

வுமன் சென்ட்ரிக் படம் என்றால் ஆர்வத்துடன் தலையாட்டுகிறார்கள் கோலிவுட் நடிகைகள். அந்த விதத்தில் நயன்தாரா எப்போதுமே நம்பர் ஒன்.
ஹீரோக்களுக்கு இணையான ஒப்பனிங், மார்க்கெட், கருத்தியல் ரீதியான நடிப்பு என உச்சத்தில் இருக்கிறார். இப்போது "02' படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஜி. எஸ். விக்னேஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
""இது ஒரு த்ரில்லர் ஜானர் சினிமா. அம்மா - மகன் கதையில் ஒரு இயற்கை சார்ந்த முன்னெடுப்பு. அதைச் சார்ந்த அரசியல் பிரச்னைகள், பாகுபாடுகளை சொல்லியுள்ளேன் ....'' என்றபடி பேசத்தொடங்குகிறார் இயக்குநர் ஜி.எஸ். விக்னேஷ்.
""குறும்பட உலகம், அதன் பின் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக பணி... இதுதான் நம் பயோகிராபி. பல கதைகள் எழுதினாலும், இயற்கையின் மீதான ஆர்வத்தாலும், மானுடம் மீதான அக்கறையாலும் ஆக்ஸிஜன் பின்னணியில் இந்தக் கதையினை உருவாக்கியுள்ளேன். நம் வாழ்க்கையின் அன்றாட பிரச்னைகள், நெருக்கடிகள் பற்றி பேசும் படமாக இருக்கும். அதை டாக்குமெண்ட்ரி மாதிரி இல்லாமல் வெகுஜன சினிமாவாக எடுத்துள்ளேன். ஒரு அம்மா - மகன், ஒரு பேருந்து இதுதான் நம் கதையின் தளம். ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிகொள்கிறாள்.
நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, பேருந்தில் மாட்டிக் கொண்ட மற்றொரு பயணியான காவல் அதிகாரி குறி வைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதை பரபரப்பாக சொல்லுவதே திரைக்கதை. தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், பரபரப்பான பொழுதுபோக்கு திரில்லர் டிராமா இது.வலிமையான பெண்களுக்கு இப்படம் சமர்ப்பணம்....'' அழுத்தமாக சொல்கிறார் ஜி. எஸ். விக்னேஷ்.
முதல் படத்திலே இவ்வளவு அழுத்தமான கதையைத் தேர்வு செய்யக் காரணம் என்ன....?
இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாக பேச வேண்டிய விஷயம் இது. என் படங்களுக்கு இதுவரை எந்த இமேஜூம் இல்லாததால், எங்கேயும் நின்று நிதானிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். இதோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, எத்தனை தமிழ் கிராமங்களின் தூக்கத்தை தொலைத்திருக்கிறோம். பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால், உலகத்தில் பாதி பிரச்னைகள் இல்லாமல் போய்விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள். நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள் கிடைப்பார்கள். சரிபாதி குற்றங்கள் தொலைந்துவிடும்.
தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்குப் பணம் இல்லை. பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்க தெரிந்து விட்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். வயிற்றுப் பசிக்கு சாப்பிடத்தான், நமக்கு பணம் தேவை. ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும்போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அவர்களை விட்டு விடுங்கள் என்பதை தவிர வேறு என்ன சொல்லி விட முடியும். இது என்னுடைய தீர்க்கமான அரசியல் பார்வை.
வேறு என்ன எதிர்பார்க்கலாம்...
தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிப்போம் என்று நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. ஆனால், நாளை காற்றுக்கும் காசு கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிய நிலை வரும். நடப்பவற்றை பார்த்தால், அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மீத்தேன் தொடங்கி இப்போது பரபரப்பாக பேசுகிற 8 வழி பசுமைவழிச்சாலை வரைக்குமான போராட்டங்களும், உணர்வுகளும் இதில் உண்டு. இயற்கைக்கும், அது தருகிற செல்வத்திற்கும் அங்கே இருக்கிற மக்கள் அமோகமாக இருக்க வேண்டும். ஆனால், நிலைமை என்ன? இயற்கை அழிந்துகொண்டு இருக்கிறது. அதனால் இழப்பு, நமக்குத்தானே தவிர இயற்கைக்கு இல்லையென்று யாருக்கும் தெரியவில்லை. மலை மக்களின் குரல் இதிலே பதிவாகியுள்ளது. சொல்லப் போனால் இதில் என் குரலும், உங்களின் குரலும் அடங்கியிருக்கிறது. எந்த விதத்திலும் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் பிரதான பகுதி. மலை மக்களிடம் மிச்சம் இருப்பவை வாழ்வின் மீதான தீராத நம்பிக்கையும், நம் மண்ணின் சொற்களும்தான். ஏதோ ஒரு நாளில் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேறும் அல்லது துரத்தப்படும் கணங்கள் செத்துப் போகிற வரைக்கும் மறக்குமா என்ன....?
படத்தில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள்....
நயன்தாரா மெயின் லீட் ரோலில் நடிக்கிறார். இந்தக் கதைக்கு நயன்தாரா எந்தளவுக்கு தேவை என்பதை படத்தைப் பார்த்தால்தான் தெரியும். கதையினை கேட்டவுடனே என்னைப் பாராட்டினார். தொடர்ச்சியாக 28 நாள்கள் கால்ஷீட் தந்து படப்பிடிப்பில் இருந்தார். இந்தக் கதையை பொருத்தவரை கதையை உள்வாங்கவில்லையென்றால் நடிக்க முடியாது. அப்போதுதான் புரிந்து நடிக்க முடியும். அந்த வகையில் நயன்தாரை கதையை உள்வாங்கி நடித்தார். யூ டியூப் பிரபலம் ரித்விக் நயன்தாராவின் 8 வயது மகனாக நடிக்கிறார். இவர்களுடன் லீணா, ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி என சில கதாபாத்திரங்களும் பயணமாகும். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் 70 சதவீதத்துக்கும் மேலான காட்சிகள் பேருந்துக்கு உள்ளேயே நடப்பதாக இருக்கும். இதற்கு தத்ரூபமாக தனது கலை வடிவமைப்பின் மூலம் வலுச் சேர்த்துள்ளார் கலை இயக்குநர் சதீஷ் குமார். பெரிய திட்டமிடல்கள் இருந்தன. சமூகம் சார்ந்த படம் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே கொண்டு வந்திருக்கிறேன். இயற்கையின் சமநிலைக்கே எதிரான இயற்கையின் வியூகங்கள் வந்து விட்டன. இதையெல்லாம் ஆராய்ந்து கதை எழுதினேன். அங்கே ஒரு அன்பு, கலாசாரம், பண்பாடு என்று கதை தனக்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டது. தயாரிப்பாளர் உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.