
சென்னை வரும்போது அண்ணா முல்லை பதிப்பகத்துக்கு வருவது வழக்கம். அண்ணாவை காண அரசியல் நண்பர்களும், கட்சித் தோழர்களும் அதிகமாக வருவார்கள்.
எஸ்.வி.லிங்கம், நடிகமணி டி.வி.நாராயணசாமி, அரங்கண்ணல், ஆர்.எம்.வீ., அன்பழகன், நெடுஞ்செழியன், டி.எம்.பார்த்தசாரதி, ஈ.வி.கே.சம்பத், சத்தியவாணி முத்து, முன்னாள் மேயர் முனுசாமி உள்ளிட்டோர் அண்ணாவைக் காண பதிப்பகத்துக்கு வருவார்கள்.
1945-இல் ஒரு நாள் எம்ஜிஆர் பதிப்பகத்துக்கு வந்தார். பார்த்ததும் முல்லை முத்தையா தெரிந்துகொண்டார். அதற்கு முன் இருவரும் சந்தித்தும் இல்லை. பேசியதும் இல்லை.
எம்ஜிஆரின் சிவந்த மேனி, சுருண்ட முடி, வெள்ளைக் கதர் ஜிப்பா, கை சுருட்டி விடப்பட்டிருந்தது. கவர்ச்சி மிகுந்த தோற்றம்.
முல்லை முத்தையாவும் வணக்கம் தெரிவித்தார்.
பதில் வணக்கம் கூறி, புன்முறுவலுடன், ""அண்ணா வந்திருக்கிறார்களா?'' என்று கேட்டார்.
""வருவார். உட்காருங்கள்'' என்று கூறி முல்லை முத்தையா உபசரித்தார்.
சிறிதுநேரம் இருந்துவிட்டு, எழுந்து புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பீரோவைப் பார்த்து, "அழகின் சிரிப்பு', "பாண்டியன் பரிசு', "பாரதிதாசன் கவிதைகள்', "குடும்ப விளக்கு', "காதல் நினைவுகள்' ஆகிய நூல்களை எடுத்து, ""இதற்குப் பில் போடுங்கள்'' என்று கூறி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து கொடுத்தார். அப்போது நூறு ரூபாய் நோட்டைக் காண்பது அரிது. முல்லை முத்தையா பிரமித்துவிட்டார்.
""ரூபாய் வேண்டாம். புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார் முல்லை முத்தையா.
""இது வியாபாரம். மூலதனம் போட்டு அச்சிட்டிருக்கிறீர்கள். வருகிறவர்களுக்கெல்லாம் பணம் வாங்காமல் புத்தகங்களைக் கொடுத்தால் தொழில் என்ன ஆகும்?'' என்று கூறி, நோட்டை நீட்டியவாறு இருந்தார்.
அவர் கூறிய சொற்களும், நடந்துகொண்ட பெருந்தன்மையும் முல்லை முத்தையாவை நெகிழச் செய்தது. இதன்பின்னர், பணத்தை மறுக்காமல், எம்ஜிஆரின் சிவந்த கரத்திலிருந்து பெற்றுக் கொண்டார்.
சிறிது நேரத்தில் அண்ணா வந்துவிட்டார். எம்ஜிஆரும், அண்ணாவும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து, விட்டுப் புறப்பட்டார்கள்.
அப்போது எம்ஜிஆர் புன்னகை தவழ முல்லை முத்தையாவிடம் பேசிவிட்டு சென்றார்.
இந்தச் சந்திப்பு குறித்து முல்லை முத்தையா அவ்வப்போது கூறுகையில், "" இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி பணம் கொடுக்காமல் எடுத்துச் சென்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சொல்லாமலேயே எடுத்துக் கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன்.
ஆனால், வற்புறுத்திப் பணத்தைக் கொடுத்துப் புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட எம்ஜிஆரை நினைக்கும்போது, எனக்குப் பிரமிப்பாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.