பாரம்பரிய 'கலாகட்டகி' மரத் தொட்டில்கள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாரில் 400 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தினர் தொடர்ந்து தயாரித்துவரும் பாரம்பரிய  "கலாகட்டகி' மரத் தொட்டில்கள் மிகவும் பிரபலம்.
பாரம்பரிய 'கலாகட்டகி' மரத் தொட்டில்கள்
Published on
Updated on
1 min read


கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாரில் 400 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தினர் தொடர்ந்து தயாரித்துவரும் பாரம்பரிய  "கலாகட்டகி' மரத் தொட்டில்கள் மிகவும் பிரபலம்.
குழந்தைகளைத் தொட்டிலில் இடுவதற்காக, கண்ணைக் கவரும் வண்ணங்களால் அழகிய வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படும் இந்த மரத் தொட்டில்களை இன்றும் பலர் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். 
இந்தத் தொட்டில்களை 6 தலைமுறைகளாக இரு குடும்பத்தினர் தங்களது குடும்பத் தொழிலாகவே தயாரித்து வருகின்றனர். தொடக்கத்தில் அரச பரம்பரையினர் விருப்பத்துக்காகத் தயாரிக்கப்பட்டுவந்த கலாகட்டகி மரத் தொட்டில்களை நாளடைவில் பிறரும் விரும்பி வாங்கத் தொடங்கினர். தற்போது வாடிக்கையாளர்கள் தேவை குறைந்துவிட்டதால்,  பலரும் வேறு பணிகளைத் தேடி சென்றுவிட்டனர்.
44 வயதாகும் மாருதி படிகர் என்பவர் தனது தாத்தா ஓம்காரப்பா படிகரின் கைத்திறனைக் கண்டு வியந்து,  குடும்பத் தொழிலைக் கைவிட மனமின்றி தனது சகோதரர் குருநாத்துடன் இணைந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் கன்னட நடிகர் ராஜ்குமாரின் வீட்டு நிகழ்ச்சிக்காக மரத் தொட்டிலை மாருதி படிகர் அனுப்பி வைக்க,  அவருக்கு ஆர்டர்கள் குவியத் தொடங்கின.
தற்போது மீண்டும் தொட்டில்களுக்கு மவுசு அதிகரிப்பதால், இளம்தலைமுறையினரும் உற்சாகத்துடன் தொட்டில்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுகுறித்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோர் கூறியதாவது:
""தொட்டில் தயாரிக்கப் பயன்படுத்தும் மரச் சட்டங்களில் இயற்கை வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நான்கு புறங்களிலும் இதிகாச கதைகளை ஓவியங்களாகத் தீட்டுகிறோம்.  பிற மதத்தினருக்காக, அவர்கள் விருப்பப்படியே மதத் தொடர்பான ஓவியங்களை வரைந்து தருகிறோம்.
சங்கிலியில் இணைந்து ஆட்டுவதற்குத் தயாரிக்கப்படும் தொட்டில் விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையாகும்.  ஒரு தொட்டில் தயாரிக்க 45 நாள்களாகும். தாங்கிப் பிடிக்கும் கால்களுடன் தயாரிக்க ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையாகும். இந்த முழுமையான தொட்டில் தயாரிக்க 3 மாதங்கள் ஆகும்.
தொட்டி தயாரித்து வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பதற்கு முன்னதாக குடும்ப வழக்கப்படி பூஜை செய்தே அளிப்போம்'' என்றனர்.
ஜென்மாஷ்டமி, மகாவீர் ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி போன்ற பண்டிகைகளின்போது, சிறு தொட்டில்களை "ஹரக்கே தொட்டிலு' என்ற பெயரில் இவர்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதோடு, உறுதியான மரங்களைக் கொண்டு சோபா செட், சாப்பாட்டு மேஜை, கடவுள் சிலைகள் போன்றவற்றையும் "கலாகட்டகி' என்ற பெயரில் தயாரிப்பதால், இவர்களின்  கைவினைப் பொருள்களுக்கு எப்போதும் மதிப்புண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com