ரோஜா மலரே! - 107:  கடிதம் எழுதினேன் நேரில் அழைத்தார்! - குமாரி சச்சு

என்னுடன் பணியாற்றிய ஒருவர் என்னிடம் எளிமையாகப் பழகுவார் என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.
ரோஜா மலரே! - 107:  கடிதம் எழுதினேன் நேரில் அழைத்தார்! - குமாரி சச்சு
Published on
Updated on
3 min read

என்னுடன் பணியாற்றிய ஒருவர் என்னிடம் எளிமையாகப் பழகுவார் என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன். அவர் தான் ஜெயலலிதா. எனக்கு அவரை சிறுவயதில் இருந்தே தெரியும். அழகாக இருப்பார். சிறுவயதில் பார்த்தது மட்டுமல்ல கதாநாயகியாக உருவானது வரை, இடைப்பட்ட காலத்தில் அவரைப் பார்க்க சந்தர்ப்பம் ஏற்பட்டது இல்லை. அவரை நீண்ட நாள்கள் கழித்து சந்தித்தது "காதலிக்க நேரமில்லை' படத்தின் வெற்றி விழாவில் தான். விழாவுக்கு நாகேஷ், முத்துராமன், ரவிச்சந்திரன், காஞ்சனா, ராஜஸ்ரீ ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். அடுத்தப் படத்தின் கதாநாயகியாக ஜெயலலிதாவை அறிமுகப்படுத்த அந்த விழாவில் இயக்குநர் ஸ்ரீதர் முடிவு செய்திருந்தார். அதற்காக ஜெயலலிதாவையும் வெற்றி விழாவுக்கு அழைத்திருந்தார். ஜெயலலிதா அம்மா சந்தியாவுடன் வந்திருந்தார்.

அவரைப் பார்த்தவுடன் வாழ்த்து சொல்லிவிட்டு, பேசிக்கொண்டு இருந்தேன். "வெண்ணிற ஆடை' படத்துக்குப் பிறகு, ஜெயலலிதாவுடன் முதல் முறையாக சேர்ந்து நடித்த படம் "மோட்டார் சுந்தரம் பிள்ளை'. அந்தப் படத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாகக் கல்லூரியில் படிப்போம். எங்கள் இருவருக்கும் "துள்ளி துள்ளி' என்ற பாட்டும் இருந்தது. எங்களுடன் வேறு பல பெண்களும் இந்தப் பாடலில் நடித்திருப்பார்கள். இதே காலகட்டத்தில், "பொம்மலாட்டம்' போன்ற சில படங்களிலும் சேர்ந்து நடித்தோம். அவர் அதிகம் பேச மாட்டார். போகப் போகப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வோம். "சுமதி என் சுந்தரி', "கலாட்டா கல்யாணம்' போன்ற படங்களின் படப்பிடிப்பில் நாங்கள் தோழிகள் ஆகிவிட்டோம்.

நாங்கள் இருவரும் எம். ஜி. ஆர் நடித்த "குமரி கோட்டம்' என்ற படத்தில் நடித்தோம். ஜெயலலிதா வீட்டில் வளர்ப்பு பெண்ணாக இருப்பேன். அதே வீட்டில் எம்.ஜி.ஆரும் தோட்ட வேலை செய்து கொண்டு, கல்லூரியில் படிக்கும் இளைஞராக இருப்பார். அவரைப் படிக்கவிடாமல் தொந்தரவு செய்யும் கதாபாத்திரங்கள். ஜெயலலிதாவும் நானும் ஆடி- பாடி , அவரைப் படிக்கவிடாமல் இடையூறு செய்வோம். அந்தக் காட்சி எடுக்கப்படும் முதல் நாள், எங்களுக்கு நடனஒத்திகை இருந்தது. அப்பொழுதெல்லாம் நடனக் காட்சி என்றால் முந்தைய நாளே ஒத்திகை பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும் போது எனக்குக் காலில் சுளுக்கு ஏற்பட்டது. அடுத்த நாள் நானும் ஜெயலலிதாவும் படப்பிடிப்பில் இருக்கும் போது, ஒரு சில நடன அசைவுகளைச் செய்யும் போது, எனக்கு வலி ஏற்பட்டது.

அதை நடன இயக்குநரிடம் தெரிவித்து, "டேக்'கின் போது சரியாகச் செய்து விடுகிறேன் என்று கூறினேன். இதை ஜெயலலிதா தெரிந்து கொண்டு, என்னை அழைத்து எங்கே சுளுக்கு என்று தெரிந்து கொண்டு, அவரது உதவியாளர் கோபாலை கூப்பிட்டு, மருந்து வாங்கி வரச் செய்து, துணிக்கட்டு போட்டால் வலி இல்லாமல் ஆட முடியும் என்று மருந்தை என்னிடம் கொடுத்தார். அதை என் பெண் உதவியாளர் உதவியுடன் போட்டுக் கொண்டு அந்தப் பாட்டுக்கு ஆடினேன். இதை ஜெயலலிதா செய்திருக்க வேண்டியதே இல்லை. என்னிடம் மருந்தின் பெயரை தெரிவித்தால்போதும், அதை நான் வாங்கி, போட்டுக் கொண்டு ஆடி விட்டுப் போகிறேன். அதை எல்லாம் செய்யாமல், தானே வாங்கிக் கொடுத்த அந்த பண்பு என்னை நெகிழச் செய்தது.

"சுமதி என் சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு தேக்கடியில் நடைபெற்றது. நாங்கள் எல்லோரும் ஒரே வீட்டில் தங்கி இருந்தோம். ஒரு நாள் மதிய உணவுக்கு அந்த வீட்டின் நடு ஹாலில் அமர்ந்து இருந்தோம். என்னுடன் அம்மா வந்திருந்தார். அவர் என் தட்டில் சில காய்கறிகள் வைத்தார். ஜெயலலிதா தட்டிலும் காய்கறிகளை வைத்தார். அதற்கு ஜெயலலிதா " சாப்பிடமாட்டேன் எனக்குப் போடாதீர்கள்', என்று கூறினார். என் அம்மா அதற்குச் சொன்னார் "இந்த வயசுல சாப்பிடலேனா, எந்த வயசில சாப்பிட முடியும். காய்கறி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்களும் என்னுடைய பெண்களில் ஒருவர் தான்' என்றார்.

அதற்கு ஜெயலலிதா சிரித்தபடியே என்ன சொன்னார் தெரியுமா? "நான் எடை அதிகமாகிவிடுவேன். அதனால் அரிசி சாதம் சாப்பிடுவது இல்லை. எங்கள் குடும்பத்தில் எல்லோரும் கனத்த சரீரம் உடையவர்கள். அதனால் சாப்பாட்டில் கவனமாக இருக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்தவுடன், உணவு கட்டுப்பாடு விதித்துக் கொண்டேன்' என்றுகூறினார்.

அவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உணவை தியாகம் செய்ய வேண்டி உள்ளது என்று எனக்குத் தெரிந்தது. அவர்கள் ஒரு இட்லி அல்லது ஒரு சப்பாத்தி, பழங்கள் காய்கறிகள் மட்டுமே சாப்பிடுவார். நான் கொஞ்சம் அரிசி சாதம் போட்டுக்கொண்டு காய்கறிகளைச் சாப்பிட்டேன். "நீங்கள் தட்டில் போட்டதால் உங்களுக்காகச் சாப்பிடுகிறேன்' என்று அம்மாவிடம் சொல்லி விட்டு, பிறகு சாப்பிட்டார்.

அதற்குப் பிறகு "பாக்தாத் பேரழகி', "உன்னைச் சுற்றி உலகம்' போன்ற படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தோம். இருவரும் சேர்த்து நடித்த கடைசி படம் "மணிப்பூர் மாமியார்'. இது வெளிவராத படம். இதனை பின்பு மாற்றி எடுத்தார் எழுத்தாளர்-இயக்குநர் வி. சி. குகநாதன். இதில் விஜயகுமார், ஜெயலலிதாவுடன் நடித்தேன். அதன் பின்னர் ஜெயலலிதா அரசியலில் நுழைந்து விட்டார். அதன் பின்னர் நாங்கள் இருவரும் சந்திப்பது என்பதே அரிதாகி விட்டது.

நெடுநாள் கழித்து அவர் பாராளுமன்றத்திற்குத் தேர்த்தெடுக்கப்பட்டார். அந்த சமயம் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கத் தொலைபேசியில் அழைத்தேன். வாழ்த்து தெரிவித்து விட்டு "உங்களை இனிமேல் அடிக்கடி கூப்பிட்டு, பேச முடியாது. நீங்கள் அரசியலுக்கு வந்துட்டீங்க' என்றேன். அதற்கு அவர் "ஒரு நல்ல சந்தர்ப்பம் வரும். நீங்கள் வரலாம். போன் பண்ணிட்டு வாங்க பேசலாம்' என்றார். அவருடன் பேசியது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

ஜெயலலிதா 1991-ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். வாழ்த்து சொல்ல ஆசைப்பட்டேன். இந்த முறை நேரில் சென்று வாழ்த்து சொல்ல வேண்டும் என்றும் விரும்பினேன். கடிதம் மூலமாக வாழ்த்து தெரிவித்து விட்டு, "நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும்' என்று அவர் கைக்குக் கிடைக்கும் வகையில், அந்தக் கடிதத்தை அனுப்பினேன். அதற்குப் பதில் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் என்னைப் பற்றி, என் நடிப்பு திறமை பற்றி, எனக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொல்லி, என் அலுவலகம் உங்களைத் தொடர்பு கொள்ளும். நாம் இருவரும் சந்தித்துப் பேசலாம்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற ஒரு சில தினங்களில், அவர் அலுவலத்தில் இருந்து எனக்கு அழைப்பும் வந்தது. நானும் என் தங்கை சித்ராவும் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கக் கோட்டைக்குச் சென்றோம். அங்கு நடந்தது என்ன?

(அடுத்த இதழில் நிறைவடையும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com