எனக்கான மொழி சினிமா..!

""பயணங்களே அற்புதம். ஏனென்றால் தேங்கி நிற்கிற குளம்.... எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதில் நிறைய அழுக்குதான் இருக்கும்.
எனக்கான மொழி சினிமா..!
Updated on
3 min read

""பயணங்களே அற்புதம். ஏனென்றால் தேங்கி நிற்கிற குளம்.... எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதில் நிறைய அழுக்குதான் இருக்கும். சின்ன ஓடையாக இருந்தாலும், அந்த தண்ணீர் கண்ணாடியாகி விடும். வாழ்க்கையில் எந்த இடத்திலும் இதுதான் நம் இடம் என நின்று விடக் கூடாது என்பது என் தீர்மானம். வெகு நேரம் பயணம் செய்யும் போது, கொஞ்சம் அலுப்பு வரலாம். ஆனால், அப்போது எடுக்கிற ஓய்வு கூட, ஒரு நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கிற மாதிரிதான் இருக்க வேண்டும்.

ஏனென்றால் எந்த ஓய்வும் அடுத்தடுத்த பயணத்துக்கான ஆயத்தம்தான். பணம், புகழ், காதல், கல்யாணம், குழந்தைகள் என எல்லாமே இந்தபயணங்கள் மூலமாகத்தான் கிடைத்தது.'' "83 படத்தின் மூலம் "பேன்இந்தியா ஆர்டிஸ்ட்' கிளப்பில் சேர்ந்திருக்கும் ஜீவாவின் வார்த்தைகள் இவை. எல்லா மொழிகளிலும் அறியப்படுகிற ஹீரோவாக உயரம்தொட்டதில் பூரிப்பாக இருக்கிறார்.

பாலிவுட் சினிமா வாய்ப்பு... . எப்படி இருந்தது...

அட்டகாசமான அனுபவம் அது. ஒரு இண்டர்நேஷனல் படத்தில் இருந்தது மாதிரியான உணர்வு. முழுப் படப்பிடிப்பும் லண்டனில்தான் தான் நடந்தது. எல்லா காட்சியிலும் அவ்வளவு கூட்டம் இருக்கும். ஆனாலும் துல்லியமாக அந்த கூட்டத்தை சமாளித்தது பெரும் சவால். அந்த அனுபவமே ரொம்ப புதிதாக இருந்தது. படப்பிடிப்பெல்லாம் லார்ட்ஸ் மைதானம், ஓவல் மைதானம் என உலக பிரசித்திப் பெற்ற மைதானங்களில் போய் எடுத்தோம். தெருவில் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்த பையனுக்கு லார்ட்ஸ் மைதானத்தை பார்ப்பதே கனவு தான். ஆனால் நான் நேரில் போய் அங்கே கிரிக்கெட் விளையாடினதெல்லாம் ஏதோ மாயாஜாலம் மாதிரி தான் இருந்தது.

லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிதில் என்னோட நண்பர்கள் எல்லோருக்கும் பொறாமை. அந்த படப்பிடிப்பு தளம், அரங்குகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளவே எனக்கு சிரமமாக இருந்தது. எனக்கு நதி மாதிரி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்றுத் தோன்றும். அது என் இயல்பு. சினிமாவுக்கு பல ஆண்டுகள் ஓடி விட்டன. அதை அடைய வேண்டும், இது வேண்டும் என்ற எந்த யோசனையும் கிடையாது. எதுவும் எனக்கு விதிக்கப்படவில்லை. எல்லாமே தேடிப் போனதுதான். "83' படத்தைப் பொறுத்தவரை நிறைய திட்டமிடல்கள் இருந்தன. அதுதான் எனக்கு அதில் பிடித்த விஷயம். ஸ்டோரி போர்டு, நடிப்புக்கான ஒத்திகை எல்லாமே சரியான விகிதத்தில் இருந்தது. அது தமிழுக்கும் வர வேண்டும். மொழிகள் கடந்து சுற்றி வரும் பாக்கியம் ஒரு கொடுப்பினை.

நீங்கள் போன இடங்களில் சினிமாக்களை கவனிக்கிறார்களா....

ஆமாம், உலக அளவில் இந்திய சினிமாவும், சீன நாட்டு சினிமாக்களும் கவனிக்கப்படுகின்றன. இந்திய சினிமா மார்க்கெட், படங்களின் தன்மை, தனித்துவமான கதைகள் என எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். டிஜிட்டல் வழி படங்கள் வந்த பின்னர், உலகத்திலேயே இந்திய, சீன படங்களுக்குதான் தியேட்டர் மார்க்கெட் ஒன்றே இருக்கிறது. நம் இரு நாட்டு படங்களுக்கும்தான் தியேட்டர் வருமானம் வருகிறது. ஐரோப்பிய, அமெரிக்க சினிமாக்களில் இந்த நிலை இல்லை. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியப் படங்களை பார்க்கிறார்கள். அவர்களுக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு படங்கள் என்ற வித்தியாசம் இல்லை. பாலிவுட் படங்களாகவே அனைத்து மொழி படங்களையும் பார்க்கிறார்கள். இந்திய படங்கள் தியேட்டர் வழியாக சில நூறு கோடிகள் சம்பாதிக்கிறது என்றால், சீன படங்கள் ஆயிரம் கோடி வரை சம்பாதித்து கொடுக்கின்றன.

ஸ்ரீகாந்த் கதாபாத்திரம் பற்றி ....

நான் எதுவும் பெரிதாக செய்யவில்லை. ஸ்ரீகாந்த் சார் நிறைய சொன்னார். அவர்கூட இருந்தால் போதும். அவரே எல்லாம் சொல்லி தந்துடுவார். அவர் வீட்டுக்கு போய் அவரோடு இருந்து முழுக்க விடியோ எடுத்துட்டு வந்தேன். ஒவ்வொரு காட்சி எடுக்கும் போதும், அதை போட்டு பார்த்துக் கொள்வேன். அவ்வளவுதான். ரண்வீர் இந்தப் படத்துல அவர் முழுக்க முழுக்க கபில்தேவாகவே இருந்தார். ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரோட வேலை பார்த்தது அருமையான தருணம். நிறைய பேசினோம். நிறைய சொல்லிக்கொடுத்தார். தமிழ்ப் படம் பற்றியெல்லாம் என்னிடம் கேட்டு தெரிந்துக் கொண்டார் தீபிகா.

குறிப்பிடத்தகுந்த பாராட்டுக்கள் ஏதும்....

நிறைய பாராட்டுகள். படம் வந்ததிலிருந்து தினமும் எதிர்பாராத இடத்திலிருந்து பாராட்டு வந்துக் கொண்டே இருக்கிறது. கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டி பேசினார்.

ஒரே மாதிரியான உடலமைப்போடு இருப்பது எப்படி...

அவரவர் பிரச்னைக்கு ஏற்ப அவரவரின் வாழ்க்கை. 1 ரூபாய் சம்பாதித்தால், 2 ரூபாய்க்கு செலவு இதுதான் இங்கே பலருக்கான வாழ்க்கை. லட்சம் என்றால் கோடிகளில் தேவை இருக்கும். அதை நம்புகிறேன். எனக்கும் அந்த பிரச்னை உண்டு. நான் சம்பாதிப்பதை விட கொஞ்சம் அதிக தேவை இருக்கிறது. ஆனால், என் தேவைக்கும் உடல் நிலைக்கும் தொடர்பு உண்டு. வயிறு பசிக்கிற போது சாப்பாடு அவ்வளவுதான். வேறு எதையும் வலிந்து திணிப்பதில்லை. சரியான உணவுகளை சாப்பாடுகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். புரோட்டீன், கார்போ ஹைட்ரேட் உணவுகளை எடுக்கிறேன். தினசரி உடற்பயிற்சி என்பது முதன்மையானது. சிலர் சின்ன வயதில் ஒல்லியாக இருப்பார்கள். 30 வயதுக்கு மேல் தொப்பை விழுந்துவிடும். தானாக எடை கூடுவார்கள். அந்த வயதில் உடல் மாற்றம் என்பது பொதுவானது. ஒல்லியாக இருந்தாலும், தொப்பை வரும். அந்த வயதில் உடற்பயிற்சி அவசியம். சரியானதை சாப்பிட வேண்டும். உடல் எடையை குறைக்கிறேன் என்று சாப்பிடாமல் இருப்பது தவறு.

முதல் பாலிவுட் பயணம்... எப்படி உணர்கிறீர்கள்...

ரொம்பவே அற்புதம். யாருக்கும் கிடைக்காத பயணம். அதில் வலி, சந்தோஷம் என நிறைய அனுபவங்கள் உண்டு. என் சிந்தனையை மாற்றிய பல விஷயங்கள் இருக்கின்றன. இதில், என் தனித்துவத்தை உணர வைத்த, உணர்ந்த நிமிடங்களும் உண்டு. தீர்க்கவே முடியாத நன்றிகளால்தான் நம் ஒவ்வொருவருக்குமான உலகம் உயிர்த்திருக்கிறது. யார் என்ன என்றே தெரியாமல் நம்மைத் தொட்டுத் தூக்கிய இதயங்கள் எவ்வளவு இருக்கின்றன.

வலிகளோடும், தழும்புகளோடும் அணைத்துச் சிரித்தவர்கள் மட்டும் இல்லையென்றால், நானெல்லாம் என்னவாகியிருப்பேன்... அன்பாலும் கண்டிப்பாலும் இந்தப் பாதையைப் போட்டுத் தந்தவர்களுக்கு என்ன நன்றி செய்து விட முடியும். இந்த வாழ்க்கையே அவர்களுக்கான நன்றிதான் எனத் தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com