
தமிழில் உள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழரின் வாழ்வியலோடு ஒன்றிப்போன நூல்கள். அவை தமிழ் மக்கள் மீதான சமுதாய அக்கறையுடன், ஆரோக்கியத்திற்கும் வித்திட்டன. அவற்றில் முக்கிய அங்கம் வகிப்பது "திரிகடுகம்' எனும் நூல்.
திரிகடுகம் நூலில் உள்ள ஒவ்வொரு பாட்டிலும் மூன்று கருத்துக்கள் சொல்லப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. அதே போல் சித்த மருத்துவத்தில் "திரிகடுகு' என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்தது. திரி என்பது மூன்று. கடுகு என்பது காரம் என்று பொருள்படும். ஆக மூன்று கார்ப்பு சுவையுடைய மூலிகைகளை உள்ளடக்கியது என்ற பொருளாகின்றது. மருத்துவ குணம் மிக்க, இவை மூன்றையும் பயன்படுத்தாத தமிழர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு தமிழரின் வாழ்வியலோடு ஒன்றிப்போனது சித்த மருத்துவம்.
"உணவே மருந்து, மருந்தே உணவு' என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை தத்துவம். அத்தகைய மருந்தையே உணவாக பயன்படுத்தும் வித்தையை அறிந்தவர்கள் தமிழர்கள். அந்த வரிசையில் சுக்கு, மிளகு,திப்பிலி இவற்றின் பங்கு அளப்பரியது. நோய்களை வரவிடாமல் தடுக்கவும், நோய்களை தீர்க்கவும் மருந்தாக இதனைப் பயன்படுத்தினர். இன்றளவும் நாம் பயன்படுத்தி வருவது தமிழர் மரபின் அடையாளம்.
வளி, அழல், ஐயம் எனப்படும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் தான், சித்த மருத்துவத்தில் நோய்களுக்கான முதன்மை காரணம்.
நவீன அறிவியல் கண்டுணராத பல நோய்களை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சித்தர்கள் வாத, பித்த, கப அடிப்படையில் வகுத்து, அதற்கான மருத்துவ முறைகளைத் தொகுத்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்மை செய்தனர். வாதம் எனும் வாயு , பித்தம் எனும் சூடு, கபம் எனும் நீர் இவை மூன்றையும் நம் உடலில் சம அளவு வைப்பதே நோய் அணுகாதிருக்க வழி. இவை மூன்றையும் சம அளவு வைக்கும் தன்மையுடைய எளிய மருந்து ஒன்று உண்டெனில் அதுவே அமிர்தம். அத்தகைய அமிர்தம் தான் "திரிகடுகு' எனும் மாமருந்து .
திரிகடுகில் உள்ள "சுக்கு' வாதத்தையும், அதில் உள்ள "மிளகு' பித்தத்தையும், அதிலுள்ள "திப்பிலி' கபத்தையும் நம் உடலில் சம அளவு வைக்க உதவுவது தான் இதன் சிறப்பு. சித்த மருத்துவத்தில் சுக்கு,மிளகு,திப்பிலி சேராத மருந்துகளே இல்லை எனலாம்.
உலர்ந்த இஞ்சியே "சுக்கு' எனப்படும். "சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்ரமணியர்க்கு மிஞ்சிய தெய்வம் இல்லை' என்பது சொலவடை. அவ்வளவு மகத்துவம் மிக்கது, தெய்வத்திற்கு இணையானது "சுக்கு'. "சுக்கிற்கு புற நஞ்சு' என்பது சித்த மருத்துவ வழக்கு. அதாவது தோல் நீக்கிய சுக்கினை உணவாக பயன்படுத்த நல்ல பலனை தரும். இதில் உள்ள "ஜின்ஜிரால்' எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவ குணத்திற்கு காரணமாக உள்ளது.
புற்று நோய் சிகிச்சையான கீமோதெரபி சிகிச்சைக்கு பின் ஏற்படும் இடைவிடாத வாந்திக்கும் சுக்கும் நல்ல பலன் தருவதை ஆய்வு முடிவுகள் கூறுவது சிறப்பு. மேலும் பிரசவித்த பின்னர் தமிழகத்தில் காலம் காலமாக கொடுக்கப்படும் செளபாக்கிய சுண்டி லேகியம் எனும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் சித்த மருந்தில் முதன்மையானது சுக்கு தான்.
சுக்கு பொடியினை உணவில் சேர்த்துக்கொள்ள வாய் குமட்டல், வாந்தி, பித்த மயக்கம், அஜீரணம் இவை நீங்கும். மேலும் மூட்டுகளை பற்றி வரும் ஆர்ûத்ரடிஸ் எனும் மூட்டு வாதத்திற்கு நன்மை தரும். சுக்குவை பொடித்து மூட்டுகளில் பற்றிட வீக்கம் குறையும். அல்லது பாலில் தோல் நீக்கிய சுக்கு சேர்த்து காய்ச்சி குடித்தாலும் அதன் மருத்துவ குணங்களை அடையலாம். சுக்கு சேரும் சுக்கு தைலத்தை வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுத்தாலும் நல்ல பலனை தரும்.
சளி, இருமல், காய்ச்சல், தலை வலி, ஒற்றை தலை வலி ஆகிய நோய் நிலைகளிலும் நற்பலனை தரும். ஆன்டி ஆக்ஸிடன்ட் எனும் உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சி தரும் தன்மையும் உடையதால் அதிக ரத்த அழுத்தம், இருதய நோய்கள், புற்று நோய் போன்ற நாட்பட்ட நோய் நிலைகளில் கூட பயனளிக்கும் வண்ணம் உள்ளது. தினந்தோறும் நாம் எடுத்துக்கொள்ளும் இஞ்சி டீ, நம் உடலில் செல்களுக்கு ஆதாரமான டிஎன்ஏ வரை சென்று பயனளிக்கும் தன்மை உடையது என்பது ஆச்சர்யம் தான். மொத்தத்தில் சுக்கு எனும் எளிய மூலிகை நோய்களுக்கு காரணமான வாதக் குற்றத்தை, சுக்கு நூறாய் சிதைக்கும் தன்மையுடையது.
"மிளகு' என்ற சித்த மருத்துவ மாமருந்து பற்றிய வரலாற்றை அறியாதவர் இல்லை. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு வரலாற்று செய்தி ஒன்று இருப்பினும், மருத்துவ செய்தியும் உள்ளது. என்னவெனில் உண்ணும் உணவில் உள்ள ஒவ்வாமையை உண்டாக்கும் தன்மையுள்ள பொருட்களை தடுக்கும் தன்மையுடையது. விட்டு விட்டு வரக்கூடிய மலேரியா காய்ச்சல் அச்சுறுத்திய 1886-ம் ஆண்டுகளில் மிளகு பயன்படுத்தப்பட்டு நல்ல பலன் அளித்ததை ஆய்வு தரவுகள் கூறுகின்றது. சீன மருத்துவத்திலும் நம்ம ஊர் மிளகு காக்கை வலிப்பு நோய்க்கு காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மிளகில் உள்ள வேதிப்பொருட்கள் பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்தது. நுண்ணுயிர்க்கொல்லி சிகிச்சையில் பயன்படுத்தும் ஆன்டி-பயோட்டிக் மருந்துகளின் செயல்திறனை மிளகு அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது. நாம் பயன்படுத்தும் மிளகு ரசமும் மிகச்சிறந்த கிருமிக்கொல்லி என்பதற்கு இதுவே சான்று. இத்தகைய மருத்துவ குணமிக்க மிளகினை தமிழர்கள் பல்வேறு உணவு வகைகளில் சேர்த்து பயன் அடைந்து வருகின்றனர். மேலும் மிளகிற்கு சளி, இருமல், அஜீரணம், மார்பில் கட்டிய கோழை, சுரம், தொண்டைக்கட்டு இவற்றை போக்கும் தன்மையுடையது. மூன்று குற்றங்களில் பித்த குற்றத்தை குறைக்கும் தன்மை இதற்குள்ளது.
அதில் உள்ள "பைப்பரின்' எனும் முக்கிய மூலக்கூறு இன்று நவீன மருந்து வணிகத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. பல்வேறு கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது. எல்லாவற்றிக்கும் மேலாக பைப்பரின் வேதிப்பொருள் புற்று நோய் சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உள்ள இது, புற்று செல்களுக்கு எதிராக செயல்படும் தன்மையும், புற்று செல்களை பரவ விடாமல் தடுக்கும் தன்மையும் உடையது. நமது பாரம்பரிய உணவு கலாசாரம் வயிற்றை நிரப்பும் வெறும் உணவாக மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தை தரும் அருமருந்தாகவும் இருப்பது மிக சிறப்பு.
திரிகடுகில் சேரும் கபத்தை அறுக்கும் மற்றுமொரு மூலிகை திப்பிலி. நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஹிப்போகிரடஸ், திப்பிலி மசாலா பொருள் அல்ல , மருந்து பொருள் என்று விவரித்துள்ளது சிறப்பு. மிளகை உலக நாடுகள் பயன்படுத்தும் முன்னரே திப்பிலியை பயன்படுத்தியிருப்பது சிறப்பு. ஆனால் தமிழ் நாகரிகம் தோன்றிய பொழுதிலிருந்தே, மிளகு திப்பிலி இரண்டையும் பயன்படுத்தி வந்தவர்கள் நாம் என்பது மறுக்க முடியாத உண்மை.
திப்பிலியை நாம் உணவில் அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால் சித்த மருத்துவத்தில் கப குற்றத்தை தணிக்கும் தன்மையுடைய பெரும்பாலான மருந்துகளில் திப்பிலி சேருகின்றது. திப்பிலியினால் சளி, இருமல், ஆஸ்துமா, குளிர் சுரம், தொண்டைக்கம்மல், அஜீரணம், வயிறு பொருமல் ஆகிய பல நோய்கள் நீங்கும். திப்பிலி பசியை இயற்கையாக தூண்டி, குடலில் உள்ள வாயுவை வெளியேற்றும் தன்மையுடையது. இதற்கும் அதில் உள்ள பைப்பரின் எனும் வேதிப்பொருளே மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. திப்பிலி ரசாயனம் எனும் சித்த மருந்து கபத்தை வேரறுக்கும் பெருமருந்து.
பல்வேறு நோய் நிலைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் தன்மையும் உடையது. சளி,இருமல், ஆஸ்துமா ,காய்ச்சல், தொண்டைக்கம்மல், மூட்டு வலி போன்ற பல்வேறு வியாதிகளுக்கும் நல்ல பலன் அளிக்கக்கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்த தகுந்த எளிய மூலிகை மருந்துகளின் கலவை இது.
திரிகடுகு என்ற தமிழர்களின் வாழ்வியலோடு சேர்ந்த சித்த மருந்தினை பாலில் அல்லது தேனில் கலந்து எடுத்துக்கொள்ள அதன் மருத்துவ குணத்தை அடைய முடியும். மஞ்சள் பொடி சேர்த்த பாலுடன் திரிகடுகினை எடுப்பது இன்னும் சிறப்பு. அல்லது உணவில் அவ்வப்போது ரசத்துடன் சேர்த்து எடுத்தாலும் நல்ல பலனை தரும். அதாவது உணவாகவோ மருந்தாகவோ எதாவது ஒரு விதத்தில் எடுக்கலாம்.
மொத்தத்தில் "திரிகடுகம்' தமிழ் இலக்கியத்திற்கு மட்டும் கொடையல்ல, தமிழ் மருத்துவத்திற்கும், தமிழர் உணவியலுக்கும் கொடை தான். அவற்றை முறையாக பயன்படுத்தி வாழ்ந்தால் நலம் நம்மை நாடி வரும். வாழ்நாள் கூடும்.
அரசு சித்த மருத்துவர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.