சிறப்புமிக்க 'சங்கு வளையல்'

பெண்கள் அணியும் அணிகலன்களில் மிகவும் சிறப்பானதும், அழகு தருவதும் கைகளில் அணியும் வளையல் ஆகும்.
சிறப்புமிக்க 'சங்கு வளையல்'
Updated on
1 min read


பெண்கள் அணியும் அணிகலன்களில் மிகவும் சிறப்பானதும், அழகு தருவதும் கைகளில் அணியும் வளையல் ஆகும்.  தங்கம், வெள்ளி, செம்பு போன்ற பல்வேறு பொருள்களால் செய்யப்பட்ட வளையல்கள் இருந்தாலும் சங்கு வளையல் மிகவும் தொன்மை சிறப்பு வாய்ந்தவை.

தமிழகத்தில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளிலும் அதிக அளவில் சங்கு வளையல் துண்டுகள் கிடைத்துள்ளன. 

சங்கில் பல வகைகள் உண்டு. நந்து, சுத்தி, பணிலம், நாகு, வண்டு, கோடு, வளை, சுரிமுகம், கம்பு, வெள்ளை, இடம்புரி, வலம்புரி, தரா, சங்கு என்பன.

சங்க இலக்கியங்களில் சங்கு வளையல் பற்றி குறிப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. வளை என்றும் தொழ என்றும் குறிப்பிடப்படுகிறது. வலம்புரி சங்கு மிகவும் தெய்வீகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. வலம்புரி சங்கில் செய்யப்பட்ட வளையல்களை அரச மகளிர் அணிந்திருந்ததாக இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். 

தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனுடைய தேவி, பாண்டிமாதேவி தனது கைகளில் தங்க வளையல்களுடன் வலம்புரி சங்கு வளையல்களை அணிந்திருந்ததாக நெடுநல்வாடை கூறுகிறது.

சங்கினை அறுத்து வளையல் செய்யப்பட்டது பற்றியும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 

விலங்கரம் பொரூஉம் வெவ்வளை போழ்நர்
மணி:(330)

விலங்கரம் பொராத சங்கின் வெள்வளை 
சீவ: (2441)

கோடு போழ் கடைநரும் (மது:511)

சங்குகளை சிறிய அரம் போன்ற கருவியால் அறுக்கப்பட்டு வளையல்களாக செய்யப்பட்டிருக்க வேண்டும். சங்குகளை அறுத்து வளையல் செய்பவர்களை வேளாப் பார்ப்பான் என அகநானூறு கூறுகிறது.

தமிழக கடற்கரை பகுதிகளில் குறிப்பாக பாண்டியர் துறைமுகப் பட்டினமாக விளங்கிய கொற்கையில் சங்கு எடுப்பவர்கள் நிறைந்திருந்தனர் என்பதையும் தனிகுடியிருப்புகள் இருந்தன என்பதை மதுரைக் காஞ்சி கூறுகிறது.

மேலும் சங்க புலவர்களில் ஒருவரான நக்கீரர் வரலாற்றில், ""அங்கங் குலைய அரிவாளில் நெய்பூசி பங்கப்பட விரண்டு கால்பரப்பி-சங்கஷனை கீர்கீர் என அறுக்கும் கீரன்'' என்றும் சங்கறுப்பது எங்குலம் சங்கரனாருக்கு ஏது குலம் என்ற சொற்போர் நடந்ததையும் நாம் அறிவோம்.

தொன்மை சிறப்பு வாய்ந்த பல ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் சங்கு வளையல்கள், வளையல் துண்டுகள், அறுத்த நிலையில் உள்ள சங்குகள், வளையல்கள் அறுத்தது போக மீதம் உள்ள பகுதிகளும் கிடைத்துள்ளன. வளையல்களின் மேற்பகுதியில் வேலைப்பாடும் செய்யப்பட்டுள்ளதை காண முடிகிறது.

பாண்டிய மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய கொற்கையில் சங்கு வளையல்களும், அறுத்த சங்குகளும் முழுமையான சங்குகளும் அதிக அளவில் கிடைத்தன. சங்கு வளையல் செய்யப்பட்ட தொழில் கூடமாக இவ்வூர் விளங்கியிருக்க வேண்டும். இதே போன்று கொடுமணல் மற்றும் காவிரிப்பூம்பட்டினமும் சிறப்பிடமாகத் திகழ்ந்திருக்கின்றன. 

மேலும் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களில் சங்கு வளையல் சிறப்பிடம் பெற்று விளங்கியதையும் அறிய முடிகிறது.

எனவே சங்க கால தமிழக வரலாற்றில் சங்கு வளையல் சிறப்பிடம் பெற்று விளங்குவதை இலக்கியங்களினாலும் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளாலும் அறியமுடிகிறது.

படங்கள்: தமிழ்நாடு தொல்லியத்துறை  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com