

""ஒரு சினிமா ரசிகனாக எனக்கு சார்லி சாப்லின், பாலுமகேந்திரா சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அமெரிக்க இயக்குநர் ஃப்ராங்க் காப்ரா என்னை ரொம்பப் பாதித்தவர். இரண்டாம் உலகப் போர் சமயம், உலகம் முழுக்கவே போர் அழுத்தம் மக்கள் மனதில் ஒருவித வெறுப்பை உண்டாக்கி இருந்த போது, தன் சினிமாக்களில் பிரியத்தையும் நேசத்தையும் நிரப்பிக் கொடுப்பார் ஃப்ராங்க். சார்லி சாப்லின், பாலுமகேந்திரா சார் படங்களிலும் நீங்கள் அந்த அழகை ரசிக்கலாம். நமக்குள் ஏதோ ஒரு சின்ன இலையை அசைக்கிறதுதான் ஒரு சினிமாவின் தாக்கமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சினிமா காட்ட ஆசைப்பட்டுதான் இதை எடுத்தேன். படிக்கிற புத்தகம் மாதிரி, பார்த்து வளர்ந்த சினிமா மாதிரி இதுவும் ரொம்பவே எளிமையானது. பெரிய திட்டம் எதுவும் இல்லை. இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம்.'' நம்பிக்கையாக பேசுகிறார் இயக்குநர் வினோத் இராஜேந்திரன். " இளமை எனும் பூங்காற்று' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
தலைப்பே வசீகரம்....
வரம்பு மீறிய காதல், காமம், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது.. இன்னும் இன்னப் பிற மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன. இது அது மாதிரி இல்லாமல், வேறொரு மீட்டொருவக்கத்தில் நான் எழுதிய கதை இது. கும்பகோணம் பக்கம் கிராமத்து வாழ்க்கை என் பூர்வீகம். இப்போது பெரு நகர வாழ்க்கை.
ஆனாலும், எப்போதைக்குமான மனசு அந்தப் பள்ளி வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு. ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறின வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது. வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது மாதிரி, முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம். மனித மனம் காட்டை மறந்து, வீட்டின் சூழலுக்குப் பழக்கப்பட்ட மிருகம் போல எப்போதும் ஒரு நிர்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது. மிருகம் மிருகமாக இருக்க இயலாமல் தடுப்பது மிருகத்தின் கோணத்தில் பெருந்துக்கம். எங்கேயாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து , உள் இழுத்து முழுவதுமாக புதைந்து போயிருந்த நினைவுகளை எல்லாம் தூர்வாரி வெளியே இழுத்துப் போட்டால் எப்படி இருக்கும். அப்படி ஒரு தாக்கத்தில் எழுந்த உணர்வுதான் படம். பரவசம் கொடுக்கும் பயணம், எளியவர்களின் எதிர்பார்ப்பு இல்லாத பிரியம்... இப்படித்தான் இருக்கும் இது.
எந்த மாதிரி திரை பாணி வடிவம்....
கடந்து போன காலங்கள்தான். காதல்தான். எப்பேர்பட்ட ஆன்மிக அனுபவம் அது. மலையின் முன் நிகழும் அற்புதம். காதலும் கூட ஆன்மிகத்தின் ஒரு வழிதான். காதல் மட்டும் அல்ல; எந்தத் தீவிரமான உணர்வும் ஆன்மிகத்துக்கான முதல் திறவுதான். ஷாஜகானைப் பற்றி எத்தனைக் கருத்துகள் உலவினாலும், நிரம்பி வழிந்த அவனுடைய காதல்தான் தாஜ்மஹால் என்ற இப்படி ஓர் அற்புதத்தை உருவாக்கி இருக்க முடியும். காதல், வாளைப் பறித்துவிட்டு... பூக்களைத் தருகிறது. காதல், ஒரு வீரனைக் கோழையாக்குகிறது... கோழையை வீரனாக்குகிறது. எப்போதும் காதல் முரணுக்குப் பிறந்த குழந்தைதான். கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தப் படம்.
உள்ளடக்க கதை பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாமே...
சூரியன் குளிர்ந்து போகும்வரை நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னைக் காதலிப்பேன்” என்று எப்படிக் காதலிக்க வேண்டும் எனக் கற்றுத்தந்தார் ஷேக்ஸ்பியர். அப்படித்தான் இந்த காதலும். ஒரு பெண்ணின் பார்வையில் காதலை சொல்ல வருகிறேன். அந்த பெண்ணுக்கு இரண்டு காதல். ஒன்று 90- களில் உள்ளுக்குள் இருந்த காதல். இன்னொன்று தற்கால காதல். கோகுல் சாண்டல் பவுடர், ரோஸ் கலர் ரிப்பன், மருதாணி காயும் விரல்கள், காற்றில் உருளும் கொத்து முடி, பித்த வெடிப்பு பாதம், ஈரம் ததும்பும் ஸ்பரிசங்கள்... இப்படி நிறைய விஷயங்களை உன்னிப்பாக கொண்டு வந்தோம். கதையைச் சுற்றுகிற மூன்று பேரும் இயல்பானவர்கள். இந்த மூன்று பேருக்குமான காதல், வாழ்க்கை சூழல் இதுதான் படம்.
கரோனா கால சவால்கள் புதுமுக இயக்குநர்களுக்கு எப்படி...
ஒரே மாதிரியான சினிமாக்கள் பார்த்து எல்லோருக்கும் ஒரு அலுப்பு இருக்கிறது. காமெடி, பேய் இதுதான் மாறி மாறி இருக்கிற ட்ரெண்ட். ஆனால் காதல் படங்களுக்கு எப்போதுமே ஒரு கூட்டம் உண்டு. கரோனா கால முடக்கத்திலும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். அதிரடியான ஹிட் மேஜிக் எல்லாம் நடந்திருக்கிறது. ரசிகர்களுக்கு நன்றி. வந்த கூட்டம் எல்லாம் நல்ல சினிமாக்களின் பின்னால் நிற்கிற கூட்டம். அப்படியான ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். அதன் பின் இந்தப் படத்தில் நிறைய பேர், எதார்த்த கதாபாத்திரங்கள் அபிலாஸ், முருகன் சக்திவேல், ப்ரணா என்று நல்ல டீம் நம்பிக்கையாக இருக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.