
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம்மை மிக உச்சத்தில் வைத்திருக்கின்றன. நாமும் அவற்றை கொண்டாடி, திளைத்து வருகிறோம். ஆனால், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பலன்களைப் பெற, அவற்றின் அடிமையாக்கும் வடிவமைப்புகளுக்குள் மூழ்கிவருகிறோம்.
தொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் போக்கு சர்வதேச அளவில் காணப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 தடவைக்கு மேல் நாம் நமது கைப்பேசிகளைப் பார்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சமூக ஊடகங்களை விட்டு ஒதுங்க நினைத்தாலும் முடியவில்லை.
தொழில்நுட்பச் சாதனங்கள் நம்முடைய பிற முக்கிய வேலைகளில் இருந்தோ அல்லது நாம் வேலையில்லாமல் ஓய்வாக இருக்கும் நேரங்களில் நண்பர்கள், உறவினர்களுடன் நேரம் செலவிடா வண்ணமோ நம்மை திசைதிருப்புகின்றன.
அதே நேரத்தில், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளன என்பதை மறுக்கமுடியாது. அவை நம்மை மிகவும் திறமையாகச் செயல்பட அனுமதிக்கின்றன. தகவலைத் தேடும்போது அவற்றை உடனடியாக அளித்து, நம்மை அறிவார்ந்தவர்களாக மாற்றுகின்றன. அதோடு, உலகெங்கிலும் உள்ள நண்பர்கள், உறவினர்களுடன் நம்மை இணைக்கின்றன.
என்றாலும், புதிய தொழில்நுட்பங்களின் அடிமைப்படுத்தும் இருண்ட பக்கங்களைத் தவிர்த்து, அதன் நன்மைகளை நாம் பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை, தொழில்நுட்ப அடிமைத்தனம் என்றால் என்ன என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொண்டு, அதை உரிய நேரத்தில் மட்டும் பயன்படுத்தினால் அது சாத்தியமாகலாம்.
நாம் தொழில்நுட்பத்துக்கு எந்த அளவு அடிமையாகி உள்ளோம் என்பதைக் கண்டறிவது கடினம். காரணம், அடிமைத்தனம் என்பது எதைக் குறிக்கிறது என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. எனவே, தொழில்நுட்ப அடிமைத்தனம் போதைப்பொருளைப் போன்ற ஒரு கோளாறா என்பது குறித்து மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க மனநலச் சங்கம், மனநலக் கோளாறுகளைக் கண்டறிதல், புள்ளியியல் கையேட்டின் அண்மைய பதிப்பில் சூதாட்டத்தை சேர்த்தது. இந்தச் சங்கத்தின் ஆராய்ச்சி பின்னிணைப்பில், இணையதள விளையாட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது மனநலக் கோளாறா என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறும் அந்த சங்கம், இதுகுறித்து மேலும் ஆய்வு செய்ய பரிந்துரைக்கிறது.
இதன்மூலம், தொழில்நுட்ப அடிமைத்தனம் என்பது இணைய விளையாட்டு, சூதாட்டம், ஆபாசத்தைப் பார்ப்பது என்ற அளவில் மட்டும் நின்றுவிடாமல், சோஷியல் நெட்வொர்க்கிங், ஷாப்பிங், இமெயில் உள்ளிட்டவையும் அடிமைத்தனத்தில் ஒருபகுதியாகக் கருதப்படுவது, இந்தத் தளத்தில் மூழ்கிக் கிடக்கும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகவே உள்ளது.
மக்கள்தொகையில் 40 சதவிகிதம் வரை மின்னஞ்சல், கேமிங் அல்லது ஆபாசமாக ஏதேனும் இணைய அடிப்படையிலான அடிமைத்தனத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்ற கருத்து உள்ளது. இதுபோன்ற சிக்கல்களில் ஒருமித்த கருத்தைப் பெற காலதாமதமாகலாம். மேலும், தொழில்நுட்ப அடிமைத்தனம் குறித்த விஷயத்தில், உலக அளவில் இப்போதுதான் ஆய்வு தொடங்கியுள்ளது.
அவ்வாறு ஒரு சிக்கல் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதை தீர்ப்பதற்கான முதல்படி சிக்கலையும், சவாலையும் ஒப்புக்கொள்வது. அடுத்து உதவியை நாடுவது. சரிசெய்ய வேண்டிய பகுதியின் தீவிரத்தன்மையைப் பொறுத்து, நம்பகமான நண்பர் அல்லது உறவினர்களுடன் பேசுவது, செயல் திட்டத்தை உருவாக்குவது போன்றவற்றில் ஈடுபடலாம். இந்தப் பகுதியில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மனநல மருத்துவர் அல்லது உளவியலாளரையும் அணுகலாம்.
சிக்கலான நடத்தையை சரிசெய்ய ஒரு தொழில்முறை உளவியலாளரால் நமக்கு உதவ முடியும். மனச்சோர்வு அல்லது பதற்றம் போன்ற நடத்தைக்குக் காரணமான எந்தவொரு அடிப்படையையும் அவர்களால் கண்டறிய முடியும்.
அதைவிட, வருமுன் காப்பதே நல்லது. டிஜிட்டல் தொழில்நுட்பக் கருவிகளை அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்தி, அவற்றில் இருந்து முடிந்தவரை விலகியிருந்து, இயற்கை, சமூகம், சுற்றத்தாரோடு நேரத்தை செலவழிப்பதன் மூலம், மன அழுத்தம் என்ற ஒரு இருண்ட பக்கம் நம்மில் உருவாகாமல் காத்துக்கொள்ள முடியும். உடல் இயல்பாக இயங்க அதன் உறுப்புகளின் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல, மனம் சீராக இயங்க அதன் ஆரோக்கியமும் முக்கியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.