காஞ்சிபுரத்தின் தொன்மை வரலாறு!

பல்வவ மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய காஞ்சிபுரம் மிகவும் தொன்மையான வரலாறு உடையதாக விளங்குகிறது.
காஞ்சிபுரத்தின் தொன்மை வரலாறு!
Published on
Updated on
2 min read


பல்வவ மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய காஞ்சிபுரம் மிகவும் தொன்மையான வரலாறு உடையதாக விளங்குகிறது.  இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் அதன் தொன்மைச் சிறப்பை சான்றுகளுடன் எடுத்துக் கூறுகின்றன.

காஞ்சிபுரத்தில் மத்திய அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை,  சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை ஆகியன அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன. 1953-ஆம் ஆண்டு தொடங்கி,  1977-ஆம் ஆண்டு வரை பல்வேறு இடங்களில், பல்வேறு காலகட்டங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

பல்லவமேடு:  காஞ்சிபுரம் நகருக்கு தென் மேற்கில் மேடாக உள்ள "பல்லவமேடு' என அழைக்கப்படும் இடத்தில் 1953-54,  1970-71 ஆண்டுகளில் அகழ்வாய்வு நடைபெற்றது. பல்லவர் கால அரண்மனை போன்றவை இந்தப் பகுதியில் இருக்கலாம் எனக் கருதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரையிலான நான்கு காலகட்டத்தைச் சேர்ந்நத கட்டடங்கள் காணப்பட்டன. மேலும் உறைகிணறுகள்,  சங்கு வளையல் துண்டுகள், மட்பாண்டங்கள் கிடைத்தன. 

1970-71-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழ்வாய்வில் இப்பல்லவமேடு பகுதிக்கு அருகில் வேகவதி ஆறு ஓடியது என அறியப்பட்டது.  நகருக்கு சுமார் 2 கி.மீ. தொலைவில் வேகவதி ஆறு ஓடுகிறது.  அகழ்வாராய்ச்சியில் மூன்று பண்பாட்டுப் பிரிவுகள் கொண்ட நாகரிகம் நிலவியிருந்ததை வெளிப்படுத்தியது. 

கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வரை மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர் என்பதை அறிய முடிந்தது.

சங்கரமடம்: 1962-63-ஆம் ஆண்டில் இங்கு அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இரண்டு பண்பாட்டுப் பிரிவுகளின் தொல்லியல் சான்றுகள் கிடைத்தன. ரோமானிய நாட்டுடன் கொண்டிருந்த தொடர்புக்கு அடையாளமாக ரெளலடட்  பானை ஓடுகளும்,  வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் 59 கூம்பு வடிவ ஜாடிகளும் வெளிப்படுத்தப்பட்டன. இவை ரோமானிய நாட்டிலிருந்து வந்த மதுவை சேகரிக்கப் பயன்பட்டிருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது.

மேலும், கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவாகன மன்னர் ருத்ர சாதகர்ணியின் செப்புக் காசுகளும்,  உஜ்ஜயினி சின்னம் உள்ள செப்புக்காசு,  தமிழ்-பிராமி எழுத்துகளும் - திருமகளின் ஸ்ரீ சக்கர வடிவமுடைய காசுகளும் கிடைத்தன. செம்பு,  பவளம், கண்ணாடி மணிகள் தந்த சீப்பின் ஒரு பகுதி, சுடுமண் பொம்மைகள் போன்ற தொல்பொருள்கள் கிடைத்தன. மேலும் அகழாய்வுக் குழியின் மேல் நிலையில் இராஜராஜ சோழனின் (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) காசும் கிடைத்தது. கிடைத்த தொல்லியல் சான்றுகளைக் கொண்டு இங்கு நிலவிய கி.பி. 1-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரையிலான கால பண்பாட்டு நாகரிக சிறப்பை அறிய முடிந்தது.
1969-ஆம் ஆண்டு முதல் 1977-ஆம் ஆண்டுவரை சென்னைப் பல்கலைக்கழகம் இந்நகரில் 18-க்கும் மேற்பட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது. காமாட்சி அம்மன் கோயில் அருகே நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மிகவும் சிறப்புடையது.

ஏகாம்பரேசுரவரர் கோயில் அருகே ஞானப்பிரகாச சுவாமிகள் மடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த தொல்பொருள்கள் கிடைத்தன. கறுப்பு  சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கூம்புவடிவ ஜாடிகள் போன்றவை கிடைத்தன.

இங்கு பெளத்த விகாரை எனக் கருதப்படும் கட்டடத்தை சுட்ட செங்கற்களும்,  வட்டவடிவிலான சிறிய ஸ்தூபிகள் அடிப்பகுதியும் வெளிப்படுத்தப்பட்டது. கட்டடப் பகுதியில் கீழ்மண் அடுக்கில் தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்பு உடைய சாம்பல் நிற மட்பாண்ட ஓடு கிடைத்தது. இதில் "புதலதிச' என்ற பொறிப்பு காணப்பட்டது. "புதலதிச' என்பது பெளத்த சமயத்தோடு  ஒரு துறவியின் பெயராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

காமாட்சி அம்மன் கோயில் அருகே தொடர்ச்சியாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ரெளலடட், அரிட்டைன் வகை ரோமானிய பானை ஓடுகள், சுடுமண் பொம்மைகள் கிடைத்தன. சுடுமண்ணால் ஆன காசுகளை வார்க்கும் மூன்று அச்சுகள்  கிடைத்தன. 

ஒரு காசின் அச்சு தமிழ்-பிராமி எழுத்துகளையும்,  உஜ்ஜயினி சின்னத்தையும்,  மற்றொன்றில் இரட்டை மீன்கள் - உஜ்ஜயினி சின்னத்தையும் கொண்டிருந்தன என்பது சிறப்புக்குரியது. அரைவட்டம் உடைய பெளத்த ஸ்தூபி போன்ற ஒரு கட்டட அமைப்பு காணப்பட்டன. இக்கட்டடத்தில் 4 வரிசை செங்கற்கள் காணப்பட்டது. கீழ்வரிசை (2 வரிசை) வட்ட வடிவிலும், மேல்வரிசை நீண்ட செவ்வக அமைப்பிலும் இருந்தது. இக்கட்டடப் பகுதி கி.மு. 2-ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்டது. 

தொடர்ச்சியாக இப்பகுதியில் நடைபெற்ற அகழாய்வுகளின் மூலம் கி.மு. 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த தொல்பொருள்கள் கிடைத்தன. சுடுமண்ணாலான தாயத்து அமைப்பில் திருமகள் போன்ற சிறப்பான தொல் பொருள்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ஏகாம்பரேசுவரர் கோயில் அருகிலும்,  வரதராஜப்பெருமாள் கோயில் அருகிலும் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றன. 

வரதராஜப்பெருமாள் கோயில் அருகில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பல்லவர்கால மட்பாண்டங்கள், உறைகிணறு, விஜயநகர கால தங்க காசு போன்றவை கிடைத்தன.

காஞ்சிபுரத்தில் 18-க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஆய்வில் கிடைத்த தொல்பொருள்கள்  காலக்கணிப்புப்படி) கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியான நாகரிகப் பண்பாடு கொண்டு விளங்கியதை அறிய முடிந்தது. ரோமானிய நாட்டுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பினையும் அறிய முடிந்தது.

காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஊர்களில் - கட்டவாக்கம், வேகவதி ஆற்றங்கரை அருகில், ஜீனக்காஞ்சி அருகில், பிள்ளையார்பாளையம், புத்தர் அகரம், சிங்கடிவாக்கம் போன்ற ஊர்களிலும் காஞ்சி ஸ்ரீ சந்திரசேகர சரசுவதி விஸ்வ மகாவித்யாலயம் கல்லூரி அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. பல அரிய தொல்லியல் சான்றுகள் 
கிடைத்துள்ளன.

காஞ்சிபுரம் சங்கக் காலத்துக்கு முன்பிருந்தே ஒரு தொன்மைச் சிறப்பு மிக்க நகரமாக விளங்கியது என்பதை அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com