வரலாற்றில் இடம் பிடித்த மண்டபங்கள்

இறைவனை வழிபட திருக்கோயில்களுக்கு செல்கிறோம். திருக்கோயிலில் கோபுரம், திருக்குளம், கொடிமரம், மண்டபங்கள் என்று பல்வேறு பகுதிகள் அமைந்திருக்கும்.
வரலாற்றில் இடம் பிடித்த மண்டபங்கள்
Published on
Updated on
3 min read

இறைவனை வழிபட திருக்கோயில்களுக்கு செல்கிறோம். திருக்கோயிலில் கோபுரம், திருக்குளம், கொடிமரம், மண்டபங்கள் என்று பல்வேறு பகுதிகள் அமைந்திருக்கும். மண்டபங்களில் அர்த்த மண்டபம், நிருத்த மண்டபம், துலாபார மண்டபம், ஊஞ்சல் மண்டபம்,  வாத்திய மண்டபம், திருவோலக்க மண்டபம் என்று பல்வேறு மண்டபங்களைக் காணலாம்.

காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருவாரூர், சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை போன்ற பெரிய கோயில்களில் நூற்றுக்கால் மண்டபம் ஆயிரம் கால் மண்டபம் என்று கலைச்சிறப்பு மிக்க சிற்பங்களுடன் மண்டபங்கள் காட்சி தருவதையும் காணலாம். திருக்குளத்தின் நடுவே அமைந்துள்ள மண்டபம் நீராழி மண்டபம் எனப்பட்டது. திருக்கோயிலுக்கு வெகுதொலைவில் இருந்து பாதசாரிகளாக வரும் பக்தர்கள் ஆங்காங்கே ஓய்வெடுக்க வசதியாக நெடுஞ்சாலைகளில் வழிபோக்கர் மண்டபம் அமைந்திருந்ததையும் காணலாம்.

நிருத்த மண்டபத்தில் நடராஜப் பெருமான் எழுந்தருளியிருக்கும் நிருத்த சபை அமைந்திருக்கும். வசந்த மண்டபத்தில் இறைவன் கோடைக்காலத்தில் எழுந்தருளுவார். ஊஞ்சல் மண்டபத்தில் திருவிழாக்களின் போது இறைவனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். திருவோலக்க மண்டபத்தில் இறைவன் எழுந்தருளி பக்தர்களின் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் மலையை குடைந்து எடுக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் நீண்ட சதுரமான மண்டபம் போல காணப்பட்டதால் இதனை மண்டபக் கோயில்கள் என அழைத்தனர். கருவறையோடு மண்டபம் இணைக்கப்பட்டிருந்தால் அது முன் மண்டபம் எனப்பட்டது. அதுவே பெரிய அளவில் இருந்தால் மகாமண்டபம் எனப்பட்டது. சோழர் காலத்தில் மகாமண்டபம் பெரிதாக அமைக்கப்பட்டது.

விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில் நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கல்யாண மண்டபம் போன்றவை கட்டப்பட்டன. மண்டபத் தூண்களில் குதிரை மீது வீரர்கள் அமர்ந்து பாய்ந்து வரும் நிலையில் உள்ள சிற்பங்கள் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கல்யாண மண்டபங்களை ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், விரிஞ்சிபுரம், ஆழ்வார்திருநகரி, வேலூர் போன்ற பல திருக்கோயில்களில் காணலாம்.

பல திருக்கோயில்களில் மண்டபங்கள் பெயரிடப்பட்டும் அழைக்கப்பட்டுள்ளன. நன்னிலம் அருகில் உள்ள ராமநந்தீஸ்வரம் கோயிலிலுள்ள மகாமண்டபம் "தேவன் திருமண்டபம்' எனப்பட்டது. இம்மண்டபத்தில் கோயில் அதிகாரிகள் கூடி விழாக்கள் நடத்துவது குறித்து முடிவெடுத்தனர் எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சோழ மன்னர்கள் காலத்தில் படைத்தலைவனாக இருந்த நரலோக வீரன் திருப்புகலூர் கோயில் எடுப்பித்த மண்டபம் "நரலோக வீரன் மண்டபம்'  எனப்பட்டது. சிதம்பரம் கோயிலில் அவன் கட்டிய மண்டபம் "விக்கிரம சோழன் திருமண்டபம்'  எனப்பட்டது. இம்மண்டபத்தின் தூண்களில் விக்கிரம சோழன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்று விளங்கும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில்,  சோழ மன்னர்கள் காலத்தில் நூற்றுக்கால் மண்டபம் அமைத்தனர். பின்னர் விஜயநகர மன்னர்கள் காலத்தில் ஆயிரம் கால் மண்டபமாக மாற்றம் அடைந்தது. இம்மண்டபத்தில் ஒரு சில தூண்களில் விக்கிரம சோழன் நூற்றுக்கால் மண்டபம்,  குலோத்துங்கன் நூற்றுக்கால் மண்டபம் என்ற பெயர்கள் கல்வெட்டுப் பொறிப்பாக காணப்படுவது சிறப்பானது.

இரண்டாம் ராஜராஜ சோழனுக்கு "ராஜகம்பீரன்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் கோயிலில் காணப்படும் தேர் வடிவ மண்டபம் "ராஜகம்பீரன் திருமண்டபம்' என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். திருவாரூர் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே உள்ள மண்டபம் "தேவாசிரிய திருமண்டபம்' ஆகும். இம்மண்டபத்துக்கு எதிரில் உள்ள தூண்களில் "தக்கார்க்கு தக்கான்' என்ற பெயர் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இங்குதான் "சித்திரைத் திருவிழா' நடைபெறுகிறது. 

பெரியபுராணத்தின் மூல நூலாக விளங்கும் "திருத்தொண்டத்தொகை' பாடி அருளிய இடம் இதுவே. வீதி விடங்கப் பெருமான் இம்மண்டபத்திற்கு எழுந்தருளி "புக்கத்துறை வல்லவதலைக் கோலி' என்ற ஆடல் பெண் நடனத்தை கண்டு மகிழ்வதாக முதலாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சைவசமயம் போற்றும் நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் "பெரியபுராணம்" "சிதம்பரம் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் தான் அரங்கேறியது'. "இராமகாதை'  அரங்கேறியது ஸ்ரீரங்கம் கோயில் தாயார் சந்நிதி எதிரில் உள்ள மண்டபத்தில். கச்சியப்ப சிவாசாரியாரின் "கந்த புராணம்' அரங்கேறியது காஞ்சி குமரக்கோட்டம் மண்டபத்தில் தான்.

கோயில் மண்டபங்களை அவ்வப்பொழுது பழுது பார்த்து திருப்பணி செய்ய நிலம் அளிக்கப்பட்டதை "திருமண்டபப்புறம்' எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.

முதலாம் பராந்தக சோழன்காலத்தில் நடைபெற்ற "குடவோலை' தேர்தல் முறைப்பற்றி கூறும் சிறப்பு வாய்ந்த கல்வெட்டு இம்மண்டபத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. உத்திரமேரூருக்கு அருகில் உள்ள திருப்புலிவனம் கோயிலிலும் "சபா மண்டபம்' இருந்ததாக அறியமுடிகிறது.

கோயில்களில் திருமுறைகள் பாதுகாப்பாக வைக்க பயன்பட்ட மண்டபம் "திருக்கைக் கோட்டி' எனப்பட்டது. சீர்காழி கோயிலில் இவ்வாறு ஒரு மண்டபம் இருந்ததை கல்வெட்டால் அறிகிறோம். சிதம்பரம் கோயிலில் திருமுறைகளை ஓதுவதற்காக நரலோக வீரன் ஒரு மண்டபம் கட்டினார். நாடகம் நடத்துவதற்கு மண்டபங்கள் இருந்தன. திருவதிகை கோயிலில் நாடகசாலை மண்டபம் இருந்ததை கல்வெட்டால் அறிகிறோம். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் விரிவுரை செய்யவும் மண்டபங்கள் பயன்பட்டன. இவை வியாகரண மண்டபம் எனப்பட்டன. திருவொற்றியூர், கூரம் போன்ற பல கோயில்களில் இப்படி ஒரு மண்டபம் இருந்ததைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகிறன.

கல்விச்சாலை நூலகங்கள் மற்றும் மருத்துவச் சாலைகள் கோயில் மண்டபங்களில் இயங்கி வந்தன. எண்ணாயிரம், ஸ்ரீரங்கம், சிதம்பரம், காஞ்சிபுரம், சேரன்மாதேவி ஆகிய ஊர் கோயில்களில் நூலகங்கள் மற்றும் கல்விச்சாலைகள் இருந்தன என கல்வெட்டுகளால் அறிகிறோம். வைத்திய விருத்தியாகவும் நிலம் அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் பாலாறு - செய்யாறு, வேகவதி கூடும் "திருமுக்கூடல்' என்ற ஊரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் காணப்படும் கல்வெட்டு கடிகை (கல்விச்சாலை), ஆதுலர் சாலை" (மருத்துவமனை) பற்றியும் மற்றும் மருத்துவ சாலையில் பணியாற்றியவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்துகள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.

சங்க இலக்கியங்களில் பட்டினப்பாலை - பூம்புகார் பற்றிய பல வரலாற்றுச் செய்திகளை அளிக்கிறது. இதன் ஆசிரியர் புலவர் உருத்திரங்கண்ணனார் ஆவார். பட்டினப்பாலையை இயற்றிய புலவர்க்கு பதினாறு நூறாயிரம் பொன் பரிசினை சோழமன்னன் கரிகாலன் அளித்தான் என கலிங்கத்துப்பரணி கூறும். இது மட்டுமல்லாமல் பட்டினப்பாலை அரங்கேறிய மண்டபத்தையும் அரசன் பரிசாக அளித்துவிட்டான். சோழரது அரசு வலிமை குன்றிய போது பாண்டிய மன்னன்களில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 - 1238) சோழநாட்டின் மீது படையெடுத்து பெரும்பகுதியை அழித்தான். ஆனால் பட்டினப்பாலை அரங்கேறியதின் நினைவாக இருந்த 16 கால் மண்டபத்தை மட்டும் அழிக்காமல் விட்டுவிட்டான் என்பதை திருவெள்ளறைக் கோயிலில் காணும் பாடல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தமிழுக்கு உரிய பெருமையை அளித்த பாண்டிய மன்னனை போற்றத்தான் வேண்டும்.

மண்டபங்கள் என்பவை வெறும் தூண்களும் தளங்களும் மட்டுமல்ல. நமது பண்பாடு,  நம் பாரம்பரியம், சமூக அக்கறை, கலைத்திறன், விழா அரங்கம், மருத்துவம் மற்றும் கல்வி நிலையம் இப்படிப் பல முகங்களோடு அமைந்தவை என்கிற நினைப்போடு மண்டபங்களை கண்டு மகிழ்ந்து பெருமைமிக்க நம் வரலாற்றை உணர்வோம்.

(தொல்லியல்துறை - பணி நிறைவு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com