

""அரசியலை விட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது. நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி இரு நபர்களை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. அதே நேரத்தில் இப்போது எது தேவையோ, அதை அக்கறையாக முன் வைக்கிற படம்.'' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடித்து பரபர வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ். இயக்குநர் ராமின் மாணவர். இப்போது "பருந்தாகுது ஊர் குருவி' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
"ஊர் குருவி பருந்தாகாது...' என்பதுதான் வழக்கமானபழமொழி...
இங்கே ஒரு குருவி பருந்தாவதுதான் கதை. ஒருவன் திருடன், இன்னொருத்தர் சமூகத்தில் பெரும் புள்ளி. இருவரும் ஒரு அடர்ந்த வனத்துக்குள் சந்திக்கிறார்கள். இருவருக்கும் தனித்தனி பிரச்னைகள். திருடனுக்கு சின்ன பிரச்னை என்றால், அந்த பெரும் புள்ளிக்கோ இந்திய அளவில் பிரச்னை. இருவரும் என்ன செய்தார்கள். தப்பித்தார்களா... என்பதுதான் கதை. அதை ஆக்ஷன் அட்வென்சர் பாணியில் சீட் நூனிக்கு கொண்டு வருகிற விதமாக செய்து முடித்திருக்கிறேன். வாழ்க்கையில் சில பாடங்கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும். சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும். இங்கேயும் ஒரு இரு மனிதர்களை சூழல் மாற்றி மாற்றி வைக்கிறது. நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வரும் என்று சொல்லுவார்களே... அது போல. எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம். இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ரொம்ப ஆச்சரியம். அப்படி ஒரு இடம் இங்கே வந்து போகிறது. அதைக் கடக்கிற நேரத்தில் அந்த இருவருக்கும் வந்து போகிற அனுபவங்கள்தான் முழுப் படமும். இதை இப்படி ரொம்பவே சுலபமாக சொல்லி விட்டுப் போகலாம். ஆனால், இதில் வருகிற அழுத்தம் எல்லாத் திசைகளுக்கும் உங்களைக் கொண்டு போகும்.
எப்படி கை வந்து சேர்ந்தது இதன் ஆரம்பப்புள்ளி....
இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒருவனை, அவன் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்தாலே கதை. அவனோடு ஊர் வரைக்கும் தேடிப் போனால் அது களம். அப்படி நான் சந்தித்த சில மனிதர்களின் வாழ்க்கையும் இதில் உண்டு. அதே சமயம் இந்திய அளவில் நடந்த ஒரு அரசியல் சர்ச்சையையும் கோர்த்து திரைக்கதை செய்தேன். நம் வாழ்க்கையி நடந்த சம்பவத்தின் புனைவு, சினிமாவின் வியாபாரத்துக்கான சமரசங்கள் எல்லாமும் இந்த கதை. அதிகாரம் என்ற ஒன்று நம்மை எப்படி எல்லாம் துரத்தி அடிக்கிறது... நாம் ஒவ்வொருவரும் இந்த அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கை முழுக்க நமக்கே தெரியாமல் போராடித் தவிக்கிறோம். வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்துக் கொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதை என்று ஒரு வரையறைக்குள் நாம் எல்லோரும் வரலாம்.
விமர்சனம் அதிகமாக இருக்குமோ...
எல்லா இடங்களிலும் லஞ்சம், பொய், ஊழல் என மிடில் கிளாஸ் மாதவன் ஒருவர் தவறாமல் நம் தெரு முனை டீக்கடையில் கருத்துச் சொல்லுவார். ஆனால், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கம் நாம் நினைப்பது போல் இல்லை. பிளாக்கில் வாங்கி கேஸ் கனெக்ஷன் வைத்திருப்பது. ஆண்டு வருமானம் 40 ஆயிரம் என்று சொல்லி பொய் சான்றிதழ், சலுகைகளை அனுபவிக்கிறோம். இப்படி சூழ்ச்சியும் மாய மந்திரங்களும் நிரம்பி கிடக்கிற வாழ்க்கை இந்த சமூகத்துக்கு மட்டுமே உரித்தானது. இப்படி பல சலுகைகள் தன்னகத்தே இருந்தாலும், இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் சுக, துக்கங்களை மறந்து விட்டு ஓடுவதுதான் இங்கே காமெடி. ஆனால், பயங்கர காமெடியன்களாக சமூகத்தால் பார்க்கப்படுகிற எல்லோரும் காமெடியன்கள் அல்ல. அவர்கள் எல்லாம் காரியவாதிகள். சமூகம்தான் அவர்களை தவறாக புரிந்து வைத்திருக்கிறது. சாண் வயிற்றுக்காக திருடுகிறவர்களை விட, மக்களின் சேவகராக தன்னை நிலை நிறுத்தி திருடுகிறவர்கள் இங்கே நிறைய. அப்படிப்பட்ட திருடுகிறவர்களின் உலகத்தை எட்டிப் பார்ப்பதுதான் இந்தப் படம்.
நடிகர்கள் விஷயத்தில் இன்னும் பெரிதாக யோசித்திருக்கலாமோ....
இல்லை இதில் இருப்பவர்களும் தெரிந்த முகங்கள்தான். நல்ல களத்தை தேடிக் கொண்டிருப்பவர்கள். நிஷான் துரஷோ ஏற்கெனவே "பன்றிக்கு நன்றி சொல்லி' படத்தில் தன் முத்திரையை பதித்தவர். அடுத்து விவேக் பிரசன்னா எல்லோருக்கும் தெரிந்த முகம்தான். ஹீரோயினாக மும்பை மாடல் காயத்ரி அய்யரை கொண்டு வந்திருக்கிறேன். இ. ராமதாஸ் போன்றவர்கள் நல்ல குணச்சித்திரங்களில் இருக்கிறார்கள். "ஜிமிக்கி கம்மல்' பாடல் பாடி புகழ் அடைந்த ரெஞ்சித் உன்னி இந்தப் படத்துக்கு முதன் முதலாக இசையமைக்கிறார். மற்ற தொழில்நுட்பங்களில் நம்பிக்கையான கலைஞர்கள் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.