்டும்'' என்கிறார் திருச்சி ராந மருத்துவமனையின் தலைமை இருதய சிகிச்சை நிபுணரான மருத்துவர் செந்தில்குமார் நல்லுசாமி.
""முதல் அலை இரண்டாவது அலை இரண்டிலும் சித்த மருத்துவத்தின் பங்கு இன்றியமையாதது. குறிப்பாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட வார்டுகளுக்கு சென்று அவர்களின் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு என தொடர்ச்சியாக கண்காணித்து வந்தோம். கவச உடை அணிந்து பணியாற்றுவது கடினமாக இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நான் சொல்லிக் கொடுத்த பிராணாயாமம், யோகாவை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்கள். நிலவேம்பு, கபசுர குடிநீர் மற்றும் இதர மருந்துகளை அவர்களை விரும்பி வாங்கி சாப்பிட்டனர். ஒரு வாரம் தொடர்ந்து பணி செய்தால் ஒரு வாரம் தனிமைப்படுத்திக்கொண்டோம். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்கிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஜீவிதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.