இதுவரை செஸ்...

இந்தியாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள செஸ்ஸூக்கு 1924-இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இடம் கிடைக்காத காரணத்தால், தனியாக ஒலிம்பியாட் போட்டியை நடத்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு  முடிவு செய்தது.
இதுவரை செஸ்...
Updated on
2 min read

இந்தியாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள செஸ்ஸூக்கு 1924-இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இடம் கிடைக்காத காரணத்தால், தனியாக ஒலிம்பியாட் போட்டியை நடத்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு  (ஃபிடே) முடிவு செய்தது.

1924-இல் பாரிஸிலும், 1926-இல் புடாபெஸ்டிலும் அதிகாரபூர்வமற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டன. 

திகாரபூர்வமான  முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி லண்டனில் 1927-ஆம் ஆண்டு ஜூலை 18 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டன. அதோடு முதல் உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் ஹங்கேரி தங்கம் வென்றது. டென்மார்க், இங்கிலாந்து 2, 3-ஆவது இடங்களைப் பெற்றன. ஜார்ஜ் ஆலன் (இங்கிலாந்து), ஹால்கர் நார்பன் (டென்மார்க்) தனிநபர் தங்கம் வென்றனர்.

பரிசுக் கோப்பைகள்: இரண்டாம் உலகப் போர் வரை ஆண்டுதோறும் நடைபெற்றது ஒலிம்பியாட்.  1950-ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றது.  ஓபன் பிரிவில் சாம்பியன் அணிக்கு ஹாமில்டன் ரஸ்ஸல் கோப்பையும், மகளிர் பிரிவில் சாம்பியன் அணிக்கு வேரா மென்சிக் கோப்பையும் வழங்கப்படுகிறது. முதல் சாம்பியன் பட்டம் வென்றவர் வேரா மென்சிக் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் செஸ் ஒலிம்பியாட்: 1957-இல் ஹாலந்தில் முதல் மகளிர் செஸ் ஒலிம்பியாட் நடந்ததில் 21 அணிகள் பங்கேற்றன. 1972-இல் ஸ்கோப்ஜியில் முதன்முறையாக ஓபன், மகளிர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன.

சோவியத் யூனியன் 18, ரஷியா 8 தங்கம்: செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சோவியத் யூனியன் 18 முறையும், பின்னர் ரஷியா 8 முறையும் தங்கம் வென்றன.

அமெரிக்கா 6, ஹங்கேரி, ஆர்மீனியா தலா 3, உக்ரைன், சீனா தலா 2 முறையும் தங்கம் வென்றுள்ளன.  தற்போது 44-ஆவது செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் இந்தியா 2020-இல் ஆன்லைன் முறையில் நடைபெற்ற போட்டியில் ரஷியாவுடன் கூட்டாக தங்கப் பதக்கம் வென்றது. மேலும் 2 முறை வெண்கலம் தன் வசப்படுத்தியது.

கேரி காஸ்பரோவ்  சோவியத் யூனியன், ரஷியாவுக்காக தலா 4 முறை என 8 ஒலிம்பியாட்டில் ஆடி 4 தங்கம் வென்றார்.

2002 முதல் செஸ் ஒலிம்பியாட்டிலும் ஊக்க மருந்து தடுப்பு சோதனை கட்டாயம் ஆனது.  

மாஸ்கோ, இஸ்தான்புல், தெஸாலோனிக்கி,  போனஸ் அயர்ஸ் உள்ளிட்ட 4 நகரங்களில் தலா 2 முறை ஒலிம்பியாட்டை நடத்தி உள்ளன.

ஒலிம்பியாட் வரலாற்றிலேயே பால் கேரஸ்  (எஸ்டோனியா) 1952-இல் 14 புள்ளிகளில் 13.5 புள்ளிகளை எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 1954 முதல் 1960 வரை 4 தங்கம் வென்றார் கேரஸ் 2018-இல் பாதுமியில் செஸ் ஒலிம்பியாட் நடந்தது. ஆனால் 2020-இல் கரோனா தொற்று பாதிப்பால் ஆன்லைன் முறையில் ஒலிம்பியாட் நடந்தது. 2021-இலும் ஆன்லைன் முறையே கடைப்பிடிக்கப்பட்டது.

செஸ்ஸின் சிறப்புகள்: நுண்ணறிவு, மனத்திட்பத்துடன் ஆட வேண்டிய விளையாட்டு செஸ் ஆகும்.  அரேபிய மொழியில் இருந்து உருவான "செக் மேட்' என்ற வார்த்தை "ராஜா இறந்தார்' என்பதை குறிக்கும்.

ஆங்கிலத்தில் இரண்டாவதாக அச்சிடப்பட்ட புத்தகம் செஸ் குறித்தே ஆகும். முந்தைய காலத்தில் அரசர்கள், பிரபுக்கள் ஆகியோர் மட்டுமே ஆடியதால் "கேம் ஆஃப் கிங்ஸ்' என்ற பெயரும் உண்டு. மூன்று வகையான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பட்டம் வென்றுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த்.

ஐ.நா அறிக்கையின்படி அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷியா, இந்தியாவில் 70 சதவீதம் வயது வந்தோர் செஸ் விளையாடுகின்றனர். 60.5 கோடி பேர் வழக்கமாகவே செஸ் ஆடுகின்றனர்.  உலகின் மிகவும் வயதான கிராண்ட்மாஸ்டர் யூரி அவெர்பாக் (100).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com