

"நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஆறாத வலி ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும். அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் ஒரு கோபத்தை சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம். ஒன்லைன் ரொம்பவே சிம்பிள்தான். ஆனால், க்ரைம் த்ரில்லரில் திரைக்கதை ரொம்பவே முக்கியம். படத்தின் மேக்கிங் இன்னும் பலம். . நம்மைச் சுற்றி நடந்து வருகிற சம்பவங்கள்தான்.'' அன்பு கரம் கொடுத்து பேசத் தொடங்குகிறார் இயக்குநர் அமுதவாணன். ஏற்கெனவே கோட்டா படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். இப்போது "வி 3'
படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
வி 3 எதன் குறியீடாக கதையில் வரும்...
நல்ல வேகம் காட்டுகிற சினிமா. அதற்கேற்ற தலைப்பு வேண்டும். எனக்கு முதலில் இந்தத் தலைப்பில் உடன்பாடு இல்லை. ஆழ்ந்த யோசனைக்குப் பின் இதுதான் சரியாக வந்தது. அப்படித்தான் இந்த தலைப்பு வந்து சேர்ந்தது. சமூக நலன், உண்மை, யாரிடமும் பார்க்காத பக்கங்கள் என இந்தப்படம் பேசும். சினிமாவில் மாற்றம் தேவைப்படும் சமயம் அதைச் செய்யத் தயங்கக்கூடாது என்று நினைத்து இந்தக் கதையை உருவாக்கினேன். அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை கடந்து விடுகிற மனசு, எதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சி கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும். அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை.
நல்லவனாக வாழத்தான் எல்லோருக்கும் ஆசை. ஆனால், காலம் எல்லாவற்றையும் கண்ணெதிரே கலைத்து போட்டு விட்டு ஒன்றும் தெரியாத சிறுப் பிள்ளை போல் ஓடி ஒளிந்து கொள்கிறது. நல்லவன் கெட்டவனாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான். எதை வெறுக்கிறமோ, அதை நேசிக்கிறோம். எதை விரும்பினமோ, அதை வெறுக்கிறோம், ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனை குழிக்குள் தள்ளி, கேட்காததை கொடுத்து கேட்டதை மறுத்து விளையாடுகிற இந்த காலம் ஒரு தனி மனிதனுக்கு என்ன பரிசளித்தது என்பதுதான் இங்கே கதைக்களம். நம்பிக்கை, துரோகத்தின் வலியை இன்னும் அக்கறையாக முன் வைக்கும் திரைக்கதை. தண்டனைகளை விட குற்றங்களுக்கு தீர்வு என்ன என கேள்வி கேட்கிற கதை.
திரைபாணி வடிவம் எப்படி வந்திருக்கிறது...
ஆண்மையும் பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம். பெரும்பாலான ஆண்கள் அசிங்கமாக நிற்பதற்கு, பெண்மையை அடைந்து விட வேண்டும் என நினைப்பதுதான் காரணம். ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்துக் கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம மனிதர்களாக ஆகிறோம் என்பது நம்பிக்கை. பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன.
இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். பெண்களுக்கு எதிராக சமீபமாக அரங்கேற்றப்பட்டு வரும் பாலியல் தொந்தரவுகளை முன் வைக்கிற திரைக்கதை.
வரலெட்சுமிக்கு கதைகளை தோளில் சுமக்கும் பொறுப்பு வந்திருக்கிறது.... இந்தக் கதையில் அவருக்கு பிடித்த அம்சம் என்ன....
ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்த துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது.
இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். குறிப்பாக காதல். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும். அப்படியோர் பாதையில்தான் இந்த கதை பயணமாகும். காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன. வரலெட்சுமிக்கென தனி ரசிகர்கள், ஒரு நல்ல சினிமாவுக்கான வியாபாரம் என ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு செய்து முடித்திருக்கிறேன்.
மற்ற இடங்களில் யாரெல்லாம் இருக்கிறார்கள்....
ஆடுகளம் நரேன் ஒரு கதையில் இருந்தால் இங்கே வெற்றி என்ற பரவலான பேச்சு உண்டு. அதற்காக மட்டுமே இல்லாமல், கதையில் ஒரு ஒரு கேரக்டர் வலுவானதாக இருந்தது. அதற்கு அவரைத்தான் யோசித்தோம். அவரை விட்டால் ஆள் இல்லை என இப்போது படத்தின் ரஷ் பார்க்கும் போது தெரிகிறது. அருமையான நடிகர். இதமான நண்பர். அவருடைய அனுபவத்தின் இடங்களை இந்தக் கதையின் நீங்களும் பார்க்கலாம். அவரை படம் முழுவதும் ரசிக்க நிறைய இடங்கள் உண்டு. அவரின் நடிப்புக்கு சரியான இடங்கள் உண்டு. சினிமாவில் எல்லாம் தெரிந்தவர் என்பதும் எனக்கு பெரிய ப்ளஸ். 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
கன்னட சினிமாவில் டாப் 5 இடங்களில் உள்ள நடிகை பாவனாவுக்கும் முக்கிய இடம். பாபநாசம் படத்தில் கமல் சாரின் இளைய மகளாக வந்தாரே எஸ்தர் அவர் கதையில் அவ்வளவு பொருத்தம். இப்படி நிறைய பேர் சினிமாவில் இருக்கிற பிரியமும், காதலும் குறையாதவர்கள் இவர்கள். அனுபவங்களோடு நிற்கும் நடிகர்களோடு வேலை பார்ப்பதில் எனக்கும் அவ்வளவு ஈடுபாடு. எல்லோரின் பங்குமே இந்தப் படத்துக்கு மிக முக்கியமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.