என்னை நம்பி வாருங்கள் !

""என் அப்பா அடிக்கடி சொல்ற ஒரு விஷயம்,""பிறந்தோம், வாழ்ந்தோம், செத்தோம் என்று இருக்கக் கூடாது.
என்னை நம்பி வாருங்கள் !
Updated on
2 min read

""என் அப்பா அடிக்கடி சொல்ற ஒரு விஷயம்,""பிறந்தோம், வாழ்ந்தோம், செத்தோம் என்று இருக்கக் கூடாது. ஏதாவது சாதிக்கணும்.'' அப்படி என் வாழ்க்கையில சாதிக்க இந்த இசையும், பாடல்களும் கை கொடுக்கும் என்று நம்பினேன். என் முழு கவனத்தையும் அதில் செலுத்தத் தொடங்கினேன். ஆரம்பத்தில் என் மீது  கானா பாட்டு ஸ்பெஷல் என்கிற முத்திரை விழுந்தது. இப்போது மெலடி பாடல்களும் என் அடையாளமாக மாறி இருக்கிறது. அப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துதான் ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் ஸ்ரீகாந்த் தேவா 100 படங்களை தன் இசையால் நிரப்பி அமர்ந்திருக்கிறார். மெலோடியில் இவரின் சமீபத்திய ஹிட் "ஆதார்' படத்தில் வரும் "தேன் மிட்டாய்... மாங்காய் துண்டு, நீதான் கண்ணம்மா....'

அப்பாவுக்கு கானா ஸ்பெஷல் என்ற பெயரும் உண்டு.... உங்களுக்கும் அப்படித்தான் இருந்ததது... ஏன் இப்போது மெலோடி பக்கம் திரும்பி இருக்கீங்க....

கானாவும் ஒரு கலை வடிவம்தான். வடசென்னையில கானா ரொம்பப் பிரபலம். பெரிய விஷயத்தை உரையாடல் மூலமாக கொண்டு போய் சேர்ப்பது கஷ்டம். ஆனால் அதோட மையக் கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மூன்று நிமிஷப் பாடலாக மக்களிடம்  சுலபமாக் கொண்டு போய்ச் சேர்க்கலாம். அதை முதன் முதலில் சினிமாவில் செய்தவர் என் அப்பா. 

தமிழுக்கு இலக்கணம் இருக்கிறது. கானா தமிழில்தான்  பாடுகிறோம். ஆனால் கானாவுக்குன்னு தனியாக எந்த இலக்கணமும் இல்லை. இரங்கல் கானா, புரட்சி கானா, நண்பர்களோட ஜாலியாக பாடும் சந்தோஷ கானான்னு இதுல பல வகைகள் இருக்கு... அதையெல்லாம் அப்பா சினிமாவுக்குள் கடத்தி வந்தார். ஆனால் அவரை அந்த வட்டத்துக்குள் மட்டுமே அடக்கி விட முடியாது. அதைத் தாண்டி மெல்லிசையில் அவர் எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார். ஆசை மாதிரி படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அப்படித்தான் நானும். எனக்கும் அந்த கானா முத்திரைத்தான் இருக்கிறது. அந்த முத்திரைதான் பல நல்ல படங்களை எனக்கு கொண்டு வந்து சேர்க்கவில்லை. நல்ல தளங்களை உருவாக்கி தரவில்லை. அதனால்தான் அதை மாற்ற விரும்புகிறேன். இசைக் கலைஞன் என்பவன் எல்லோருக்குமானவன். அதைத்தான் நான் பெற விரும்புகிறேன். 

"ஆதார்' பட பாடலும், பின்னணி இசையும்  தனி பிம்பத்தை உண்டாக்கி இருக்கிறது....

அந்தப் படத்தில் இருந்த உணர்வுகள்தான்  இதற்கு காரணம்.  உணர்வுகளை இதயத்துக்குள் கடத்துவதுதான் இசையின் வேலை. அது இந்தப் படத்தில் நன்றாகவே நடந்திருப்பதாக உணர்ந்தேன். அதில் இதுவரை சிக்காத எலைட் ரசிகர்களைப் பிடிகிறதுக்காகப் செய்தேன். ஒரு எளியவன்... தன் குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறான்... அவன் ஏற்கெனவே மனைவியை இழந்தவன்.. இந்த சூழலை கொண்டு வந்து தந்தார்கள். கவிஞர் யுரேகா நல்ல வரிகள் தந்தார். ""தேன் மிட்டாய்.... மாங்காய் துண்டு, நீதான் கண்ணம்மா....'' என ஆரம்பிக்கும் அந்தப் பாடல  பலராலும் விரும்பி கேட்கப்படுதாக சொன்னார்கள். மகிழ்ச்சி.  இசைக்கான ஜீவன் பொருந்தி வந்தது. அதைப் போலவே பின்னணி இசையும் நன்றாக வந்திருந்தது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆரம்பிக்கும் கதை. இடைவேளைக்குப் பின் தடதடத்து பயணிக்க வேண்டும். அதை உணர்ந்து அதற்கு பின்னணி இசை கொடுத்தேன்.  வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கு நன்றி.   மற்றபடி எதையும் சாதித்துவிட்டதான பெருமிதம் ஒரு சத  விகிதம்கூட என்னிடம் இல்லை. நான் ஏதோ பெரிய ஆள் என நினைக்கவில்லை. உள்ளத்துக்கும் உலகத்துக்கும் உண்மையாக வாழ்ந்தால் அதுதான் வெற்றி. நன்றி. ஜெயிப்போம்.

ரொம்பவே தன்னடக்கத்துடன் பேசுறீங்க...

என் உயரம் எனக்குத் தெரிவதுதான் இதற்கு காரணம்.  பெரிய படங்களில் இருந்து இதுதான் பட்ஜெட் செய்து தர முடியுமா சார்.. என வருபவர்கள் வரை எல்லோருக்கும் என் இசையை கொடுத்து விட்டேன். இதுதான் சம்பளம் என்று எந்த பிடிவாதமும் இல்லை. செய்கிற வேலையில் முழு திருப்தியுடன் இருக்கிறேன். என்னால் பத்து பேருக்கு நல்லது நடந்தால், அதை விட கொடுப்பினை இல்லை. "டபுள்ஸ்', "குத்து', "எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', "சிவகாசி', "பூலோகம்'.... இப்படி நூறு படங்களில் நிறைய படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செய்திருக்கிறேன்.

இசையமைப்பாளர் என்பதை விட, இந்த இடத்தில் இருக்கும் இசையமைப்பாளர் என்ற பெயரே முக்கியமானது. சிலர் கேட்ட இசையாகவே தருகிறாரே  என்று சிலர் யோசிக்கிறார்கள். இதனால் நான் இழந்த வாய்ப்புகள்தான் அதிகம். அதனால "நல்ல கதை என்றால் நான் செய்து தருகிறேன்" என்று நான் கத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது. இப்போது உதயநிதி ஸ்டாலினின் "கழகத்தலைவன்' படம் செய்கிறேன். வேறு மாதிரியான தளத்தில் உங்களை வந்தடையும்.  என்னை நம்பினால், இவர் கதைக்கு துணையாக இருப்பார்  என்று இயக்குநர்கள் நம்ப வேண்டும். இதுதான் அந்த இடத்துக்கு என்னை கொண்டு செல்லும் விஷயம். வேறு என்ன சொல்ல...!

அறைக்குள்ளேயே இசைப் பணியை முடித்து விடுவீர்களாமே...

தி. நகர் ஸ்டுடியோவில்தான் இசை உருவாகும். இயக்குநர் சூழ்நிலையைச் சொன்னதும் என்னால் உடனே இசையமைப்பை தொடங்கி விட மாட்டேன். கொஞ்சம் நேரம், காலம் எடுத்துக் கொண்டு யோசித்துதான் இசையமைப்பேன். பெரிய தாமதம் இருக்காது. சொல்லியே நேரத்தில் எல்லாவற்றையும் கொடுத்து விடுவேன்.  நமக்கு எல்லாமே இளையராஜா சார், அப்பா தேவா, ஏ.ஆர். ரஹ்மான் சார்... இப்படி நிறைய பேர். 

பறவைகள் தடயங்களே இல்லாமல் போய் விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இசையும், பாடல்களும். இசையின் எல்லா நுணுக்கங்களையும் இவர்கள் தொட்டு விட்டார்கள். அலைகடலும்  ஆழ்கடலும் அவர்கள் என்றான பின், கரைகளும், நுரைகளும் என்னவாகும். இருந்தாலும் அவர்கள் தொடாமல் விட்ட ட்யூன்களைப் பிடிக்க ரொம்பவே மெனக்கெட வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com