

இந்தியாவின் எல்லைக்குள் அந்நியர்கள் நுழைந்து விடாமலிருக்க, கொளுத்தும் வெயிலிலும், கடும் பனியிலும், கனத்த மழையிலும் ஒரே இடத்தில் நின்று நாட்டைக் காப்பவர்களே எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள். இவர்கள் எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பள்ளி மாணவர்களில் உள்ள 13 பேரைத் தேர்வு செய்து அவர்களை எல்லைக்கே அழைத்துச் சென்று ஒரு வாரப் பயணத்தை முடித்து திரும்பியிருக்கிறது காஞ்சிபுரத்தில் உள்ள "தியாகம் போற்றுவோம்' என்ற அமைப்பு.
கடந்த அக். 30 -ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இவர்கள் ஒன்று சேர்ந்து புதுதில்லிக்கு ரயிலில் சென்றனர். பின்னர் அங்கிருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளான வாகா எல்லைக்கும்,உசைனிவாலா எல்லைப் பகுதிக்கும் சென்று அங்கு பணியாற்றும் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுடன் கலந்துரையாடி விட்டு திரும்பியிருக்கின்றனர். இந்தப் பயணத்துக்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் வளவன் என்பவர் தலைமை வகித்து அழைத்து சென்றார்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பள்ளி மாணவ,மாணவியர்கள் அஞ்சல் அட்டையில் எழுதியிருந்த வாசகங்கள் அடங்கிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழ்த்துக் கடிதங்களை வீரர்களிடம் கொடுத்துள்ளனர். இந்த அனுபவங்களை காஞ்சிபுரத்தில் (டிச. 1)-இல் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க நாள் விழாவில், மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் பேசியது:
எம்.நரேன்:
இணையத்தின் மூலம் 5 கூட்டங்களும், சென்னையில் நேரில் ஒரு கூட்டமும் நடைபெற்றது. இவற்றில் எல்லைப் பாதுகாப்புப் படை, வீரர்கள் பாதுகாக்கும் விதங்கள், பயண விவரம் குறித்து தெளிவாக சொன்னார்கள்.13 மாணவர்களுடன் 6 வழிகாட்டிகளும் சேர்ந்து மொத்தம் 19 பேருக்கு ஒரு வாரப் பயணமாக இருந்தது. அக்.30-இல் ரயில் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் அம்ரிஸ்டர் மாவட்டத்தில் உள்ள வாகா எல்லைக்குச் சென்றோம். இங்கு தான் தினசரி இந்தியா-பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒரே நேரத்தில் அவரவர்களது நாட்டின் கொடியை சூரிய அஸ்தமனத்தின்போது கொஞ்சம்,கொஞ்சமாகவும்,செங்குத்தாகவும் கீழே இறக்குகின்றனர்.
கொடியை இறக்கி முடித்ததும் கம்பெனி கமாண்டர் ஒலிபெருக்கியில் மிகச் சத்தமாக "ஹிந்துஸ்தான்' என்கிறார். உடனே பார்வையாளர்கள் வானமே அதிரும்படி " ஜிந்தாபாத்' என்கிறார்கள். இதே நடைமுறையில், " வந்தே மாதரம்,பாரத் மாதா கி ஜெய்' என்ற வாசகங்கள் ஒலிபெருக்கியில் ஒலிக்கும்போது தேசப்பற்று இல்லாதவர்களுக்கும் தேசத்தின் மீது பற்று ஏற்பட்டு விடும்.அவர்களின் மிடுக்கான உடையும்,நடையும்,செய்கைகளும் என்னை கவர்ந்தன.
ரா.லோகேஷ்:
கா எல்லையைப் போல இல்லாமல், உசைனிவாலா எனும் எல்லைப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் அவரவர்களது நாட்டின் கொடியை இறக்கும்போது நேராக,செங்குத்தாக இறக்காமல் சாய்வாக கீழே இறக்குகின்றனர்.இதைப் பார்ப்பதற்கு கட்டணம் இல்லை. முன்பதிவு அவசியம். வாகா எல்லையில் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வசதியும் உள்ளது.இரு நாட்டு வீரர்களும் கொடியை இறக்கும்போது ஒருவர் எல்லைக்குள் மற்றொரு நாட்டவர் மாறி,மாறி சென்று திரும்பி வருகிறார்கள்.
எம்.ஹரிகிருஷ்ணன்:
ஆண்டுக்கு 60 நாள்கள் மட்டும்தான் விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும். இந்த விடுப்பை கொஞ்சம், கொஞ்சமாகவோ அல்லது மொத்தமாகவோ எடுத்துக் கொள்ளலாம்.விடுப்பு நாள்களைத் தவிர மற்ற நாள்களில் அவர்கள் குடும்பங்களைப் பற்றி சிந்திக்க கூட நேரமில்லை.சிந்திப்பதும் இல்லை. நாட்டைப் பாதுகாப்பதில் பெருமைப்படுகிறார்கள். "மரணம் நாட்டுக்காகத்தான் இருக்க வேண்டும்' என்கிறார்கள்.
எம்.நிதிஷ்:
பஞ்சாப் பொற்கோயிலில் ஒருநாள் தங்கினோம். சீக்கியர்களின் புனித தலமான இங்கு, நாம் விட்டுச் செல்லும் காலணியைத் திரும்பி வந்து பார்க்கும் போது சுத்தமாக இருக்கும். தொழிலதிபர்கள்,முக்கியப் பிரமுகர்கள் பலரும் காலணிகளையும் பாத்திரங்களையும் சுத்தப்படுத்துகிறார்கள். இதற்கும் முன்பதிவு அவசியம். தலையில் துண்டு கட்டிக்கொண்டு தான் கோயிலுக்குள் செல்ல வேண்டும். 24 மணி நேரமும் இலவச உணவு வழங்குகிறார்கள்.தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு.
எம்.அப்துல்ரகுமான்: ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்தில், பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் ஆகிய மூன்று பேரின் மார்பளவு சிலைகள் உள்ளன. 400-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் கொல்லப்பட்டு ரத்தம் சிந்தி இறந்து மடிந்த இடம்.அந்த இடத்துக்குள் சென்றதும் எங்களுக்கு நாட்டுக்காக நாமும் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த இடத்திலிருந்த தியாகிகள் ரத்தம் சிந்திய மண்ணை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டோம்.
கே.சதீஷ்:
பயணத்தின்போது நாங்கள் எந்த இடத்திலும் பாலித்தீன் பைகளை உபயோகிக்கவில்லை. இந்தப் பயணத்தில் ஒன்றை மட்டும் தெளிவாக உணர்ந்து கொண்டோம். எந்தத் துறைக்குப் போனாலும் அத்துறையில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாகவும்,மனிதத்தன்மையோடும் இருக்க வேண்டும் என்பதை கற்றுத் தந்தது. பயணம் முடிந்து பிரியும்போது சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் ஒன்றாக இணைந்து, "தேசம் காக்க சுவாசம் தருவோம்' என்று கோஷமிட்டோம்.இவ்வாறு அவர்கள் பேசினர்.
"அட்டாரி - வாகா அணிவகுப்பு நிகழ்வைக் காண ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்' என்று விழாவில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.